இரத்ததான வரலாறு – டாக்டர் சு. நரேந்திரன்

இலக்கியம் கட்டுரைகள்


இரத்தத்தைத் தானமாகக் கொடுக்கலாம் என்பது கடந்த 75 ஆண்டுகளுக்கு முன்புதான் அறியப்பட்டது. இதற்காக ஆராய்ச்சியாளர்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகளைப் பற்றிய வரலாறு மிகவும் ருசிகரமாகவே உள்ளது.

ரோமில் – வீரனாக விரும்புகிறாயா இரத்தத்தை குடி

உயிர்வாழ உடலுக்குத் தேவை இரத்தம் என, வரலாற்றுக் காலத்திற்கு முன் அறியப்பட்டிருந்தாலும் ரோமானியர்களில் வீரனாக விரும்பியவர் இரத்தத்தைக் குடித்தனர் என்று கூறப்படுகிறது.

இரத்த தான வரலாற்றில் ஒரு சுவையான நிகழ்ச்சி

ரோமானியர்களைப் போலவே, இன்னும் சற்றுக் கூடுதலான பலனை, இளமையை மீண்டும் பெற, மூன்று வாலிபர்களிடம் இரத்தத்தை எடுத்து போப் இன்னசென்ட் (V) என்பவர் குடித்தாராம். இதன் முடிவு இந்த நால்வரும் மடிந்ததாக வரலாறு.

இரத்த சுழற்சி

1628 – ஆம் ஆண்டு வில்லியம் ஹார்லி இரத்தம் எப்படி உடலில் சுழல்கிறது என்று அறிந்து சொன்னார். இரத்தத்தை ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்குத் தானமாகக் கொடுக்க முடியுமா? என்ற ஆய்வுக்கு அவர் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவில்லை. ஆனாலும் இவரது கண்டுபிடிப்பே சுழலும் இரத்தத்தை ஒருவரிடமிருந்து எடுத்து மற்றொருவருக்குக் கொடுக்க முடியுமா? என ஆராய வித்திட்டது.

இங்கிலாந்து நாட்டை நிர்மாணிக்க உதவியரும் ராயல் கழகத்தில் ஆரம்பகால உறுப்பினருமான கிருஸ்டோபர் ரென் (1632 – 1723) என்பவரே இரத்ததானத்திற்கான ஆய்வுக்கு வித்திட்டவர். இவரே முதன் முதலில் மருந்துகளை சிரை வழியே ஏற்றி, வாந்தி, பேதி, மயக்கம் போன்ற அறிகுறிகளை உண்டாக்கி அதன்மூலம் மருந்துகளை இரத்த நாளத்தில் ஏற்றும் முறையைக் கண்டவர்.

இதனைக் கண்ணுற்றபின் மற்ற ராயல் கழக உறுப்பினர்களுக்கும் இவ்வாய்வில் நாட்டம் ஏற்பட்டதன் விளைவாக, 1665 இல் ஜான் வில்கின்ஸ் என்பவர் ஒரு நாயின் பெருஞ்சிரையில் இருந்து இரத்தத்தை எடுத்து மற்றொரு நாய்க்குப் பித்தளைக் குழாய் வழியாக ஏற்றினார். நாய்க்கு எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படவில்லை. இதுவே ஒரு மிருகத்திடமிருந்து மற்றொரு அதே வகை மிருகத்திற்கு முதன் முதலாகக் கொடுக்கப்பட்ட இரத்த தானமாகும்.

