(தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்)
காரைக்குடியில் பேராசிரியர் டாக்டர். அய்க்கண் அவர்கள் தலைமையில் புத்தகத்திருவிழா. சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு சோழன் பழனிச்சாமி அவர்கள் தொடங்கிவைக்க, காரைக்குடி நகர்மன்றத் தலைவர் திருமதி. கற்பகம் இளங்கோ அவர்கள் வாழ்த்துரைக்கத் தொடங்கியது.
மிகச்சிறந்த அறிவு வேள்வியாகப் புத்தகத் திருவிழா தொடங்கியது. உலகமே உதறி எறிந்தாலும் நம்மை விட்டு விலகாத உறவு “புத்தகங்கள்” என்பதே உலகம் முழுவதும் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலாக அமைந்திருந்தது.
நாம் புத்தகத்தை புரட்ட மறுத்தாலும் உலகத்தைப் புரட்டிய போட்ட புத்தகங்கள் ஏராளம்.
இந்திய ஆட்சிப் பணியில், இலக்கியத்துறையில் சிறப்புடன் செயலாற்றும் உயர்திரு. இறைஅன்பு I.A.S அவர்கள் “என் வெற்றிக்கு ஐந்து படிகள்” என்ற கட்டுரையில் அற்புதமாகக் குறிப்பிடுவார்.
முதற்படி : வாசற்படி!
ஒழுக்கமும், உயர்வும் வாசற்படியில் இரண்டு காலணிகளையும் அருகருகே அகற்றிவிடுவதில் இருந்தே தொடங்குகிறது. வாசல்படி என்பது நுழைவு வாயிலும் கூட, ஒவ்வொரு செயலில் நுழைகிறபோதும் புதுமையை ஏற்படுத்த முற்படுகின்ற போதும் நம்மைத் தகுதிப்படுத்திக் கொள்வதற்கும் பழகிக் கொள்ள வேண்டும்.
வீட்டைவிட்டுக் கடமையாற்றப் புறப்படும்பொழுதும் வீட்டு வாசற்படியில் இருந்து வெளியே வரும்பொழுதும் வீட்டு நினைவுகளைக் கழற்றிவிடுவதும், வீட்டில் நுழையும் பொழுது வெளியுலகத்தைத் துண்டித்து விடுவதும் பணியில் நம்மைக் கரைத்துக்கொள்ள உதவும்.
இரண்டாவது படி : தள்ளுபடி
கோபத்தையும் அடுத்தவர்கள் மீது தோன்றும் வெறுப்பையும் அவ்வப்போது தள்ளுபடி செய்து மனத்தை வெற்றிப்பயணமாக வைத்திருப்பதுதான் நம்மை மேம்படுத்தும்.
ஆகாத கோபத்தையும், வேண்டாத வெறுப்பையும் தேவையற்ற பொறாமையையும் மனத்தில் இருந்து நாளும் தள்ளுபடி செய்தால் மனம் மேல்நோக்கி பயணிக்கும்.
மூன்றாவது படி : மறுபடி
எந்த உதவியையும் செய்துவிட்டு அவர்களிடம் நன்றியை எதிர்பார்த்து அந்தச் செயலை மனம் மறுபடி மறுபடி அசைபோடத் தேவையில்லை. எந்த நற்செயலையும் மறுபடி மறுபடி செய்கின்ற பொழுது அதில் நேர்த்தி அடைய முடியும். பத்தாயிரம் மணி நேரம் ஒரு செயலைச் செய்தால் ஒப்பற்ற நிபுணர் ஆகலாம் என்பது “மால்கம் கிளேட்வெல்” எழுதிய சூத்திரம். புரியாத நூல்களைக் கூட மறுபடி மறுபடி படிக்கக் குளறுபடி நீங்கித் தெளிவு பிறக்கும்.
நான்காவது படி : படி, படி
படிப்பே வாழ்க்கைக்கு வழிகாட்டும் “அகவிளக்கு”.
ஐந்தாவது படி : “உருப்படி”
இரவு படுக்கையில் ஒரு மீள்பார்வை. நான் விட்ட சுவாசக் காற்று என் உயிர் வாழ்வுக்கு மட்டும் அல்ல! என் இரைப்பையை இயக்கியது என் உடல்நலத்திற்கு மட்டும் அல்ல! என் இதயம் துடிப்பது பிறர் துன்பம் கண்டு துடிப்பதற்கும் தான்! துடிப்பதோடு மட்டும் அல்லாமல் பிறர் துன்பத்தை நீக்க முயற்சிப்பதும் தான்!
ஒவ்வொரு நாள் முழுவதும் நாம் ஆற்றிய அறிவு சார்ந்த உலகத்திற்கான பணிகள், அன்பின் வழியில் ஆற்றிய பொதுநலப் பணிகள், இவை நம் நாட்குறிப்பில் வாழ்ந்த நாளாய் இடம்பெறச் செய்கின்றன!
