துபாய் : துபாயில் தமிழ்க் குழந்தைகள் தமிழில் பேச வேண்டும் எனும் நோக்கத்தின் அடிப்படையில் செயல்பட்டு வரும் தமிழ்த்துளி அமைப்பு தனது முதலாம் ஆண்டு நிறைவு விழாவினையொட்டி சுற்றுலா நிகழ்வினை 23.03.2012 வெள்ளிக்கிழமையன்று ஏற்பாடு செய்திருந்தது.
துபாயில் இருந்து அபுதாபி செல்லும் வழியில் அமைந்துள்ள சஹாமா எமிரேட்ஸ் ஷு பார்க் கிற்கு இரு பேருந்துகளில் உறுப்பினர்களை தங்களது குடும்பத்தினருடன் அழைத்துச் செல்லப்பட்டனர்.
காலை எட்டு மணிக்கு துபாயில் இருந்து பேருந்து புறப்பட்டது. இடையில் சுவையான காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.
பொதுவாக சாப்பிட்டவுடன் குப்பைகளை கண்ட இடத்தில் வீசிசெல்பவர்களுக்கு மத்தியில் ரமணியின் ஏற்பாட்டில் அனைத்து குப்பைகளும் சேகரிக்கப்பட்டு அதற்கென வைக்கப்பட்ட இடத்தில் சேர்க்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சுமார் 10.30 மணிக்கு பேருந்து சஹாமா எமிரேட்ஸ் ஷு பார்க்கினை அடைந்தது. அங்கு வந்திருந்த 110 பேரும் 10 குழுக்களாக பிரிக்கப்பட்டனர். எமிரேட்ஸ் ஷு பார்க்கில் பல்வேறு வகையான ஆடுகள், சிங்கம், புலி, குரங்கு, வரிக்குதிரை உள்ளிட்ட விலங்குகள், மயில் உள்ளிட்ட பறவைகள், பல்வேறு மீன் இனங்கள் வைக்கப்பட்டிருந்தன.
ஷு பார்க்கில் பெரியவர்களும் சிறுவர்களாக மாறி குதுகுலமடைந்தனர். தங்களது இளமைக்கால வாழ்விற்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டதாகக் கருதினர். ஷு பார்க்கில் உள்ள ஊழியர் பாம்பினை ஒவ்வொருவரது கழுத்திலும் வைத்துக் காட்டினார். இதனை சிறுவர்கள் மட்டுமல்லாது பெரியவர்களும் தங்களது கழுத்தில் வைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
ஒவ்வொரு விலங்கினம் குறித்தும் அதன் வாழ்க்கை முறை உள்ளிட்ட தகவல்களை தமிழ்த்துளி அமைப்பின் தலைவி ப்ரியா விஜய் விவரித்தார். சுமார் மூன்று மணி நேரம் எமிரேட்ஸ் ஷு பார்க்கினை கண்டுகளித்த மகிழ்ச்சியில் அருகிலுள்ள பூங்காவிற்கு மதிய உணவிற்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
மதிய உணவிற்குப் பின்னர் சிறிது ஓய்விற்குப் பின்னர் குழந்தைகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பேருந்து துபாய் திரும்பியது.
பேருந்து பயணத்தின் போது விடுகதை, சிறுகதை, மோனோ ஆக்டிங், பாட்டுக்குப் பாட்டு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் பெரியவர்களும், குழந்தைகளும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
தேர்வின் காரணமாக கலைப்புற்றிருந்த குழந்தைகளுக்கு இந்த சுற்றுலா ஒரு புத்துணர்வை அளித்ததாக பெற்றோர்கள் தெரிவித்தனர்.
சுற்றுலாவிற்கான ஏற்பாடுகளை ரமணி, மாயா, தமிழ்ச்செல்வன், பாலாஜி, விஜய், பாவை நியாஸ் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.