துபாயில் ஸ்மைல் அமைப்பின் தமிழ்த் திருவிழா

தற்போதைய செய்திகள்

துபாய் : துபாயில் ஸ்மைல் அமைப்பு ” LEARN A TAMIL – லேனா தமிழ்” எனும் தமிழ்த் திருவிழா 13.04.2012 வெள்ளிக்கிழமை மாலை கராமா செண்டர் அரங்கில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

தமிழ்த் திருவிழாவிற்கு ஸ்மைல் அமைப்பின் தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார்.

குமுதம் மற்றும் கல்கண்டு இதழ்களின் துணை ஆசிரியர் லேனா தமிழ்வாணன், மணிமேகலைப் பிரசுரம் நிர்வாக இயக்குநர் ரவி தமிழ்வாணன், பன்னூலாசிரியர் கவிஞர் ஏம்பல் தஜம்முல் முஹம்மது, கலையன்பன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.

லேனா தமிழ்வாணன் தனது உரையில் கருத்து வேறுபாடுகள் இருப்பினும் மன வேறுபாடுகள் இல்லாத வாழ்வினை கடைப்பிடிக்க கேட்டுக் கொண்டார். ரவி தமிழ்வாணன் தனது உரையில் மலையாளத்தை தாய் மொழியாகக் கொண்டிருந்தாலும் சுரேஷ் தமிழின் மீது ஆர்வம் கொண்டு தமிழ்த் திருவிழாவினை நடத்தி வருவது பாராட்டுக்குரியது என்றார்.

கவிஞர் பன்னூலாசிரியர் ஏம்பல் தஜம்முல் முஹம்மது, லேனா தமிழ்வாணன் எழுதிய பிழை இல்லாமல் எழுதுவது எப்படி, எளிய முறையில் இலக்கணம் மற்றும் தூய தமிழில் பேசுவோம் ஆகிய நூல்களை வெளியிட சுரேஷ் பெற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து கவிதை எழுதுவது குறித்த குறிப்புக்ளை வழங்கினார்.

சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

அப்படி போடு, கவிதை பாடு என்ற ஹைக்கூ கவிதை போட்டி நடைபெற்றது. பனிரெண்டு பேர் பங்கேற்ற போட்டியில் ஹஸன் ஜமால், பல்கீஸ், இளைய சாகுல் ஆகியோர் முறையே முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றனர்.

செந்தமிழும், சென்னை தமிழும் எனும் நிகழ்வில் 9 பேர் பங்கேற்று செந்தமிழில் சிறப்பாகப் பேசிய சபினாவும், சென்னை தமிழில் ரமா மலர் ஆகியோர் சிறப்புப் பரிசுகளைப் பெற்றனர்.

தமிழ் பேசு, தங்க பாசு எனும் நிகழ்வில் பத்து பேர் பங்கேற்ற போட்டியில் இளைய சாகுல் மற்றும் ரவி ஆகியோர் பரிசு பெற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *