உயிரும் மெய்யும்
கலந்திருக்கும்
உன் புன்னகை மொழி …!
இசைக்கருவிகள்
மழலை ஒலி முன்னே
மண்டியிடுகின்றன!
மலர்கள்
இதழ்களை விரிக்கின்றன
உன் சுவாசத்தை
அவைகளின் வாசமாக்கி
வசப்படுத்திக் கொள்ள..!
அல்லும் பகலும்
அழகூட்டும் உன் விழிகளால்
விண்மீன்கள் வெட்கித்துத்
தோல்வியை ஒப்புக்கொள்கின்றன..!
கருவறையின்
கதகதப்பை உன்னிடம்
காற்றும் கடன் கேட்கும்
விஞ்சும் பட்டு மேனியைக்
கொஞ்சம் தொட்டுப் பார்க்கக்
கெஞ்சும் மலர்த்தோட்ட்ம்!
ப்ரசவத்தில் கதறினாள்
உன் தாய்
நீ பிறந்ததும் அவள்மீது
பட்ட உன் பார்வையால்
பட்டெனப் புன்னகைச் சிதறினாள்
தாயின் மயக்கம் தீர்த்த
சேயே, மருத்தவச்சி நீயே!
துன்பத்திற்குப் பின்னர்
இன்பம் எனும் தத்துவம்
புரிய வைத்த புத்தகம் நீ!
அற்புதங்கள் காட்டும்
இறைவனின் பேரற்புதம் நீ!
உன் புன்னகை இதழ்களில்
தேன் உண்ணத் துடிக்கின்றன
வையகத்தின் வண்ணத்துப் பூச்சிகள்!
அம்மா அழகென்றால்
நீ “அம்மா” என்றழைப்பதில்
அழகும் அழகு பெறுகின்றது;
தமிழும் அழகு பெறுகின்றது
—
”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பிறப்பிடம்)அபுதபி(இருப்பிடம்) எனது வலைப்பூத் தோட்டம் http://www.kalaamkathir.blogspot.com மின்னஞ்சல் முகவரி: kalamkader2@gmail.com shaickkalam@yahoo.com kalaamkathir7@gmail.com அலை பேசி: 00971-50-8351499