பாராட்டுங்கள் ! மவ்லவி ஹெச். அப்துர் ரஹ்மான் பாகவி எம்.ஏ.

இலக்கியம் இஸ்லாமியக் கட்டுரைகள்

பாராட்டுங்கள் !

மவ்லவி ஹெச். அப்துர் ரஹ்மான் பாகவி எம்.ஏ.

“தங்களுக்கு தேவையிருந்தாலும் சரி. தங்களைவிட (மற்றவர்களுக்கு கொடுப்பதையே) தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள்”.

-அல்குர்ஆன் (59 :9)

மனிதர்களிடம் நற்காரியம் வெளிப்படும் போதும் நற்பண்புகள் தென்படும் போதும் அவர்களை திறந்த மனதோடு பாராட்டுகிற ஓர் உயர்ந்த நாகரீகத்தை இவ்வசனத்தில் இறைவன் கற்றுத் தருகிறான்.

நாயகம் (ஸல்) அவர்களின் திருச்சமூகத்தில் வந்து ஒரு மனிதர் தனது உணவுத்தேவையை முறையிட்டார். அவருக்கு உணவளிக்க தம் மனைவிமார்களிடத்திலும் எதுவும் கிடைக்காத போது நபியவர்கள் தம் தோழர்களில் எவரேனும் அம்மனிதருக்கு உணவளிக்க முன் வருகிறீர்களா? என்று கேட்க, ஓர் அன்சாரி தோழர் அம்மனிதருக்கு உணவு தர முன் வந்து தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

தன் வீட்டில் உள்ள உணவு ஒருவருக்கு மட்டுமே போதுமானதாக இருக்கக் கண்ட அன்சாரிதோழர் தம் மனைவியிடம் குழந்தைகளுக்கு உணவு கொடுக்காது தூங்க வைத்துவிடும்படி கூறிவிட்டு, தாமிருவரும் உணவருந்தும் வேளையில் அம்மனிதருக்கு முன் வைத்துள்ள விளக்கை அணைத்துவிட்டு உணவருந்துவது போல் நாம் பாவனை செய்வோம் அவர் நிம்மதியாக உணவருந்தட்டும் என்ற திட்டப்படி செய்து விருந்தோம்பலை நிறைவேற்றினார்.

இச்செயல் அல்லாஹுதஆலாவிற்கு பிடித்துப்போய் விடவே அவர்களின் உயர்ந்த பண்புகளை பாராட்டும் முகமாக இறைவன் மேற்கூறப்பட்ட வசனத்தை இறக்கி வைத்தான்.

நற்பண்புகளை கண்டால் அதைப் பாராட்டுவது உயர்ந்த பண்பாடாகும்.

பிற மனிதர்களை நற்காரியங்களில் பாராட்டுவது என்பது விரும்பத்தக்க செயலாகும். அதற்கு மார்க்கத்தில் அனுமதியும் உண்டு. நற்பண்புடையவரை பிறர் அறியும் வண்ணம் “நற்பண்புடையவர்” என்று எடுத்துக்கூறுவது எந்த வகையிலும் குற்றமாகாது.

ஏனெனில் உயர்ந்த பண்புகள் என்பது இறைவன் தந்த வெகுமதியாகும். அதனுடைய புகழ் அவனுக்கே உரியதாகும்.

நற்பண்புகள் அருட்கொடையாகும்

நபி இப்ராஹீம்(அலை) அவர்களிடம் வெளிப்பட்ட பண்புகளை இறைவன் தன் வேதத்தில் இவ்வாறு பாராட்டிப் பேசுகிறான்.

“நிச்சயமாக இப்ராஹீம் பொறுமையுடையவராகவும், இரக்கமுடையவராகவும் இருந்தார்”

-அல்குர்ஆன் (9: 114)

தன் நபிமார்கள் குறித்து “அவர்கள் முஃமினான நல்லடியார்களில் நின்றுமுள்ளவர்கள்” என்று இறைவன் அவர்களுக்கு புகழாரம் சூட்டுகிறான்.

மனிதர்களிடம் காணப்படும் நற்குணங்கள் இறைவனின் வெகுமதி என்றுணர்வதும், அதை மதித்து பின்பற்றுவதும் முஃமின்களுக்கு அறிவுறுத்தப்பட்டவையாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் –

“அல்லாஹ்வின் குணங்களை உங்கள் குணமாக்கிக்கொள்ளுங்கள்.”

தீங்கிழைத்தவனை பெருந்தன்மையோடு மன்னிப்போரை பாராட்டியவர் அல்லாஹ்வின் தன்மைகளை சங்கை செய்தவர் போலாகி விடுகிறார்.

விட்டுக் கொடுத்து போகும் நல்லுள்ளங்களை வாழ்த்தும் போது அக்குணங்கள் மென்மேலும் வளர்ந்து கொண்டே செல்லும் என்பதில் சந்தேகமில்லை.

பலகீனமானவர்களை நல்ல வார்த்தைகள் கூறி, ஊக்கப்படுத்த முயற்சிக்க வேண்டுமே தவிர, மற்ற வாக்கியங்களை கையாண்டு அம்மனிதர்களை ஊனப்படுத்திவிடக்கூடாது. அது மார்க்கத்தில் தடுக்கப்பட்ட செயலாகும்.

நற்பண்புகள் இறைவனின் அருட்கொடையாகும். அதை புறக்கணிப்பதும், தீய பண்புகளை ஊக்குவிப்பதும் பெரும்பாவமாகும்.

பெருமானார் (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடத்தில் வெளிப்பட்ட உயர்ந்த பண்புகளை எடுத்துக்கூறி அதை போற்றி நடக்கும்படியும் பிறரை பணித்தார்கள்.