இதன் பிறகு அதே கழக உறுப்பினரான ரிச்சர்வோவர் (1666) என்பவர் ஒரு மிருகத்தின் தமனியிலிருந்து மற்றொரு மிருகத்தின் சிரைக்கு இரத்தத்தை ஏற்றினார். இந்த இரத்த ஏற்றத்திற்குப் பறவையின் சிறகுகள் குழாய்களாகப் பயன்பட்டன. ஆனால் அதன் பிறகு சிறகுகளுக்குப் பதிலாக வெள்ளியினால் ஆன மெல்லிய குழாய்கள் பயன்பட்டன. அக்காலக்கட்டம் வரை மனிதனுக்கு மனித இரத்தம் ஏற்ற முயற்சி எடுக்கப்படவில்லை. இருப்பினும் விலங்குகளுக்கு இரத்தம் ஏற்றப்பட்டு அவை உயிர் வாழ்வதை அறிந்த ஆய்வாளர்கள் இதில் நாட்டம் கொண்டதன் பயனாக ஜீன்பேட்டில் டென்னிஸ் என்பவர், ஆரம்ப காலத்தில் மிருகத்திடம் தன் ஆய்வுகளை நடத்திய பின்பு 1667 ஜுன் 15 –ஆம் நாள் ஒரு ஆட்டிடமிருந்து பெறப்பட்ட இரத்தத்தை15 வயதுப் பையனுக்கு ஏற்றினார். இதன் பிறகு சுமார் 5 மாதங்கள் கழித்து ஒரு செம்மறி ஆட்டிடமிருந்து ஒரு மனிதனுக்கு அதே ஆய்வாளர் இரத்தத்தை ஏற்றினார். மூன்று வாரம் கழித்து இதே நபருக்கு மற்றொரு முறை இரத்தம் ஏற்றப்பட்ட பொழுதும் இம்மனிதனுக்கு யாதொரு கேடும் ஏற்படவில்லை. இத ஆய்வாளர்கள் ஒத்துக்கொள்ளவில்லை.

இதற்குப் பின் ஓராண்டு கழித்து (1668) டென்னிஸ் மற்றொருவருக்கு இதே மாதிரியாக இரத்தம் கொடுத்த போது நோயாளி மரணமடைந்தார். இறந்தவரின் மனைவி டென்னிஸ் மீது வழக்குத் தொடர்ந்த போது, தீர்ப்பில் ஆர்சினிக் என்ற வெண்பாஷாணம் இறந்தவர் மனைவியினாலேயே கொடுக்கப்பட்டு மரணமடைந்ததாக நீதி மன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இவ்வழக்கு உலகெங்கும் பிரசித்தம் பெற்றதன் காரணமாக 19 ஆம் நூற்றாண்டு ஆரம்பக்காலம் வரை இரத்த ஏற்றம் எந்த நாட்டிலும் நடைபெறவில்லை.

இரத்தம் ஏற்றம் வெற்றி பெற்றது – எப்பொழுது !

மருத்துவமாக முதல் இரத்ததானம் ஜேம்ஸ் பிளன்டல் என்ற பொது மற்றும் மகளிர் மருத்துவரால் நடைமுறைப்படுத்தப்பட்டது. இவர் ஒருவகை மிருகத்தின் இரத்தம் மற்றொரு வகை மிருகத்துக்கு இரத்த ஏற்றத்திற்கு உகந்தது அல்ல என்பதை அறிந்து தெரிவித்தார். மனிதனுக்கு மனிதனே இரத்தம் கொடுக்க ஏற்ற தகுதியானவன் என்பதையும் கூறினார். இவ்வாய்வின் முடிவின் படி 1818 – ஆம் ஆண்டு தீர்க்க முடியாத நோய் உள்ள ஒரு நோயாளிக்கு இம்மருத்துவருடைய உதவியாளர்களிடமிருந்து இரத்தம் எடுக்கப்பட்டுக் கொடுக்கப்பட்டது. இதேபோல் 19 முறை சோதனையாக தீர்க்கமுடியாத நோயாளிகளிடம் இரத்த ஏற்றத்தை நடத்தினார். அதன் பின்னர் 1829 –ல் பிரசவத்திற்குப் பிறகு ஏற்பட்ட இரத்த ஒழுக்கினால் மிகவும் கவலைக்கிடமாக இருந்த ஒரு பெண்ணுக்கு 8 அவுன்ஸ் இரத்தத்தை அவரின் உதவியாளரிடமிருந்து பெற்று ஏற்றி, சுமார் 3 மணி நேரம் நோயாளியுடன் போராடி முதன் முதலாக வெற்றி கண்டார். இவர் ஆரம்பக் காலத்திலேயே இரத்த உறைவைப் பற்றித் தன் ஆராய்ச்சியின் மூலம் அறிந்திருந்தமையால் இரண்டு ஆய்வுக்கருவியில் இரத்தத்தைச் சேமித்து, சிறிதளவு கலக்கிப் பார்த்த பின்னரே அந்த இரத்தம் மற்றொருவருக்குக் கொடுக்கப்பட்டது.

