ஏழையாக கடலுக்குச்சென்ற மீனவர் கோடீஸ்வரராக கரை திரும்பினார்
ஜாம்நகர்: குஜராத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவருக்கு கடலில் மீன் பிடித்த போது, விலை உயர்ந்த மீன்கள் சிக்கியதால், கோடீஸ்வரராகியுள்ளார்.
குஜராத் மாநிலம் ஜாம்நகரைச் சேர்ந்த மீனவர் ஹசன் வாகர். மத்திய தரமான மீன் பிடி படகு ஒன்றை வைத்து மீன் பிடித்து வந்த இவரின் வாழ்க்கை என்னவோ போராட்டமாகவே இருந்தது. அதனால், இவரின் குடும்பம் வறுமையில் வாடியது. ஆனால், இப்போது அதிர்ஷ்ட தேவதையின் கருணைப் பார்வைக்கு ஆளாகியுள்ளார்.
சமீபத்தில் கடலில் மீன் பிடிக்கச் சென்ற இவருக்கு மிக உயரிய விலை கொண்ட 380 கோல் ரக மீன்கள் சிக்கின. மீன்களிலேயே மிக உயரிய ரகமாக, இந்த மீன்கள்தான் கருதப்படுகின்றன. மலேசியா மற்றும் சிங்கப்பூரில் இந்த வகை மீன்களுக்கு நல்ல கிராக்கியுண்டு. இந்த கோல் மீனின், இதயப் பகுதி, “கடல் தங்கம்’ என, அழைக்கப்படுகிறது. அதில், ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. பல வகையான மருந்துக்கள் தயாரிக்க, இது பயன்படும் என்று கூறப்படுகிறது.
இந்த மீனின் துடுப்புபோன்ற பகுதியை, மருந்து தயாரிப்பு கம்பெனிகள் அதிக அளவில் பயன்படுத்துகின்றனவாம். ஒயினை சுத்தப்படுத்தவும் இது பயன்படுமாம். இந்த வகை மீன்கள் சந்தையில், கிலோ ஒன்றுக்கு 450 முதல் 600 ரூபாய் வரை விற்கப்படுகின்றன. ஒரு கோல் மீன் 15 முதல் 20 கிலோ எடை இருக்கும். ஹசன் வாகருக்கு 380 மீன்கள் சிக்கியதால், அதை தனது படகில் மட்டும் வைத்து கொண்டு வர முடியாது என்பதால், உறவினர்கள் இருவரின் படகுகளையும் வரவழைத்து கரைக்கு கொண்டு வந்து சேர்த்தார். இந்த மீன்களை விற்றதில், அவருக்கு ரூபாய் 80 லட்சத்திற்கு மேல் கிடைத்துள்ளது. ஏழையாக கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றவர், கோடீஸ்வரராக கரை திரும்பியுள்ளார் என, ஹசன் வாகரை அனைவரும் பாராட்டுகின்றனர்.