உயர்திரு இறைஅன்பு I.A.S. அவர்கள் குறிப்பிட்ட ஐந்து படிகளிலும் படிப்படியாய் ஏறி வாழ்வைப் பயன் உள்ளதாய் ஆக்கவேண்டும். குஜராத் மாநிலத்தில் பூகம்பம் ஏற்பட்ட பொழுது பணியாற்றிய “நைனேஷ்தவே” என்ற துணை ஆட்சியரைப் பற்றி இறைஅன்பு I.A.S. அவர்கள் குறிப்பிடுகின்றார்! அந்த நிகழ்வு நம் உயிரை உலுக்கியது. குஜராத் மாநிலம் சுரேந்திரநகர் மாவட்டத்தில் லிம்பிடி என்கின்ற கோட்டத்தின் துணை ஆட்சியர் பூகம்ப நிவாரணப்பணியில் புயலாய்ப் பணியாற்றுகின்றார். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீட்புப்பணியைத் துரிதமாக செய்துகொண்டு வருகிறார். இடிபாடுகளில் சிக்கியோரை மீட்டு உயிர்காக்க மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்து மருத்துவ உதவிகள் செய்தும், வீடிழந்தோரைத் தக்க இடங்களில் தங்கவைத்து உணவு, மருந்து அளித்தும் அயராது பணியாற்றிக் கொண்டிருக்கும்பொழுது ஒரு துயரச் செய்தி வருகின்றது!
துயரச்செய்தி கண்டு பொங்கிய விழிநீரைத் தன் வியர்வையால் துடைத்துக் கொண்டு தொடர்ந்து பணியாற்றிகின்றார். துயரச் செய்தி கண்டு துவளாமல், சோர்ந்து விடாமல் தொடர்ந்து பணியாற்றினார். “நைனேஷ்தவே” என்ற அந்த உயர் அதிகாரியின் தந்தையும், அவரது மகனும் அகமதாபாத்தில் ஒரு அடுக்குமாடிக் கட்டிடம் இடிந்து விழுந்து இடிபாடுகளில் சிக்கி உயிர் இழந்துவிட்டார்கள் என்ற துயரச் செய்தியைக் கேட்டும். தன் மகனின் இறப்புக்கும், தன் தந்தை இறப்புக்கும் கூட இறுதிக்கடன் நிறைவேற்றச் செல்லாமல் கனத்த இதயத்தோடு தன் கடமையைத் தொடர்ந்தார் “நைனேஷ்தவே”.
இதற்காக ”நைனேஷ்தவே” என்ற அந்த அலுவலருக்குப் பாராட்டோ, பதக்கமோ வழங்கப்படவில்லை. அவர் யாரிடமும் இதைப் பறைசாற்றிக் கொள்ளவும் இல்லை. தம் சொந்த வாழ்வின் துன்பங்களை – துயரங்களைத் தூரவைத்துவிட்டு, கடமையில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றுகின்ற எத்தனையோ “நைனேஷ்தவே” இருப்பதால் தான் விரக்தியின் விளிம்புக்குச் செல்லாமல் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.
அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்
தந்நோய் போல் போற்றாக்கடை
பிற உயிரின் துன்பத்தைத் தம் துன்பமாக எண்ணிப்பார்க்கும் மனநிலை வளரவேண்டும். அந்த அறிவைத்தான் துன்ப நீக்கத்தின் மருந்து என்று திருவள்ளுவர் குறிப்பிடுகின்றார். அத்தகு அறிவும் அன்பும் இரண்டறக் கலக்கும்பொழுது அருள் முகிழ்க்கும்!
“அருள் என்னும் அன்பு ஈன்குழவி”
என்றார் திருவள்ளுவர்
அன்பு என்ற தாய் ஈன்றசேய் “அருள்”.
கடும் வெயிலில் உடுத்த ஆடையின்றி கோவணத்துடன் கல் உடைத்துக்கொண்டிருந்த ஏழைத் தொழிலாளர்களைப் பார்த்து தானும் எளிய கோலத்திற்கு மாறினார் காந்தி! தன் தாயின் குடிஇருப்புக்கு விதிமுறைகளை மீறிக் குடிநீர் இணைப்புக்கு தர இயலாது என்றார் காமராசர்!
தன்னலமற்ற பாதையே அருள் உள்ளங்கள் காட்டிய வழி! அந்தப் பாதையை விசாலமாக்குவோம்!
உலகம் உண்ண உண்போம்!
உலகம் உடுத்த உடுத்துவோம்!
நன்றி : அறிக அறிவியல்
அறிவியல் தமிழ்த் திங்களிதழ்
மார்ச் 2012