மனக்கேணியின்
வற்றாத ஊற்று
உயிர்க் கயிற்றால்
உணர்வு வாளியைக் கட்டி
கண்களாம் குடங்களில் ஊற்று
கண்ணீராகும் அன்பு ஊற்று
அள்ளிக் கொடுத்தால்
அளவின்றித் திருப்பிக்
கிடைக்கும் சூட்சமம்
பக்தி, பாசம், நட்பு, காதல்
பற்பல கிளைகள் கொண்ட
அற்புத மரத்தின் ஆணிவேர்
பூமிச் சுற்றவும்
பூமியைச் சுற்றியும்
பூர்வீக அச்சாணி
அரசனும்
அடிமையாவான்
கிழவனும்
மழலையாவார்
தட்டிக் கேட்கும் அதிகாரம்;
எட்ட முடியாத தூரம்
தட்டிக் கொடுக்கும்
அன்புப் பெருக்கால்
எட்ட முடியும் நெருக்கம்
பிள்ளைகளின் கிறுக்கல்களை
பிழைகளைப் பொறுக்கையிலே
இழையோடும் அன்பால்
அழைக்கப்படுவர் பின்னர்
ஓவியனாக; இன்றேல்
பாவியாக
அன்பும் இசையும்
என்பும் அசைக்கும்
உருவமிலா உணர்வு
ஏழு ஸ்வரங்கட்குள்
இசையும் அடங்கும்
வாழும் வரம்புக்குள்
விசையாய் அன்பு அடங்கும்
அடிமைப்படுத்தும் முத்தம்
அன்பு இசையின் ச்ப்தம்;
சப்தத்தின் இசைகளைப் போல
முத்தத்தின் வகைகளும் பல
புன்னகைக் கீற்று
அன்பென்னும் காற்று
அணைத்தல் இடியுடன்
பாச மேகங்களைக் கூட்டும்
நேச முத்த மழைக் கொட்டும்
அன்பின் தூது
முத்த மடல்
அனுப்பி வைக்க
ஏங்கும் உடல்
அடைக்கின்றத் தாழ்களின்றித் திறந்த உள்ளம்
அதனுள்ளே பொங்குகின்ற அன்பு வெள்ளம்
தடையின்றி வெளியாகும் அன்பு ஊற்று
தாகமெலாம் தீர்ந்திடவே அருந்திப் போற்று
படைத்தவனின் அன்பினிலே நூறில் ஒன்றே
படைப்பினங்கள் வைக்கின்ற அன்பு என்றே
கிடைத்திட்ட வாய்ப்பான வாழ்வை யோசி
கிளைகளையும் கேண்மையையும் அன்பால் நேசி
“கவியன்பன்” கலாம்
—
”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பிறப்பிடம்)
அபுதபி(இருப்பிடம்)
எனது வலைப்பூத் தோட்டம் http://www.kalaamkathir.blogspot.com
மின்னஞ்சல் முகவரி: kalamkader2@gmail.com
அலை பேசி: 00971-50-8351499