(பி. எம். கமால், கடையநல்லூர் )
வித்தகன் உன்திருப் புத்தகத் தத்துவம்
விளங்கிட அருள் புரிவாய் !
நித்தமும் மொத்தமாய் நின்திருப் பெயரையே
நினைந்திட அருள் புரிவாய் !
உத்தமத் திருநபி உளத்தினில் என்னுளம்
உறைந்திட அருள் புரிவாய் !
பித்தனாய் உன்னையே பற்ரிடப் பரமனே
பெரிதுமே எனக்கருள்வாய் !
விளங்கிட அருள் புரிவாய் !
நித்தமும் மொத்தமாய் நின்திருப் பெயரையே
நினைந்திட அருள் புரிவாய் !
உத்தமத் திருநபி உளத்தினில் என்னுளம்
உறைந்திட அருள் புரிவாய் !
பித்தனாய் உன்னையே பற்ரிடப் பரமனே
பெரிதுமே எனக்கருள்வாய் !
நோயினில் படுத்துடல் நொம்பலப்ப டாமலே
நோயிலா வாழ்வருள்வாய் !
பாயினில் படுத்திடும் போதிலும் உன்பெயர்
பரவிடர்க கருள்புரிவாய் !
சேய்எனை உன்திருக் கலிமாவே தாலாட்ட
செய்தெனக் கருள்புரிவாய் !
போய்விளை யாடும்புல் வெளியிலும் மனமொத்
துருகிட அருள்புரிவாய் !
தரையெலாம் முசல்லாவாய்த் தந்தவன் உன்னையே
தலைவ ணங்கிட அருள்வாய் !
கரையிலாக் கருணையின் கடலான உன்திருக்
கருணையா லருள் புரிவாய் !
குறைவிலா வாழ்வெனக் கொடுத்துநீ உன்னருள்
கொண்டெனக் கருள் புரிவாய் !
மறைவிலாப் பிறையென மஹ்மூது நபிதந்த
மன்னவா எனக்கருள்வாய் !
மரணத்தின் வாயிலில் மன்னவா! உன்திருக்
கலிமாவி னாலருள்வாய் !
இரணத்தின் ஒவ்வொரு இடுக்கிலும் உன்னருள்
இருந்திட அருள் புரிவாய் !
சிரமத்தில் நீவந்து கைகொடுத் தெனையாண்டு
கைதூக்கி அருள் புரிவாய் !
மரம்அற்றுப் போகாமல் வேராக நீவந்து
கிளைஎலாம் கனி யருள்வாய் !
பாலையில் விதைக்கின்ற பாவிநான் நீவந்து
பயிராக்க அருள் புரிவாய் !
சோலைநீர்ச் சுனையாக சுவனப் பூமலராக
சூழவந் தருள் புரிவாய் !
காலையில் விழித்தெழ கடைமைகள் முடித்திட
கருதி எனக் கருள்வாய் !
மாலையில் இரவினில் மன்னவா! உன்நினை
வோடிருக்க வும்அருள்வாய் !
கனவினில் நபியினைக் கண்டுமு ஸாபஹா
கொடுத்திட அருள் புரிவாய் !
நினைவினில் நெஞ்சினில் நித்தமும் ஸலவாத்
நினைந்திட அருள் புரிவாய் !
உணவினைக் குறைத்துஉன் நினைவினைப் பெருக்கிட
உள்ளத்தில் அருள் புரிவாய் !
பணமிலா ஏழையாய்ப் படைத்தவா! உன்னருட்
பணத்தினைத் தந்தருள்வாய் !
உப்புநீர்க் கடலிந்த உலகத்தில் மீனாக
உருவாக எனக் கருள்வாய் !
ஒப்புவமை இல்லாத ஓரிறையே! எந்தன்
உள்ளத்தில் வந்தருள்வாய் !
தப்பிநான் சாத்தானின் சதிவலையில் வீழாமல்
தயவுடன் எனக்கருள்வாய் !
அப்பிடும் இருளழுக் கைவெளுத் துளத்தினில்
அருளொளி தந்தருள்வாய் !
மாசிலா எண்ணமும் மருவிலாச் செயலுமென்
மனத்தினில் தந்தருள்வாய் !
தூசிஇவ் வுலகமென் றெண்ணிடும் உளத்தினை
துய்யனே ! எனக்கருள்வாய் !
ஆசிகள் தந்தெனை ஆதரித் திடும் நபி
ஆதர வெனக் கருள்வாய் !
பாசிகள் பாவமாய் நிறையுமிக் குளத்தினில்
பாதங்கள் காத்தருள்வாய் !
மூச்செனும் கயிற்றினில் மூலவ னேயுனை
மணியாகக் கோர்த்தருள்வாய்!
பேச்செலாம் உன்புகழ் பேசிட நாவினில்
மொழியாக வந்தருள்வாய் !
கூச்சலும் குழப்பமும் கொண்டஇவ் வுலகினில்
மௌனமாம் மொழியருள்வாய் !
மேய்ச்சலில் ஆடுநான் மேய்ப்பவன்நீ பசும்
புல்வெளி தந்தருள்வாய் !
pmkamal28@yahoo.com