இறைவனுக்கே புகழ் அனைத்தும்
26.01.2011 புதன் கிழமையன்று நடைபெற்ற திருச்சி ஜமால் முகம்மது
கல்லூரியின் முன்னாள் மாணவர் கழகத்தின்
அறுபதாண்டுப் பெருவிழாவில் கல்லூரியை வாழ்த்தி பாராட்டி
வாசிக்கப்பட்ட
வாழ்த்துமடல் !
அல்ஹம்துலில்லாஹ் !
இன்றென்ன … ஜமாலில்… !
எல்லோரும் புன்னகை
உடுத்தியிருக்கிறார்களே….!
இன்றென்ன …. திருவிழா…?
எல்லோருடைய இதயத்திலும்
உற்சாகம் …. வழிகிறதே….!
அந்த வானத்திற்கு
என்ன செய்தி போனது…?
அதுவும் …
தாகமாய் வந்து இங்கே!
வரலாறு எழுதுவோர் உண்டு !
வரலாறு
படைப்பவரும் உண்டு!
அந்த வகையில்….
திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி
வரலாறு படைக்கும் வரிசையில் உள்ளது
இது மட்டுமா…?
தன்னோடு
தன் மாணவப் பூக்களையும்
வரலாறு படைக்க வைத்திருக்கிறது!
உலகம் முழுவதும் பரவி
மணம் பரப்பும்
ஜமால் பூக்களின்
சங்கமத் திருவிழா இன்று!
தனது
வேர்களுக்கு நீர்பாய்ச்சியவர்களையும்
தன் வெற்றிக்குப்
பாதை காட்டியவர்களையும்
மறவாமல் வரவழைத்து
அவர்களுக்கு
விருதும் வழங்கிக் கெளரவிக்கும்
விழா இன்று!
ஆம்!
திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியின்
முன்னாள் மாணவர் கழகத்தின்
அறுபதாண்டுப் பெருவிழா!
அருமையான திருவிழா!
யார் மடியானாலும்….
தாய்மடியாகுமா..?
இங்கே படித்து பட்டம் பெற்று
வாழ்க்கையை ஜெயித்தவர்கள் கூடும்
வசந்த விழா இன்று!
இந்த தாய் ஊட்டிய
இன்னொரு தாய்ப்பாலால் (கல்வி) தான்
மாணவர் சமுதாயம்
தலை நிமிர்ந்து நிற்கிறதென்றால் ….
மிகையில்லை!
பேராசிரியராய் பெரும்புலவராய்…
பெருந்தொழில் வல்லுநர்களாய்
பத்திரிகைத் தொடர்பாளராய்
இண்டர்நெட் இயக்குநர்களாய்
இன்னும் பல்வேறு துறைகளில்
நிபுணர்களாய் விளங்குகின்றார்கள் !
இதோ …
இங்கே படித்து பட்டம் பெற்று
வேலூர் நாடாளுமன்றத் தொகுதி
உறுப்பினராய்
சரிகைக்குரிய நம்
சகோதரர் ஜனாப். எம். அப்துல் ரஹ்மான் சாஹிப்
நம்முன்னே …. ‘பிறை’ மேடையில்
உயர்ந்து நிற்கிறார்!
இந்தப் பரவசம்
வள்ளுவன் சொன்ன மாதிரி
தன் மகனைச் சான்றோராய் பார்க்கும்
ஒரு தாயின் பரவசம் என்பேன் !
கலைகளில் உயர்ந்தது
இந்தியா !
பண்பாட்டில் உயர்ந்தது
இந்தியா ! அது போல
கல்லூரிகளில் நம்
திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி
உயர்ந்தது சிறந்தததுதென
நெஞ்சுயர்த்திக் கூறலாம் !
இந்த கல்லூரியின்
சிறப்புக்களை …. சொல்லிக் கொண்டே
இருக்கலாம் !
இஸ்லாமிய இலக்கியக்கழகத்தின்
முதம் மாநாடு ….
இங்கே தான் 1973 மே 12,13 ல் தொடங்கி
நடந்துள்ளது!
திருச்சி திருப்பம் என்று
அறிஞர்கள் சொன்னது போல
திசைகளைத் திரும்ப வைத்த
அதிசயம்… இங்கிருந்துதான் தொடங்கியது !
இப்போது
இஸ்லாமிய இலக்கிய ஆய்வு மையமும்
இங்கே செயல் படுகிறது !
திருச்சியிலிருந்து தான் நர்கீஸ் எனும் –
பெண்கள் மாத இதழ்
வெளிவந்து கொண்டிருக்கிறது !
சமுதாயம் தலைநிமிர
இந்த கல்லூரியில் உருவாக்கிய
மர்ஹூம் வள்ளல் ஜமால் முகம்மது
அவர்களையும் அவர்களுக்கு
தோழமையாய் அமைந்து நிலம் தந்த
மர்ஹூம் காஜாமியான் ராவுத்தர்
இன்னும் பல பெரியோர்களையும்
நன்றியோடு நினைத்துப் பார்க்கிறோம் !
இதோடு கல்லூரியின் நிர்வாகக் குழு
தாளாளர் சங்கைக் குரிய
அப்துல் கபூர் சாஹீப்
முதல்வர் டாக்டர் ஷேக் முஹம்மது
பேராசிரியர்கள்
அலுவலர்கள் அத்தனை பேர்களையும்
நன்றி சொல்லி பாராட்டுகிறோம் !
அவர்கள் உழைத்த வியர்வை பாசனத்தால்தான்
இந்த கல்லூரி உயர்ந்திருக்கிறது என சொல்லலாம் !
இந்தக் கல்லூரியின் பழைய மாணவர் கழக
முன்னாள், இந்நாள் நிர்வாகிகளையும்
நன்றி சொல்லி பாராட்டுகிறோம் !
தன்னுடைய நேரத்திலும் தமிழுக்காய்
கொஞ்சம் ஒதுக்குவது போல
தன்னுடைய ஹலாலான வருவாயிலும்
இந்தக் கல்லூரியின் வளர்ச்சிக்கு
உதவுகின்ற …… அந்த
நேசக் கரங்களை நாம் மறந்து விட முடியாது !
அவர்கள் நம் நெஞ்சில் நிறைந்த
நேச முகவரியாளர்கள் !
ஆக ….
இந்த இனிய வேளையில் எல்லோருக்கும்
நன்றி சொல்லி மகிழ்கிறோம் !
எல்லோரையும் பாராட்டி மகிழ்கிறோம் !
உங்கள் எல்லோருக்காகவும்
வல்ல அல்லாஹ் (ஜல்) விடத்தில்
வளம் வேண்டி நலம் வேண்டி
துஆச் செய்கின்றோம் ….!
ஏனெனில் கிருபையுடையவன்
அல்லாஹ் ஒருவன் அல்லவா !
கீர்த்தியுடையவனும் அவன் தானே !
அவனே நமக்கு போதுமானவன் என்று கூறி
பாராட்டி மகிழ்கிறோம் !
வாழ்க ஜமால் ! வளர்க அதன் பிள்ளைகள் !
ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன் !
நன்றி
இவண்,
முன்னாள் மாணவர் கழகத்தார்
ஜமால் முஹம்மது கல்லூரி
திருச்சி
ஆக்கம் :
பொற்கிழி கவிஞர் மு. சண்முகம்
ஆக இருந்து
தற்போதைய
கவிஞர் மு ஹிதாயத்துல்லாஹ்
இளையான்குடி