இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் திட்ட இயக்குனர் (சந்திரயான் 1 & 2 – இஸ்ரோ – பெங்களூரூ) மற்றும் ”வளரும் அறிவியல்” என்ற காலாண்டு இதழின் சிறப்பாசிரியாருமாகிய டாக்டர். மயில் சாமி அண்ணாதுரை அவர்கள் எழுதிய ”கையருகே நிலா” சுய முன்னேற்ற தன் வரலாற்று நூல் வெளியிட்டு விழா நிகழ்ச்சி 9.3.12 வெள்ளிக்கிழமை மாலை சென்னை – இந்திய ரஷ்யக் கலாச்சார நட்புறக்கழக வளாகத்தில் நடைபெற்றது.
விழாவின், தலைமையினை கவிஞர். சிற்பி பாலசுப்ரமணியன் அவர்கள் ஏற்க, நூலின் முதல் பிரதியை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர். மன்னர் ஜவஹர் அவர்கள் வெளியிட, கவிப்பேரரசு பத்மஸ்ரீ வைரமுத்து அவர்கள் பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியின் ஏற்புரையினை நூலின் ஆசிரியர் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் நிகழ்த்தினார்கள்.
கவிப்பேரரசு பத்மஸ்ரீ வைரமுத்து அவர்களின் உரையின் சில பகுதிகள்.. முழு நேர இலக்கியவாதியாக ஏன்..? மாறவில்லை என்று எனது நண்பர்கள் என்னிடம் கேட்டார்கள். அது முடியாத காரியம்.. நான் பகுதி நேர இலக்கியவாதியாகவும், முழு நேர பாடலாசிரியாகவும் இருக்க தான் விரும்புகிறேன். என்னுடைய பாடல் வரிகளை கேட்டு, உழைக்கும் வர்க்கம் இளைப்பாறுகிறது. அது தான் எனது மகிழ்ச்சி என்றார்.
டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து, நான் எழுதிய இந்த நூல் குங்குமம் வார இதழில் 30 வாரங்கள் தொடர் கட்டுரையாக வெளி வந்தது. அதனை நூல் வடிவத்தில் கொண்டு வர நல்லுள்ளம் படைத்தவர்கள் யோசனை கூறியதால் இந்த முயற்சி. எனது ஊர் மதுரை பக்கம் உள்ள கோதாவாடி கிராமம், இப்போது ஊருக்கு சென்றால் என்னை பெயர் சொல்லி யாரும் அழைப்பது கிடையாது. விஞ்ஞானி என்று தான் எல்லோரும் கூறுவார்கள்.
இந்நிகழ்ச்சியில் சிங்கப்பூர் தமிழ் இலக்கிய வரலாறு (1872 to 2010) என்ற நூலும் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் கழகத்தின் தலைவர் திரு. நா. ஆண்டியப்பன், முன்னாள் டி.ஐ.ஜி. தேவாரம், இளையான்குடி முனைவர் முஹம்மது அலி ஐ.பி.எஸ். (ஓய்வு) முன்னாள் மத்திய சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் பொது செயலாளர் M.A ஜெகபர் அலி, சென்னை M.N.J Group ஹாஜி ஜக்கரியா, முத்துப்பேட்டை மலிக்கா ஃபாரூக், மற்றும் பல பிரமுகர்கள் கலந்துக்கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாடுகளையும் சென்னை – கலாம் பதிப்பகத்தினர் (முஸ்தபா தமிழ் அறக்கட்டளை நிறுவனம்) மிக சிறப்பாக செய்து இருந்தனர்.
கலாம் பதிப்பகத்தின் முகவரி :
6. இரண்டாவது முதன்மை சாலை,
சி.ஐ.டி. காலணி, மைலாப்பூர் சென்னை – 4
போன் : 044 24997373
மின்னஞ்சல் : kalampathipagam@gmail.com