மதுரை: சைக்கிள் “ஹேண்ட் பாரை’ பிடித்துக் கொண்டும், இடுப்பை வளைத்துக் கொண்டும் ஓட்டினாலும்கூட, சில சமயங்களில் கீழே விழுந்து மண்ணை கவ்வ வேண்டியிருக்கும். ஆனால், இளைஞர் ஒருவர் 50 கி.மீ., தூரம் வரை, சைக்கிளில், “ஹேண்ட் பாரை’ பிடிக்காமல், ஓட்டியபடி ஓவியம் வரைந்து அசத்துகிறார். அந்த சாதனைக்கு சொந்தக்காரர்
மதுரையைச் சேர்ந்த கூடல்கண்ணன், 30. கூடல்புதூரைச் சேர்ந்த இவர், ஒரே நேரத்தில் இரு கைகளால் எழுதுவது, தலைகீழாக எழுதுவது என ஏற்கனவே சாதித்தவர். கல்லூரிகளில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக உள்ள இவருக்கு, இந்த சைக்கிள் சாதனை ஆசை எப்படி வந்தது? “”எனக்கு சைக்கிள் ஓட்டுவதில் ஆர்வம் அதிகம். தென்மாநிலங்களில் சைக்கிளில் ஊர் சுற்றி வந்து உள்ளேன். சைக்கிள் ஓட்டியவாறு ஓவியம் வரைந்தால் என்ன? என சிந்தித்தன் விளைவுதான், இன்று 50 கி.மீ., தூரம் நிற்காமல் சைக்கிள் ஓட்டியபடி இரு கைகளாலும் மாறி மாறி ஓவியம் வரைகிறேன். தவிர, சைக்கிளின் முன் படுக்கை வசம் உள்ள “பாரில்’ அட்டையை இணைத்து, அதில் இரு கைகளாலும் ஓவியம் வரைகிறேன். ஒரு வேலையை கவனமாக செய்ய வேண்டும் என்பதை, இச்சாதனை எனக்கு உணர்த்தியது,” என்றார் கூடல்கண்ணன்.
– தினமலர்