( மவ்லவீ ஹாஃபிழ் பி.இஸட். பரகத் அலீ பாஜில் பாகவி,
சென்னை – 10 )
“இன்னும் உங்களை நீங்களே கொலை செய்து கொள்ளாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிகக் கிருபையுடையோனாக இருக்கிறான்”.
-அல்குர்ஆன் ( 4:29)
தற்கொலை இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்ட ஒரு பெருங்குற்றமாகும்.
ஹள்ரத் வாஹிதி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். “உங்களில் யாரும் யாரையும் கொலை செய்யாதீர்கள். உங்களில் உள்ளவரை கொலை செய்வது தன்னைத்தானே தற்கொலை செய்து கொள்வது போல்தான்”.
ஹள்ரத் அம்ர் இப்னுல் ஆஸ் (ரளி) அவர்கள் கூறுகிறார்கள். “நான் தாதுஸ் ஸலாஸில் என்ற போரில் கலந்து கொண்டேன். அங்கு தங்கியிருந்த ஓர் இரவில் எனக்கு “ஸ்கலிதம்” ஏற்பட்டு விட்டது. ஆனால் கடுமையான குளிராக இருந்தது. இதில் குளித்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என பயந்தேன். எனவே தயம்மம் செய்து ஜமாஅத்துடன் ஃபஜ்ர் தொழுது கொண்டேன்.
இந்த நிகழ்வை நபியவர்களிடம் கூறினேன்; நபியவர்கள் கேட்டார்கள். ‘ஜனாபத்துடன் தொழுதீர்களா?’ நான் சொன்னேன். தயம்மும் செய்தே தொழுதேன். அல்லாஹ் குர் ஆனில் கூறியுள்ள இன்னும் உங்களை நீங்களே கொலை செய்து கொள்ளாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிகக் கிருபையுடையவனாக இருக்கிறான் என்ற வசனத்தையும் ஓதிக்காட்டினேன். அதைக்கேட்டு நபியவர்களே சிரித்து விட்டார்கள். ஏதும் மறுப்பு சொல்லவில்லை.
நபியவர்கள் கூறியதாக ஹள்ரத் ஜுன்துப்இப்னு அப்தில்லாஹ் (ரளி) கூறுகிறார்கள்;-
“பனீ இஸ்ரவேலர்களில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டு விட்டது. வலி தாங்கமுடியாமல் கத்தி எடுத்து கை நரம்பை அறுத்துக் கொண்டான், இறந்து விட்டான். அல்லாஹ் கூறினான். “அடியான் அவசரப்பட்டு விட்டான். அதன் மூலம் சுவனம் அவன் மீது ஹராமாகிவிட்டது.
எந்த மனிதன் இவ்வுலகில் தற்கொலை செய்து கொள்கிறானோ, அவன் நரகில் தள்ளப்பட்டு அங்கும் தற்கொலை செய்து கொள்ளும் தண்டனை தரப்படுவான்.
“ஒரு முஃமினை சபிப்பது அவன் மீது இட்டுக்கட்டுவது அவனை கொலை செய்வதைப் போன்றதாகும்” என நபியவர்கள் கூறினார்கள்.
எனவே தற்கொலைக்கு தூண்டக்கூடிய சுடு சொற்களைக் கொண்டு பிறரை திட்டுவதும் கொலைக் குற்றமே.
எதையும் தாங்கும் வலுவான இதயமும், உடலும் பெற்றவனாக ஒவ்வொரு முஃமினும் இருக்க வேண்டும் என்பது நபிமொழியாகும். ஒவ்வொரு ஃபர்ளான தொழுகைக்கு பின்பும் “அலம் நஷ்ரஹ் சூராவை ஓதி நெஞ்சில் ஊதி வருவது இருதயம் வலுப்பெறுவதற்கு உகந்தது” என ஞானப் பெருந்தகைகள் கூறுகிறார்கள். அல்லாஹ் நமக்கு அந்த மன உறுதியை தந்தருள் புரிவானாக.
நன்றி :
குர்ஆனின் குரல்
ஜனவரி 2012