ஒருமுறை நபியவர்கள் தோழர்களிடத்தில் “சுவனவாசியை காண வேண்டுமென்றால் இவரை கண்டு கொள்ளுங்கள்” என்று நபித்தோழரை சுட்டிக் காட்டினார்கள். அவரைப் பற்றி தெரியமுற்பட்டவர்கள் அவரிடம் எவரைப் பற்றியும் பொறாமை கொள்ளாதவர் என்ற தன்மை இருப்பதை தெரிந்து கொண்டார்கள் என்று நபிமொழிகளில் காணக் கிடைக்கிறது.

ஹள்ரத் அபூபக்கர் (ரளி) அவர்களை “என் உம்மத்தில் மிகுந்த இரக்க குணமுள்ளவர்” என்றும் ஹள்ரத் உமர் (ரளி) அவர்களை “இறைகட்டளையில் கடினமானவர்” என்றும் ஹள்ரத் உஸ்மான் (ரளி) அவர்களை “கடினமான வெட்கத்தன்மையுடையவர்” என்றும் ஹள்ரத் அலீ (ரளி) அவர்களை “மிகச் சரியான தீர்ப்பு வழங்கும் தன்மைபெற்றவர்” என்றும் பெருமானார் (ஸல்) அவர்கள் தம் தோழர்களை பாராட்டிக் கூறியதை ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இரண்டாவது குத்பாவில் நாம் கேட்டுக் கொண்டே வருகிறோம்.

இதுபோல் நூற்றுக்கணக்கான பாராட்டுக்களை இறைத்தூதர் நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்களுக்கு அன்பளிப்பு செய்துள்ளார்கள்.

ஹள்ரத் காலித் (ரளி) அவர்களை “இறைவாள்களில் ஒரு வாள்” என்றும் ஹள்ரத் முஆது பின்ஜைபல் (ரளி) அவர்களை “உங்களில் மிகுந்த சட்ட விளக்கம் கொண்டவர்” என்றெல்லாம் நபியவர்கள் பாராட்டியுள்ளார்கள்.

சந்தோஷப்படுத்துங்கள்

மறுமை விஷயங்களானாலும் சரி, இவ்வுலக காரியங்களானாலும் சரி இரண்டு நல்ல வார்த்தைகளை கூறி சபாஷ், சபாஷ் என ஊக்கப்படுத்தும் போது சோர்ந்து போனவர்கள் கூட துள்ளியெழுந்து துடிப்போடு செயல்படுவார்கள்.

தன் குழந்தைகளை நல்லவற்றில் பாராட்டும் வழக்கம் கொண்ட தந்தை நல்ல குழந்தைகளை உருவாக்கிக் கொண்டுள்ளார் என்று கூறிவிடலாம்

மனைவியின் நற்காரியத்திற்கு ஊக்கம் தரும் கணவர் மகிழ்ச்சியை குடும்பத்தில் விருத்தி செய்து கொள்கிறார்.

முஸ்லிமை மகிழ்விப்பது அல்லாஹ்விற்கு மிகவும் பிடித்த செயலாகும் என்றார்கள் (ஸல்) அவர்கள்.

(அல்ஜாமிஉஸ்ஸாகீர்)

ஹதீஸ் எண் 176

உம்ராவிற்கு செல்வதாகக் கூறிய ஹள்ரத் உமர் (ரளி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் “உங்களது பிரார்த்தனையில் என்னை மறந்துவிடாதீர்கள்” என்று கூறியவுடன் ஹள்ரத் உமர் (ரளி) அவர்கள் மிகுந்த மகிழ்ச்சிக்குள்ளானார்கள்.

பெரியவர்களின் பாராட்டுக்கள் சிறியவர்களை மிகுந்த ஆர்வமுடையவர்களாக, ஆக்கமுள்ளவர்களாக மாற்றிவிடுவதுண்டு என்பதை அனுபவத்திலும் அறிய முடிகிறது.

ஹள்ரத் இப்னு உமர் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள் –

“ஒரு முறை மழை வந்ததால் பள்ளிவாயில் சேறாக மாறியது. சுப்ஹு தொழுகைக்கு முன் ஒருவர் தன் ஆடைகளில் பொடிக்கற்களை கொண்டு வந்து பள்ளியில் போட்டு விரிப்பு போல் ஆக்கி வைத்தார். சுப்ஹு தொழுகை முடிந்தவுடன் பெருமானார் (ஸல்) அவர்கள் அதை பார்த்து விட்டு ‘இது மிக அழகான செயலாகும்’ என்று பாராட்டினார்கள்.

(அபூதாவூது பாகம் 1 : பக்கம் 66)

இஸ்லாமிய வரலாற்றில் வழிநெடுகிலும் நன்மாராயம் கூறி ஊக்கம் தந்தவர்கள் நிறைந்து காணப்படுகிறார்கள். ஈருலக வளர்ச்சிக்கு சுபசோபனம் சொல்லி, தரப்பட்ட அந்த பண்பாட்டை போற்றுபவர்கள் இருக்கவே செய்கிறார்கள்.

எனினும், இன்றைய தேவைக்கு அச்சமூட்டுபவர்களாக மட்டுமன்றி ஆர்வமூட்டுபவர்களாகவும் இருத்தல் வெற்றிக்கு ஏதுவாகும்.

ஆசிரியர் மாணவனை ஊக்குவிப்பதும், முதலாளி தொழிலாளியை பாராட்டுவதும் உலகியல் மரபாகும்.

நிறைகளைக் காணும் கண்களை வல்ல அல்லாஹ் அதிகப்படுத்துவானாக !

நன்றி :

குர் ஆனின் குரல்

ஏப்ரல் 2012

பக்கம் 93 – 96

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *