வஹியாய் வந்த வசந்தம்
(திருக்குர்ஆன் ஓர் அறிமுகம்)
தமிழ்மாமணி பொற்கிழிக் கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ்
இளையான்குடி – 630 702
சிவகெங்கை மாவட்டம்
அலைபேசி : 99763 72229
மின்னஞ்சல் : mudukulathur.com@gmail.com
ஏவல், விலக்கல்
எதுவென்று காட்டுகின்ற
காவல் ரஹ்மானின்
கலைஞானக் கண்ணாடி !
பொய்யின் வேர்களைப்
பொசுக்க வந்த பொறி நெருப்பு !
மெய்யின் கரை சேர்த்து
மீட்க வந்த ஓர் துடுப்பு !
வெகு நாளாய் மானிடர்க்கு
வெகுமானம் தர எண்ணி
ரஹ்மான் உவந்தளித்த
நல்லருமை ரஹ்மத்து !
இருள் வழிக்கோர் மணி விளக்கு
இறைமொழியின் சரத் தொகுப்பு !
அருள் வேந்த னல்லாஹ்வின்
ஆணைகளின் உயர்தொகுப்பு !
சுடுபாலை மடியிருந்தும்
சுரந்து வந்த அமுதூற்று
அடடாவோ… அல்குர்ஆன்
அல்லாஹ்வின் நிஃமத்து !
சகலர்க்கும் சாந்திதரும்
சன்மார்க்கப் பயிர்வித்து !
யுகங்களில் தொலைந்திட்ட
சுகங்களைக் கண்டெடுத்து
புயங்களில் சூட்ட வரும்
புன்னகைத் தோழமைதான் !
திருக்குர்ஆன் வேதம்
சிந்திப்பீர் மானிடரே !
மறைகளுக் கோர் மகுடமாய்
மாயிறையோன் அருளியது !
எப்படி வாழ்ந்தால்
ஏற்றமென்று மானிடர்க்கு
அப்படியோர் வழியில் நம்மை
அழைத்துச் செல்லுகின்ற
மதிநா பாராட்டும்
மாண்பான நட்புறவு !
இதுதான் திருமறையின்
இனிப்பான நல்லுறவு !
ஏகயிறை அல்லாஹ்
எழுதி நமக்கனுப்பி வைத்த
மாகவிதைக் கடிதமிது !
மாண்புகளின் சுரங்கமிது !
வள்ளல்நபி நாதருக்கு
வாய்மைநெறி சீலருக்கு
அன்னியள்ளி இறையளித்த
அருள் நிதியாம்பொக்கிஷமே !
அரபியிலே பூத்தாலும்
அகிலத்தை ஆள்வதிது !
உறவுகளின் நெறியுரைக்கும்
உன்னத வேதமிது !
உம்மி நபியை
உலகோர்க்கு ரஸூலாய்
செம்மையாய் காணவைத்த
திருவேதம் புர்கானே !
உலகப் பொதுமறையாய்,
உள்ளத்தில் வாழ்மணியாய்,
நிலவும் திருமறைதான்
நேர்வழியின் கைகாட்டி !
எல்லோரும் கற்றிடலாம் !
எல்லோரும் உணர்ந்திடலாம் !
அல்லாஹ்வின் சுவனமிதில்
ஆனந்தம் கண்டிடலாம் !
( கவிஞர் மு. சண்முகம் ஆக இருந்து
கவிஞர் மு. ஹிதாயத்துலாஹ்வாகியவர் )