சிங்கப்பூரில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் இலவச தொழில் முனைப்பு கருத்தரங்கு
சிங்கப்பூர் : திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை), சென்ற ஞாயிற்றுக்கிழமை 22-04-2012 அன்று, காலை மணி 10 முதல் பிற்பகல் 1 மணி வரை, “சிங்கப்பூரில் சொந்தத்தொழில் துவங்குவது எப்படி?” என்ற தலைப்பில் பொதுமக்களுக்கான இலவச தொழில் முனைப்பு கருத்தரங்கு ஒன்றை, பீட்டி சாலையில் அமைந்துள்ள சிண்டா தலைமையகம் அரங்கத்தில் மிகச்சிறப்பாக நடத்தியது.
சிங்கப்பூர் இந்திய வர்த்தகத் தொழிற்சபையின் தலைவரும், வர்த்தக ஆலோசகரும் கணக்காய்வாளருமான திரு R நாராயணமோகன், இக்கருத்தரங்கை மிகச்சிறப்பாக நடத்தினார். லிட்டில் இந்திய வர்த்தகர் மற்றும் மரபுடைமைச் சங்கத்தின் தலைவர், தொழிலதிபர் திரு ராஜகுமார் சந்திரா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தன் தொழில் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். இக்கருத்தரங்கை நிக்சன் செல்வராஜ் துவங்கி வைத்தார். அப்துல் நஜிர் அறிவிப்புகள் செய்ய, நினைவுப்பரிசுகளை வழங்கினார் சங்கத்தின் பொருளாளர் ஹிதாயதுல்லா. இச்சங்கத்தின் உறுப்பினர்களும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்ட இக்கருத்தரங்கு, தொழில் முனைப்பு பற்றிய விழிப்புணர்வையும், பயனுள்ள தகவல்களையும் பகிர்ந்து கொண்ட அரிய நிகழ்வாக அமைந்திருந்தது. நிறைவாக, சங்கத்தின் துணைப் பொருளாளர் கலந்தர் மொஹிதீன் நன்றி கூறினார்.
******
செய்தி: முஹிய்யத்தீன் அப்துல் காதர்
தலைவர், ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம்