இளமையே கேள் !

இலக்கியம் இஸ்லாமியக் கட்டுரைகள்


மவ்லவீ ஹெச். அப்துர் ரஹ்மான் பாகவி எம்.ஏ.

”அந்த இளைஞர்கள் குகையினுள் தஞ்சம் புகுந்த போது அவர்கள் எங்கள் இறைவா ! நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக ! இன்னும் நீ எங்களுக்காக எங்கள் காரியத்தை சீர்திருத்தித் தருவாயாக ! என்று கூறினார்கள்”.

அல்குர்ஆன் (18 :10)

கி.பி.250ல் ரோம் நாட்டின் ஒரு பகுதியில் ஓரிறைக் கொள்கைபடி வாழ்வதற்கு சிலை வணங்கிகளை விட்டும் ஒதுங்கிய சில இளைஞர்களைப் பற்றி குகைவாசிகள் என இறைவன் அடையாளமிட்டுக் காட்டுகிறான்.

இவ்விளைஞர்கள் வாழ்ந்த காலத்து மக்களும், அரசனும் குஃப்ரில் இருந்தார்கள் என்பதும் சில இளைஞர்கள் அம்மக்களின் சிலை வணக்கத்திற்கு முரணாக இருந்ததை அறிந்த அந்நாட்டு மன்னன் அவ்விளைஞர்களை எச்சரித்து காலக்கெடு விதித்தான் என்பதும், இதன் காரணத்தாலேயே அந்த வாலிபர்கள் பாதுகாப்புக்கு ஒரு குகையை தேர்ந்தெடுத்து தஞ்சம் புகுந்தார்கள் என்பதும் ஏகோபித்த விரிவுரையாளர்களின் கூற்றாகும்.

தங்களை குஃப்ரைவிட்டும் பாதுகாத்து ஈமானோடு வாழும் நோக்கோடு அக்குகையில் நுழைந்தவர்கள் 300 வருட கால சலனமற்ற உறக்கத்திற்கு பின் கி.பி. 550 ல் இறைவன் அவர்களுக்கு விழிப்பை தந்தான் என்ற செய்தியும் குர்ஆன் விரிவுரைகளில் காணக்கிடைக்கிறது.

குர்ஆனில் அல்லாஹுதஆலா இதுபோன்ற நிகழ்வுகளை மனித சமுதாயம் படிப்பினை பெறும் முகமாகவே கூறிக்காட்டுவான். அது போன்றே இந்த குகைவாசிகளின் வரலாற்றிலும் இளைஞர் சமுதாயத்துக்கு பின்பற்றத் தகுந்த பல நல்லுபதேசங்கள் கிடைக்கவே செய்கின்றன.

இளமைப்பருவம் :-

இளமை என்பது இறைவனால் வழங்கப்பட்ட அரும் பொக்கிஷமாகும். அவ்விளமையை முதுமை வருவதற்கு முன்பே சரியான வழியில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற கருத்தை போதிக்கும் நபி மொழியை நாம் கேட்டிருக்கலாம்.

மனிதனுடைய பருவங்களில் இளமைப்பருவம் மிகவும் முக்கியமான கட்டம் என்பதும், இப்பருவத்தில் வரம்பு கடந்தவர் முதுமையில் சொல்ல முடியாத கைசேதத்துக்குரியவராகிவிடுவர் என்பதும் எவருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆனாலும் இளமை பருவத்தை புரிந்து கொள்ள வேண்டிய விஷயத்தில் ஒரு மந்த நிலையை பரவலாகவே பார்க்க முடிவது மிகுந்த வேதனையளிக்கிறது.

கடந்த காலத்து இளைஞர்களின் சாதனைகள் குறித்தும், சரித்திரம் படைத்த சான்றோர் குறித்த நினைவூட்டலும் இன்றைய இளைஞர்களுக்கு தங்களின் சரியான எதிர்காலம் குறித்த சிந்தனைக்கு வழியாக அமையும்.

ஏனெனில் இளமை ஆற்றல் என்பது கூரிய முனைகொண்ட ஆயுதம் போன்றது, முறையாக பயன்படுத்தாத போது அது பேரழிவை ஏற்படுத்தாமல் விடாது. இளமை வேகம் நிகழ்த்திய நன்மைகளும், தீமைகளும் வரலாற்றில் பாரபட்சமின்றி இடம் பெற்றுள்ளன.

இஸ்லாமிய வளர்ச்சியில் இளைஞர்கள் :-

ஹிஜ்ரி 7- ஆம் ஆண்டில் கைபர் யூதர்கள் 10,000 போர் கொண்ட படையோடு மதீனத்து முஸ்லிம்களை ஒடுக்க திட்டமிட்டுள்ளதை அறிந்த நபியவர்கள் முன்னெச்சரிக்கை செய்யும் முகமாக கைபர் யூதர்களை முற்றுகையிட்டார்கள்.

வரலாற்றாசிரியர்கள் கூற்றுப்படி கைபர் யூதர்களின் பத்துக்கும் மேற்பட்ட கோட்டைகளில் சிறு சிறு கோட்டைகள் உடனடியாக வெற்றி கொள்ளப்பட்டன. யூதர்களின் பெரிய அரணாகத் திகழ்ந்த “கமூஸ்” எனும் கோட்டையை வெற்றி கொள்வது காலதாமதமாகிக் கொண்டே சென்றது. அன்றைய நேரத்தில் வாலிபராக இருந்த ஹள்ரத் அலீ (ரளி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் போர் கொடியை கொடுத்தனுப்ப, எழுபதுபேர் கழற்றும் கோட்டைக்கதவை ஹள்ரத் அலீ (ரளி) அவர்கள் தனியாளாக தகர்த்தெறிந்து யூதர்களின் சூழ்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள் என்பது வரலாறு.

இஸ்லாமிய வளர்ச்சிக்கு நபியவர்கள் இளைஞர்களை பெரிதும் பங்கு பெறச் செய்யும் வழமை கொண்டிருந்தார்கள் என்பதை இதுபோன்ற சம்பவங்கள் உணர்த்துகின்றன.

ஒருமுறை பள்ளிக்கு வராமல் வீட்டிலேயே தொழுது கொள்ளும் நபர்கள் குறித்து நபி (ஸல்) அவர்கள் கூறும் போது “இளைஞர்களை ஒன்று திரட்டி அவர்களின் கரங்களில் நெருப்புப் பந்தங்களை கொடுத்து பள்ளிவாசலுக்கு வராமல் வீட்டிலேயே தொழுதவர்களின் வீடுகளுக்கு தீயிட்டு கொளுத்த என் மனம் நாடுகிறது” எனக் கூறினார்கள்.

(அபூதாவூத்)

முதியவர்களால் செய்ய முடியாத பல அபார செயல்களை இளைஞர்கள் சில மணித்துளிகளில் செய்து முடித்து விடுகிற சிறப்பான ஆற்றல் வழங்கப்பட்டவர்களாவர். இவர்கள் தடம் பிறழாமல் நேர்வழி நடக்கிறார்களா என்று அக்கறை செலுத்தி தவறுகளை சுட்டிக் காட்டுவதும் சமுதாயத்தின் முக்கிய கடமையாகும்.

வரம்பு மீறும் வாலிபர்களை பண்படுத்தி, சீரிய வழியில் நடத்தாட்டும் செம்மையான பணியை செய்யத்தவறிய இஸ்லாமிய ஜமாஅத்கள் இன்றைக்கு பல துண்டுகளாகப் பிரிந்து பலவீனப்பட்டுக் கிடப்பதை காண முடிகிறது.

ஜமாஅத் நிர்வாகம் இளைஞர்களிடத்தில் ஏற்பட்டிருக்கும் சமய, சமுதாய கருத்து முரண்பாடுகள் குறித்த விளக்கத்தையும், விழிப்புணர்வையும் தருவதற்கு வழிவகை செய்யும்போது சமுதாயம் முன்னேற்றம் காணலாம். போர்க்களத்தில் அன்சாரிகளின் வாள்களே அதிகம் சுழன்றிருக்க போரில் கிடைத்த பொருளை பெருமானார் (ஸல்) அவர்கள் முஹாஜிர்களுக்கே அதிக முன்னுரிமை தருவதாக அன்சாரிகளில் சில இளைஞர்கள் கூறியதை நபியவர்கள் கேள்விப்பட்டு உடனடியாக அன்சாரிகளுக்கென தனிக்கூட்டம் ஏற்படுத்தி கருத்து வேறுபாட்டை களைந்தார்கள் என்பது வரலாறு.

ஆற்றலை நெறிப்படுத்துங்கள் :-

பொதுவாகவே இளைஞர்கள் விவேகத்தை மிஞ்சிய வேகம் கொண்டவர்களாகவே பெரும்பாலும் திகழ்வார்கள். அவர்களை ஒரு கட்டுக்குள் கொண்டு வந்து ஆக்கப்பூர்வமான செயலை செய்பவர்களாக உருவாக்க வேண்டும்.

அன்னை ஹள்ரத் ஆயிஷா (ரளி) அவர்களிடம் பெருமானாரின் வணக்கத்தை கேட்டுத் தெரிந்து கொண்ட மூன்று இளம் சஹாபிகளில் ஒருவர் இனிமேல் நான் தொடர்ந்து நோன்பு நோற்பேன் என்றும், மற்றொருவர் இனி இரவு முழுவதும் நின்று வணங்குவதாகவும், மூன்றாமவர் நான் திருமணம் செய்து கொள்ளமாட்டேன் எனவும் சூளுரைத்தபோது நபியவர்கள் இதை செவியுற்று அம்மூவருக்கும் நடுநிலையான வணக்கமுறையை அறிவுறுத்தி நெறிப்படுத்தினார்கள்.

அதே சமயம் பாவத்தில் சுவை கண்டு மூழ்கிப்போகும் சிந்தனைகளை நல்லமல்களின் பக்கமாக திருப்பிவைக்கும் வழி முறையும் ஹதீஸில் காணக்கிடைக்கிறது.

நாளை மறுமையில் நிழலில்லாத கடுமையான வெப்பத்தில் அல்லாஹ்வின் அர்ஷுக்கு கீழே நிழல்பெறும் ஏழு வகையான கூட்டத்தினரில் இளைஞர் குறித்தும் ஒரு நன்மாராயம் உள்ளது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :-

“வணக்கத்தில் திளைத்த இளைஞர் அர்ஷின் நிழலில் நாளை மறுமையில் இருப்பார்” என்றார்கள்.

இன்றைய இளைஞர்கள் :-

வணக்கத்தில் இளைஞர்களை ஈடுபடுத்துவதற்கு முன் இன்றைய சூழலில் போதை பழக்கத்திற்கு அடிமைபட்டுப்போன இளைஞர்களை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்திலிருக்கிறோம். எண்ணற்ற இமாம்கள், மார்க்க விற்பன்னர்கள் மற்றும் இறைநேசர்களின் வளமான வாழ்வுக்கும், சிறப்பான சரித்திரத்திற்கும் அவர்களது இளமை காலம் பண்பட்டு அமைந்ததே காரணம் என்ற சத்திய வரலாறுகளை இன்றைய இஸ்லாமியர்களுக்கு பாடமாக போதித்து, வருங்காலத்தை வென்றெடுப்போமாக !

நன்றி :

குர் ஆனின் குரல்

பிப்ரவரி 2012

1 thought on “இளமையே கேள் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *