நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:
எவர் என்னுடைய மரணத்திற்குப் பிறகு என்னை ஜியாரத் செய்வாரோ, அவர் என்னுடைய வாழ்நாளில் என்னை ஜியாரத் செய்தவர் போலாவார். – தப்ரானீ
கண்ணியம் பொருந்திய நபி(ஸல்) அவர்கள் இருக்கும் மதீனா நகரம் புனிதமானது. மிகுந்த பணிவோடும், கண்ணீரோடும் உள்ளம் நெகிழ்ந்த நிலையில் அந்நகரில் பிரவேசிக்க வேண்டும். அதிகமாக ஸலவாத் ஓதிக்கொண்டே இருக்க வேண்டும். மதீனாவாசிகளிடம் கனிவோடு பேச வேண்டும். மதீனாவில் பொருட்கள் ஏதேனும் வாங்கினால் பேரம் பேசாமல் பெருந்தன்மையோடு நடந்து கொள்ள வேண்டும் ஏனெனில்,
நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:
எவன் மதீனாவாசிகளுக்குத் துன்பம் விளைவிக்கிறானோ, அவனுக்கு அல்லாஹுதஆலா துன்பம் விளைவித்துவிடுவான். இன்னும் அம்மனிதன்மீது அல்லாஹுத்தஆலாவுடைய சாபமும், மலக்குகளுடைய சாபமும், உலக மனிதர்கள் அனைவரின் சாபமும் உண்டாவதாக ! – தர்கீப்
நபி(ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து நிராதரவான நிலையில் ஹிஜ்ரத் செய்து மதீனாவில் நுழைந்தவுடன், மதீனாவாசிகள் உயிராலும்,பொருளாலும், எல்லா வகையான உதவிகளையும் செய்து ‘அன்ஸார்கள்’ (உதவி செய்பவர்கள்) என்று நபி(ஸல்) அவர்களால் அழைக்கப்பட்டார்கள். ஆகவே, நாம் மதீனாவாசிகளிடம் உபகாரத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.
நபி(ஸல்) அவர்களின் முபாரக்கான சமூகத்தில் நின்று, அண்ணலார் அவர்களுக்குப் பணிவாக ஸலாம் கூற வேண்டும். மேலும், ஹழ்ரத் அபூபக்கர் (ரலி), ஹழ்ரத் உமர் (ரலி) ஆகிய இருவரும் அண்ணலாரின் அருகிலேயே இருப்பதால் அவர்கள் இருவருக்கும் பணிவாக ஸலாம் கூறவேண்டும். ஒவ்வொரு பர்ளான தொழுகைக்குப் பிறகும் ஸலாம் கூறுவது விரும்பத்தக்கது.
நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:
எவர் என்னை ஜியாரத் செய்ய வருவாரோ, மேலும் அது அல்லாத வேறு எந்த நிய்யத்தும் அவருக்கு இல்லையானால் அவருக்காக சிபாரிசு செய்வேன்.
அமீருல் முஃமினீன் ஹஜ்ரத் அலீ (ரலி) அவர்களிடம் நபி(ஸல்) அவர்களை எவ்விதம் நேசித்தீர்கள்? என வினவப்பட்டது. அதற்கு அவர்கள், ‘நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்கு எங்கள் பொருட்களை விடவும் எங்கள் பிள்ளைகள், எங்கள் பெற்றோர்களை விடவும் எங்களுக்கு மிகவும் பிரியமானவர்களாக இருந்தார்கள். மேலும் கடும் தாகத்தின் போது கிடைக்கும் குளிர்ந்த நீரை விடவும் அவர்கள் எங்களுக்கு மிகப் பிரியமானவர்களாக இருந்தார்கள்’ எனக் கூறினார்கள்.
ஹஜ்ரத் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
உஹதுப் போரில், ஹஜ்ரத் அபூதல்ஹா (ரலி) அவர்கள், நபி(ஸல்) அவர்களின் முன்னிலையில் எதிரிகளின் மீது அம்பு வீசிக் கொண்டிருந்தார்கள். ஹஜ்ரத் அபூதல்ஹா (ரலி) அவர்கள் அவர்களுக்கு முன்னால் இருந்தார்கள். அபூதல்ஹா (ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்குக் கேடயமாக இருந்து அவர்கள் மீது அம்பு பாய்வதை விட்டும் தடுத்துக் கொண்டிருந்தார்கள்.
ஹஜ்ரத் அபூதல்ஹா (ரலி) அவர்கள் அம்பு எய்வதில் திறமையானவர்களாக இருந்தார்கள். அவர்கள் அம்பு எய்தினால் அவர்களின் அம்பு எங்கெங்கு சென்று விழுகிறது? என நபி(ஸல்) அவர்கள் தங்கள் பார்வையை உயர்த்திப் பார்ப்பார்கள். அதே போன்று நபி(ஸல்) அவர்களை நோக்கி அம்பு வந்தால், அதைத் தடுத்து நெஞ்சை உயர்த்தித் தாங்கிக் கொள்வார்கள்.
அப்பொழுது, ‘யாரஸுலல்லாஹ் ! என் தாயும், தந்தையும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும் ! தங்களின் மீது அம்பு படாமல், என் கழுத்து தங்களின் கழுத்துக்கு அருகிலேயே இருக்கும்’ என்று கூறிவிட்டு மேலும் ‘யாரஸுலல்லாஹ் ! நிச்சயமாக நான் பலசாலியாக உள்ளேன். தங்களுடையத் தேவைகளுக்கு என்னை அனுப்பி வையுங்கள். தாங்கள் நாடியதை எனக்கு ஏவுங்கள்’ என்று ஹஜ்ரத் அபூதல்ஹா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
இவ்வாறு ஸஹாபாக்கள் நபி(ஸல்) அவர்களைத் தங்களின் உயிரைவிட மேலாக நேசித்தார்கள்.
நபி(ஸல்) அவர்களை நாம் நம் உயிரை விட மேலாக நேசிக்க வேண்டும். அவ்வாறு இல்லையானால், அவர் பரிபூரண மூஃமினாக மாட்டார். ஹஜ்ஜுக்குச் செல்லும் ஹாஜி மதீனா சென்று நபி(ஸல்) அவர்களை உள்ளன்போடு ஜியாரத் செய்ய வேண்டும்.
மக்காவில் உள்ள ஜன்னத்துல் முஅல்லா என்ற அடக்க ஸ்லத்திற்குச் சென்று ஸஹாபாக்களையும், தாபிஈன்களையும் ஜியாரத் செய்து கொள்ள வேண்டும். நபி(ஸல்) அவர்களின் பிரியத்திற்குரிய துணைவியார், அன்னை ஹழ்ரத் கதீஜா (ரலி) அவர்களும் இங்கேயே அடங்கப் பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மதீனாவின் மஸ்ஜிதுன்நபவி எதிரில் ஜன்னத்துல் பகீஃ என்ற அடக்கஸ்தலம் அமைந்துள்ளது. நபி(ஸல்) அவர்களின் துணைவியர்களும் அடங்கியுள்ளனர். இன்னும் ஸஹாபாக்களும் அங்கு தான் அடங்கியுள்ளனர். அங்கே நின்று அனைவருக்கும் ஸலாம் உரைத்து ஜியாரத் செய்து கொள்ள வேண்டும்.
( இஸ்லாம் டைரி – அக்டோபர் 2011 இதழிலிருந்து )
இஸ்லாம் டைரி மாத இதழ்
எண் 12, ஜி.டி.எண். சாலை
திண்டுக்கல் – 624 005
அலைபேசி : 96552 78600
தொலைபேசி : 0452 – 2432255
மின்னஞ்சல் : islaamdiary@gmail.com
ஆசிரியர் : எஸ். காஜா முஹைதீன்
ஆண்டுச் சந்தா ரூ. 200