இரத்த உறைவைத் தடுக்கும் பொருள்

இரத்தம் எடுக்கப்பட்டு பிறகு ஏற்ற எடுத்துக்கொள்ளும் இடைவேளையில் அது உறையாதிருக்க 1869 –இன் ஆரம்ப காலத்தில் சோடியம் பாஸ்பேட் உபயோகப்படுத்தப்பட்டது. இதற்கு முன் இரத்த உறைவைத் தடுக்கும் முகமாக அதிலுள்ள பைபிரின் அகற்றப்பட்டது இருப்பினும் இதன் அவசியம் பிறகு அறியப்பட்டது.

1914 இல் சோடியம் சிட்ரேட் மிகுந்த உபயோகமான பொருளாக அறியப்பட்டது. இவ்வுறைவைத் தடுக்க 5 கி அளவு போதுமானதாக இருந்தது.

இரத்த வகையை அறிந்தவருக்கு நோபல் பரிசு

இதற்கு விடையளிக்குமாறு 1900 –இல் கார்ல் லான்ஸ்டினீர் ஒருவரின் சிகப்பு அணுவுடன் மற்றொருவரின் இரத்தத்தைக் கலக்க சிலருக்கு அணுக்கள் திட்டு திட்டாக மாறுவதை அறிந்ததன் விளைவாக, அவர் ஏ,பி, ஓ இரத்த வகையை கண்டுபிடித்து உலகுக்கு அறிவித்தார். இந்த ஆய்விற்காக 1930 –ஆம் ஆண்டு அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1902 – ஆம் ஆண்டு டீகாஸ்ரெட்லே எ.பி வகையைக் கண்டுபிடித்தார்.

1940 –ல் லான்ஸ்டினீர் மற்றும் அவருடைய குழுவினரால் ஒரு முயலுக்கு ரீசஸ் குரங்கின் சிகப்பு அணு ஏற்றப்பட்டது. அதன் பிறகு முயலின் இரத்தத்தின் சீரத்தில் தீரட்சிக்கு உதவும் பொருட்கள் உண்டாகின்றன என்று அறிந்தனர். இதை மனிதனுக்குக் கொடுக்கும் பொழுது சிகப்பு அணுக்களுடன் எதிர்வினை 85 விழுக்காடு ஏற்பட்டது. இதுவே ஆர்.எச். பாசிடிவ் என்றும் ஆகாதது ஆர்எச் நெகடிவ் (15%) என்றும் கூறப்படுகிறது.

இரத்தத்தை தானமாகப் பெற்று சேமிக்க இரத்த வங்கிகள் இரண்டாம் உலக மகாயுத்த காலத்திலேயே தோற்றுவிக்கப்பட்டன. அதன் பிறகு 1926 – ஆம் ஆண்டு முதல் செஞ்சிலுவைச் சங்கம் முதல் முறையாக இங்கிலாந்தில் தானமாகப் பெற்று நோயாளிக்கு கொடுத்துப் பெரும் தொண்டாற்றி வருகின்றது.

நன்றி :

அறிவியல் தமிழ்த் திங்களிதழ்

சனவரி 2012

தொடர்பு முகவரி :

நிர்வாக ஆசிரியர்

அறிக அறிவியல்

குன்றக்குடி 630 206

சிவகங்கை மாவட்டம்

04577 – 264 166 / 264 227

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *