சென்னை ரயில் மியூசியத்தின் சுவராசியமான கதை

தற்போதைய செய்திகள்


நமக்கு நெருக்கமான, மட்டும் பிரியமான விஷயத்தில் ரயில் நிச்சயம் இடம் பெற்றிருக்கும். எத்தனை முறை பார்த்தாலும், எத்தனை முறை பயணம் செய்தாலும், எந்த வயதிலும் களைப்பிற்கு பதிலாக களிப்பே தரும் ரயிலின் வரலாறுதான் எத்தனை சுவாரசியமானது

150 வருட இந்திய ரயில்வேயின் வரலாறை சொல்லும் சென்னை புது ஆவடி ரோட்டில் உள்ள மண்டல ரயில் அருங்காட்சியகம் அவசியம் அனைவரும் காணவேண்டிய ஒன்றாகும். 1853ம் வருடம் அன்றைய பாம்பாயில் இருந்து தானேக்கு (34கி.மீ) முதல் முறையாக ரயில் ஒடியது முதல், இன்றைக்கு வரையிலான வரலாறை அருங்காட்சியகத்தில் உள்ள படங்களும், ரயில் பெட்டிகளும், என்ஜின்களும் படிப்படியாக விளக்குகின்றன.

எப்படி தகடாக இருந்து முழு ரயில் உருவாகிறது என்பதை சொல்வதில் துவங்கி, ரயில் என்ஜினை நிலம் உழுவதற்காக பயன்படுத்தியதும், அந்தக்கால ராஜாக்கள், மற்றும் செல்வந்தர்கள் ஆங்காங்கே ரயில் போக்குவரத்து நடத்தியதும், பல ஆண்டுகளுக்கு முன்பே மாடி ரயில் விட்டதும் என பல விஷயங்கள் இங்கே போனால் தெரிந்து கொள்ளலாம்.

48 வகையான நிஜமான ரயில் என்ஜின்கள், பெட்டிகள், கிரேன்கள் இங்கு உள்ளன. இப்போது இவை செயல்பாட்டில் இல்லாவிட்டாலும் இவை எப்படியெல்லாம் செயல்பட்டன என்பதை அறியும் போது வியக்காமல் இருக்கமுடியாது, அதிலும் நீராவி என்ஜின் ரயிலை நெருப்பில் வெந்தபடி ஒட்டிய ஒட்டுனர்கள் உள்ளபடியே பெரும் தியாகிகள் என்றே சொல்ல தோன்றும்.

இப்போது பர்ஸ்ட் கிளாஸ் துவங்கி ஸ்லீப்பர் கிளாஸ் வரை தெரியும். ஆனால் அப்போது மூன்றாம் வகுப்பு பெட்டி என்று ஒன்று இருந்ததும் அதில் எளியவர்கள் மற்றும் ஏழைகள் உட்கார்ந்தே பயணித்ததும், அந்த பெட்டியில்தான் இந்தியா முழுவதும் மகாத்மாகாந்தி விரும்பி பயணித்தது போன்ற விவரங்களை போட்டோ கேலரி விளக்குகிறது.

பரந்து விரிந்த பசுமையான பரப்பில் நீராவி என்ஜின் முதல் ஊட்டி மலை ரயில் வரையிலான கோச்சுகள் புது வண்ணம் பூசி நிற்கின்றன. அதிலும் ஊட்டி மலை ரயில் பல் சக்கரத்தை பிடித்தபடி எப்படி மலையேறுகிறது என்பதை இங்கே போனால் புரிந்து கொள்ளலாம்.

குழந்தைகளை குஷிப்படுத்த ஜாய் டிரெய்ன் உள்ளது. டார்ஜிலிங் ரயில் என்ஜின் உள்ளிட்ட என்ஜின்கள், கோச்சுகளை பார்த்தபடி, சுரங்கத்தினுள் நுழைந்தபடி 500 மீட்டர் தூரம் ரயிலில் குஷியாக பயணிக்கலாம், பயணத்தின் ஆரம்பத்தில் பெரியவர்ளாக இருப்பவர்கள் பயண முடிவில் குழந்தைகளாக மாறிவிடுவார்கள்.

இதே போல மாடல் ரயில்கள் ஒடுகின்றன, சிக்னல் செயல்படும் விதம் குறித்து மாதிரி மின்சார ரயில்களை ஒடவிட்டு காட்டுகிறார்கள், அருமையாக உள்ளது. பராம்பரிய பொருட்கள் கூடத்தில் 134 வருடத்திற்கு முந்திய கடிகாரம் இன்னமும் துல்லியமாக நேரம் காட்டியபடி ஒடிக்கொண்டு இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.

குழந்தைகள் விளையாட இரண்டு மைதானங்கள் உள்ளன. நீங்களே சாப்பாடு கொண்டு வந்து பசுமையான குடும்பத்தோடு சாப்பிடுவதே ஒரு சந்தோஷமான அனுபவம்தான்.

கடந்த 2002-ம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த ரயில் மியூசியம் இந்தியாவில் ஐந்தாவதாக விளங்குகிறது. இதனை முதன்மையான மியூசியமாக்கும் முயற்சியில் கியூரேட்டர் வி.கல்யாண சுந்தரம் தலைமையிலான ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இன்னும் கொஞ்ச நாளில் இங்கே நிறைய மாற்றங்கள் வர உள்ளன. வரும் பார்வையாளர்களுக்கு தேவையான வசதிகளும் நிறைய செய்து கொடுக்கப்படும், அப்புறம் பாருங்க இந்த மியூசியத்திற்கு திரும்ப, திரும்ப வருவீங்க என்கின்றனர் நம்பிக்கையுடன்.

தண்டாவாளத்தின் ஸ்லீப்பர் கட்டைகள் ஏன் வளைந்து காணப்படுகின்றன? முன்பெல்லாம் ஒடும் ரயிலில் இருந்தபடியே ஒரு வளையத்தை ஒட்டுனர்கள் லாவகமாக வாங்குவார்களே அது என்ன? என்பது போன்ற கேள்விகளுக்கு இங்கே வழிகாட்டியாகவரும் ஊழியர்கள் தெளிவான விளக்கம் தருகிறார்கள். நீங்கள் காது கொடுத்து கேட்பீர்கள் என்றால் போர் காட் என்ற வெளிநாட்டு பெண்தான் இந்தியாவின் முதல் ரயில் தண்டாவாளத்தை உருவாக்கினார் என்பதும், இரவில் ஸ்டேசனில் வந்து நிற்கும் ரயிலின் ஜன்னல், ஜன்னலாய் நிலைய பணியாளர் ஒருவர் லாந்தர் விளக்கை பிடித்தபடி நிலையத்தின் பெயரை உரக்க கூவியபடியே செல்வார் என்பது போன்ற பழங்கால சுவாராசியமான கதைகள் சொல்வார்கள்.

வாரத்தில் திங்கள் கிழமை விடுமுறை, மற்ற நாட்கள் காலை 10.30 மணி முதல் மாலை 5.30 மணிவரை மியூசியம் திறந்து இருக்கும். அனுமதி கட்டணம் 10 ரூபாய். மேலும் விவரங்களுக்கு போன் எண்:044-26201014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *