நூல்: ஆண்-பெண் தொடர்பாடல் – சில இஸ்லாமிய சட்ட வரம்புகள்
ஆசிரியர்: டாக்டர் யூசுஃப் அல்-கர்ளாவி
பக்.56
விலை: ரூ.25
வெளியீடு: மெல்லினம், சென்னை.
+91 9003280518 (சென்னை), +91 9003280536 (மதுரை)
ஆண்-பெண் தொடர்பாடல் என்பது சமூக வாழ்வின் இயல்பானதொரு அம்சமாகும். இது தொடர்பிலான இஸ்லாமிய வழிகாட்டுதல் நடுநிலை கொண்டதாகவும் யதார்த்தமானதாகவும் அமைந்துள்ளது. எனினும், ஆண்-பெண் தொடர்பாடல் விடயத்தில் முஸ்லிம் சமூகத்தில் இன்று நிலவும் நிலைமையைக் காணும் ஒருவர், ஆண்களைக் காட்டிலும் பெண்கள் மீது தேவையற்ற அதீதக் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டிருப்பாதான மனப்பதிவையே பெறுவார். எல்லா மதங்களையும் போன்றே இஸ்லாமும் பெண்களின் மீது ஏராளமான கட்டுப்பாடுகளை விதிக்கிறது; தனது ஒழுக்கவியல் கட்டுமானம் முழுவதையும் பெண்ணை-குறிப்பாக பெண்ணுடலை-சுற்றியே நிர்மாணித்திருக்கிறது என்பதாக பெண்ணியவாதிகள் வாதிடுகின்றனர். இறைத்தூதரின் மரணத்திற்குப் பிறகு பெண்களின் சமூக வகிபாகம் படிப்படியாக மட்டுப்படுத்தப்பட்டு வந்திருக்கிறது என்பதில் உண்மை இல்லாமல் இல்லை.
இது தொடர்பாக துவக்கத்தில் நல்லெண்ணம் கொண்டு-சிலபோது தற்காலிக ரீதியில்-பரிந்துரைக்கப்பட்டு, பின்னர் மீறவியலாத சமூக விதிகளாக இறுகிப்போன பல்வேறு நியமங்களையும் இன்று நம்மால் அவதானிக்க முடிகிறது. எனினும், அவற்றை இஸ்லாத்தின் மூலாதாரங்களைக் கொண்டு நிறுவ முடியாது என்பதே இங்கு கவனிக்கத்தக்கது. பொதுவாக மற்ற விடயங்களில் பரந்த அறிவும் திறந்த மனமும் கொண்ட பலரும் கூட, பெண்கள் தொடர்பான இஸ்லாமியப் பார்வை என்று வரும்போது மட்டும் கேள்வியேதுமின்றி வசதியாக மரபார்ந்த பார்வைகளையே முன்தெரிவு செய்கின்றனர்.இவற்றுக்கான தர்க்க நியாயங்களாக கூறப்படும் பெரும்பாலானவற்றை, நாகரிக வளர்ச்சியுற்ற எந்தவொரு சமூகமும் ஏற்காது, எளிதில் நிராகரித்துவிடும்.
‘பெண்கள் ஒரு பெரும் சோதனை’, ‘ஆண்களைப் பொருத்தவரை மிகக் கூடுதலாகத் தீங்கு தரும் சோதனையாக பெண்களே உள்ளார்கள்’ போன்ற வாதங்களின் பொருளென்ன? பெண்ணின் குரல் மறைக்கப்பட வேண்டிய ஒன்று என்பது உண்மையா? ஓர் ஆண் பெண்ணைப் பார்ப்பது, பெண் ஆணைப் பார்ப்பது பற்றி இஸ்லாத்தின் நிலைப்பாடு என்ன? ஆண்கள் பெண்களுக்கு ஸலாம் சொல்லலாமா? மஹரமில்லாத ஒரு நோயாளியான ஆணை ஒரு பெண் நோய் விசாரிக்கச் செல்லலாமா? அவ்வாறே ஓர் ஆண் நோயாளியான பெண்ணை பார்க்கச் செல்லலாமா? ஒரு பெண் வீட்டுக்கு வெளியே தொழில் செய்வது குறித்து இஸ்லாத்தின் நிலைப்பாடு என்ன? அது ஆகுமாயின் இஸ்லாம் அதற்கு விதிக்கும் கட்டுப்பாடுகள் யாவை?
இவை போன்ற கேள்விகளும் அவற்றுக்கான பதில்களுமே இந்நூலில் அடங்கியுள்ளன. மனிதகுலம் முழுமையும் நீதமான ஓர் அமைப்பின் கீழ் வாழவேண்டும் எனும் இலட்சியத்தை முன்னிறுத்தும் இறைமார்க்கம், தன்னை ஏற்றிருக்கும் பெண்கள் மீது மட்டும் நியாயப்படுத்தவியலாத விதிமுறைகளை சுமத்தியிருக்கும் என்று எண்ணத் தலைப்படுவது ஓர் தன்முரணாகும். நம்மில் பாதிப் பேரான பெண்களின் உரிமைகளை நாமே நசுக்கிக் கொண்டு, உலகில் ஒடுக்கப்படுவோரின் மீட்சிக்கான குரலை நம்மால் எவ்வாறு ஒலிக்க முடியும்? அந்தக் கரிசனையின் அடியாகவே இந்நூல் வெளிக்கொணரப்பட்டிருக்கிறது.
இஸ்லாமிய மூலாதாரங்களை மீள்அணுகி, தற்போது மேலோங்கி இருக்கும் கற்பிதங்களையும் நடைமுறைகளையும் அவற்றுடன் உரசிப் பார்த்து, அநாவசியமாகக் கூட்டப்பட்டிருக்கும் மேலதிகக் கட்டுப்பாடுகளை தளர்த்தும் விதமாக ஃபத்வாக்கள் வழங்கப்படும் போதெல்லாம் மனோஇச்சைக்கு ஏற்றவாறு மார்க்கம் வளைக்கப்படுகிறது என்பதான குற்றச்சாட்டு வீசப்படுவதைக் காணமுடிகிறது. இறைச்சட்டமான ஷரீஆவின்நோக்கம் பற்றிய புரிதலின்மையில் இருந்தே இவ்விதமான வாதங்கள் எழுகின்றன. இலகுபடுத்துவதே ஷரீஆவின்நோக்கமாகும். இதன் பொருள், இலகுபடுத்தல் அல்லது மனிதநலன் என்ற பெயரில் ஆதாரமற்ற அல்லது பலவீனமான ஆதாரத்தைக் கொண்ட கருத்தைச் சொல்வதல்ல. இந்நூலில் தரப்பட்டிருக்கும் ஃபத்வாக்களில் அதை ஒருபோதும் காணமுடியாது.
மேற்கூறப்பட்ட விஷயங்களிலும் அவை தொடர்பான இன்ன பிற விஷயங்களிலும் தீவிர நிலைப்பாட்டை மேற்கொள்பவர்கள், இறைச்சட்டத்தை அச்சுபிசகாமல் பின்பற்றி தமது இரட்சகனைத் திருப்திப்படுத்த வேண்டும் என்ற நன்னோக்கில் இவற்றை மேற்கொண்ட போதிலும் அவை இஸ்லாத்தின் சமூக நீதி நோக்குடன் உடன்படுபவையாக இல்லை என்பதை மனதில் இருத்த வேண்டும். மெல்லினம் ஏற்கனவே வெளியிட்டிருக்கும்பள்ளிவாசலில் பெண்கள்:பால் வேற்றுமை பற்றிய ஒரு வரலாற்று நோக்கு மற்றும் நாளைய முஸ்லிம் பெண் ஆகிய இரு நூல்களின் செய்தியை தற்போதைய நூல் மீள்வலியுறுத்துவதாக அமைகிறது.
இவ்விஷயத்தில் முஸ்லிம் சமூகம் எத்துணை தூரம் முன்முடிவுகளைப் புறந்தள்ளிவிட்டு, உண்மை உள்ளத்துடன் காத்திரமானதொரு மீளாய்வை மேற்கொள்ளத் தயாராக இருக்கிறது என்பதைப் பொறுத்தும்; அந்த ஆய்வுகளின் அடைவுகளின் அடிப்படையில் தனது நடத்தையை மாற்றியமைத்துக் கொள்ள அது எந்தளவு தயாராக இருக்கிறது என்பதைப் பொறுத்தும்; இறைவனின் பிரதிநிதி (கலீஃபா) எனும் பாத்திரத்தை பெண்களும் ஏற்று நிறைவேற்றச் சாதகமான சமூகச் சூழலை உருவாக்குவதில் அது எத்துணை தூரம் வெற்றி பெறுகிறது என்பதைப் பொறுத்தும் தான்உம்மத்தின் எதிர்காலம் அமையப் போகிறது. ஏனெனில், இது சமூகத்தின் ஒட்டுமொத்த ஆற்றலில் அரைவாசி ஆற்றலை அது இறைவன் காட்டித் தந்த வழியில் வினைத்திறன் மிக்க முறையில் பயன்படுத்திக் கொள்ளப் போகிறதா அல்லது தானே தன் மீது சுமத்திக் கொண்ட அடிப்படையற்ற மரபுகளை இறுகப்பற்றிக் கிடப்பதன் மூலம் அந்த ஆற்றலை வீணடிக்கப் போகிறதா என்பதுடன் சம்மந்தப்பட்டதாகும்.
– மெல்லினம், சென்னை