அபுதாபி : அபுதாபியில் இந்திய தூதரகத்தின் சார்பில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவுக்கு வரவேற்பு நிகழ்ச்சி 15.04.2012 ஞாயிற்றுக்கிழமை மாலை அபுதாபி ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது.
இந்திய தூதர் எம்.கே. லோகேஷ் அமைச்சர் கிருஷ்ணாவை வரவேற்றார். அவர் தனது உரையில் முதல் அமைச்சர், கவர்னர் என பல்வேறு பொறுப்புகளை வகித்த எஸ்.எம். கிருஷ்ணா அவர்கள் தற்போது மத்திய அமைச்சராக பரிமணித்து வருகிறார் என்றார். இந்திய சமூகத்தின் சார்பில் அவருக்கு வரவேற்பு அளிப்பதில் பெருமிதம் கொள்வதாக தெரிவித்தார்.
மத்திய அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தனது ஏற்புரையில் அபுதாபியில் வளைகுடாவில் பணிபுரிந்து வரும் இந்திய தூதர்களின் கூட்டம் உள்ளிட்ட பல்வேறு அரசு முறை சந்திப்புக்காக வருகை புரிந்த தனக்கு வரவேற்பு அளித்தமைக்காகவும், இந்திய சமூக பிரதிநிதிகளைச் சந்திக்கக் கூடிய வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்தமைக்காகவும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
அமீரகத்தில் வாழ்ந்து வரக்கூடிய இந்திய மக்கள் தாங்கள் வாழ்ந்து வரும் நாட்டின் பொருளாதார உயர்வுக்கு மட்டுமன்றி தங்களது தாய்நாட்டின் பொருளாதார உயர்வுக்கு ஒரு முக்கியப் பங்களிப்பை செய்து வருகிறீர்கள் என்பதனை நன்றியுடன் நினைவு கூர்வதாக தெரிவித்தார்.
அமீரகத்தில் பணிபுரிந்து வரும் ஒவ்வொரு இந்தியரும் அமீரக இந்திய நல்லுறவுக்கு தூதுவர்களாக பணியாற்றி வருகிறீர்கள். வெளிநாடு வாழ் இந்தியர்களின் நலன் காக்க இந்திய அரசு எப்பொழுதும் உறுதுணையாக இருக்கும் என்றார்.
இவ்வரவேற்பு நிகழ்வில் இந்திய கன்சல் ஜெனரல் சஞ்சய் வர்மா, தூதரக அதிகாரிகள், இந்திய தொழிலதிபர்கள், பல்வேறு இந்திய சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.