துபாய் : துபாயில் உலக நகைச்சுவையாளர் மன்ற ( ஹூமர் கிளப் இண்டெர்நேசனல்) துபாய் கிளையின் ஏப்ரல் மாதந்திர கூட்டம் மற்றும் நந்தன வருட தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் ஏப்ரல் மாதம் 20ந் தேதி மாலை 6 மணிக்கு அல் கிசைஸ் ஆப்பிள் இண்டெர்நேசனல் ஸ்கூலில் வைத்து நடைபெற்றது.
கூட்டத்திற்கு வந்தவர்களை சங்கத்தின் தலைவர் எம். முகைதீன் பிச்சை வரவேற்று பேசியதோடு, ஹூமர் கிளப் ஒரு பேச்சு பயிலரங்கமாக செயல்பட்டு வருகிறது எனவும், மேடை ஏறி பேச நினைப்பவர்களுக்கு என்றும் வாய்ப்பளிக்க காத்து இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
சிறப்பு விருந்தினராக பன்னூலாசிரியர் கவிஞர் ஏம்பல். தஜம்முல் முஹம்மது கலந்து கொண்டு வாழ்வில் நகைசுவையின் அவசியத்தை அவருக்கே உரிய பாணியில் சிறப்புரை ஆற்றினார். வாய் விட்டு மல்ல மனம் விட்டும் மக்கள் அனைவரும் சிரிக்க வேண்டும் எனவும் தனது உரையில் குறிப்பிட்டார்.
அதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர் நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
மேலும் துபை கிரசண்ட் பள்ளி முதல்வர் கலிஃபுல்லா, சேஷாத்திரி, அஹமது, பாவை நியாஸ் மற்றும் தினகரன் ஆகியோர் தங்களின் நகைச்சுவை பேச்சால் அரங்கினை அதிர வைத்தார்கள்.
செல்வி. சௌம்யா மற்றும் காதர் ஆகியோர் சினிமா பாடல்களை பாடி வந்தவர்களை மகிழ்வித்தார்கள். ஏராளமான சிறுவர் சிறுமிகளும் கலந்து கொண்டு நகைச்சுவை துணுக்குகளை சொல்லி பார்வையாளர்களை சிரிக்க வைத்து, தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.
கூட்ட நிகழ்ச்சிகள் அனைத்தையும் திரு. குணா அவர்கள் தொகுத்து வழங்கினார். அவர் தனது பேச்சில் நகைச்சுவை என்பது ஒரு ‘சர்வரோக நிவாரணி’ என குறிப்பிடார்.
விழா முடிவில் வருகை தந்த அனைவருக்கும் சங்கத்தின் உபதலைவர். இத்ரீஸ் நன்றி தெரிவித்து பேசினார்.
கூட்டத்தின் அனைத்து ஏற்பாடுகளையும் சங்கத்தின் செயலாளர். கமலக்கண்ணன், உதவிச்செயலாளர் கான் முகம்மது, பொருளாளர் சுல்தான் மற்றும் அன்சாரி ஆகியோர் செய்திருந்தார்கள்.