பயணங்கள்

அதிரை கவியன்பன் கலாம் இலக்கியம் கவிதைகள் (All)

தந்தையின் விந்தும் கருவறை நோக்கித்

தனிமையில் முதன்முதற் பயணம்

முந்தவும் பின்னே இறையருள் கொண்டு

முயற்சியால் வென்றதும் பயணம்

பந்தென உருண்டு பக்குவத் திங்கள்

பத்தினில் கருவறைப் பயணம்

வந்திடும் தருணம் வந்ததும் நலமாய்

வையகம் கண்டதும் பயணம்

கருவறைப் பயண மிருந்ததை மறந்து

கனவினில் மிதந்திடும் நீயும்

ஒருமுறை எழும்பித் தீர்ப்பினைக் காணும்

உறுதியை நம்பியே மரணம்

வருவதும் பயணம்; அதுவரை உலகில்

வாழ்வதும் நிலையிலாப் பயணம்

பருவமும் மாறி வளர்சிதை மாற்றம்

படிப்பினைக் கூறிடும் பயணம்

மடியினில் சாய்ந்து தாயுடன் பயணம்

மகிழ்வுடன் தந்தையின் தோளில்

நடைதனைப் பழக்கும் நண்பனாய் வந்த

நடைபயில் வண்டியில் பயணம்

தடைகளை யுடைத்துப் புரளவும் முயன்று

தவழவும் வாய்த்ததும் பயணம்

விடைகளாய் அறிவும் தெளிந்திடப் பள்ளி

வகுப்பினிற் சேர்ந்ததும் பயணம்

பிழைப்பினை நாடித் தாயகம் விட்டுப்

பிரிந்ததும் சுவையிலாப் பயணம்

உழைப்பினப் பொருத்து ஊரெலாம் மாறி

உலகினில் உழலுதற் பயணம்

தழைத்திடும் இளமைப் பருவமே எமக்குத்

தந்திடும் துணையுடன் பயணம்

அழைத்திடும் காலம் வரும்வரை நாமும்

அவனியில் உலவுதல் பயணம்

மனிதனாய் வாழ நல்வழித் தேடி

மார்க்கமும் பயிலுதல் பயணம்

புனிதமாய்க் கருதும் புகலிடம் தேடி

புறப்படல் அருள்நிறைப் பயணம்

இனிவரும் மறுமை இனியதாய் அமைய

இறைவனை வழிபடும் பயணம்

கனியென நினைத்த வாழ்க்கையிற் பின்னர்

கசந்திடும் பயணமே மரணம்!

(விளம்+மா+விளம்+மா+விளம்+விளம்+மா)

”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பிறப்பிடம்)அபுதபி(இருப்பிடம்) எனது வலைப்பூத் தோட்டம் http://www.kalaamkathir.blogspot.com மின்னஞ்சல் முகவரி: kalamkader2@gmail.com shaickkalam@yahoo.com kalaamkathir7@gmail.com அலை பேசி: 00971-50-8351499

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *