நன்றி – கி.சீனிவாசன் தினமணி 02.12.2003
வெற்றி பெற வேண்டும் என்று ஆசைப்படும் நாம் தோல்வியைப் பற்றியே தொடர்ந்து எண்ணிக் கொண்டிருக்கலாமா? பலர் ஒரே ஒரு தோல்விக்குப் பிறகு எழ முடியாமல் முற்றிலும் வீழ்ந்துவிடுவுது எதனால்? தோல்வி நிலையானது நமக்கு மட்டுமே வருகிறது. ஏதோ கடவுள நம்மையே தேர்ந்தெடுத்துத் தோல்வியைத் தருவதாக நாமே கற்பனை செய்து கொண்டு நம்மை நாமே துன்பக்கடலில் ஆழ்த்துகின்றோம். குணம், நடத்தை, கண்ணோட்டம், மனப்பான்மை ஆகியவை முற்றிலும் வேறுபடுவதை உற்று நோக்கினால் மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை உணர்வோம்!
மனப்பான்மை, ஆகியவை முற்றிலும் வேறுபடுவதை உற்று நோக்கினால் மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை உணர்வோம்.
நாம் விரும்பியதை அடையவேண்டுமென்றால் நம் நம்பிக்கை அமைப்பை மாற்ற வேண்டும். ஒன்றை முடியாது என்று நினைக்கும்போது நம் மூளையின் நரம்பு மண்டலத்திற்கு ‘முடியாது முடியாது’ என்னும் செய்தியைத் தொடர்ந்து அனுப்புகிறோம். அந்தச் செய்தியே, செய்து முடிக்கும் திறைமையைக் கட்டுப்படுத்துகிறது அல்லது அழித்து விடுகிறது.
இதற்கு மாறாக ‘நம்மால் முடியும்’ எதையும் சாதிக்க இயலும் என்னும் நம்பிக்கைச் செய்தியை அனுப்பினால் முடிப்பதற்குத் தேவையான திறமையும் ஆற்றலும் நம்மிடம் பெருவது மட்டுமின்றி, முடிப்பதற்குச் சாதகமான சம்பவங்களும் நம் சூழ்நிலையில் உருவாகும். பிரபஞ்ச அறிவு, வெற்றியை நோக்கி நடைப்பயணம் மேற்கொள்ள வைக்கும்.
நம்பிக்கை என்பது வெறும் கோட்பாடல்ல. அது செயல் பிறக்கும் ஊற்றுக்கண் நம்பிக்கை, தானாகவே குறிக்கோளை நோக்கி நம்மை செயல்படத் தூண்டும். எதை உண்மை நம்புகிறோம். அது உண்மையாக மாறத் தொடங்குகிறது.
ஆர்வமுள்ள தொண்ணூற்றொன்பது பேருக்கு நம்பிக்கை உள்ள ஒருவன் சமமாவான் என்று ஜான் ஸ்டுவர்ட் மில் கூறுகிறார்.
நம்பிக்கை நம் மூளைக்கும், நரம்பு மண்டலத்திற்கும் நேரடியாகக் கட்டளை இடுகிறது. நம் குறிக்கோளை அடைவதற்கு வழியைக் காட்டுகிறது. அதை அடைவதற்கு வழியைக் காட்டுகிறது. அதை அடைவதற்குத் தேவையான சக்தியையும் உருவாக்கித் தருகிறது. நம் குறிக்கோளை அடைய வேண்டுமென்றால், நம் நடத்தைகள் மாற வேண்டும். நடத்தைகள் மாற வேண்டுமென்றால், முதலில் நம்பிக்கைகள் மாற வேண்டும்.
நாம் பேசும் பேச்சை நாமே ஆராய வேண்டும். நம் சொற்கள் அவநம்பிக்கை, பயம், கவலை அடிப்படையில் தொடர்ந்தால் அதன் அடிப்படையிலேயே வாழ்க்கையும் அமையும். நம்பிக்கை, துணிவு, மகிழ்ச்சி என்னும் அடிப்படையில் நம் பேச்சை மாற்ற வேண்டும். பிறரை வாழ்த்துவதும் பாராட்டுவதும் பெரியோர்களின் ஆசியைப் பெறுவதும் இதன் அடிப்படையிலேதான். தோல்விகளைத் தூக்கியெறிந்து மாபெரும் வெற்றியை அடைய இரண்டே வழிகள் உள்ளன. ஒன்று ஆட்டோ சஜசன் மற்றொன்று மனச் சித்திரம். ‘என்னால் முடியும்’ என்ற முற்போக்கு எண்ணங்களை அதிகாலையிலும் இரவிலும் அவ்வப்போது நேரம் கிடைக்கும்போதும் சொல்லிக்கொண்டே வந்தால், நம்பிக்கை அடிப்படையில் நம் எண்ணம் மாறிவிடும். ஆட்டோ சஜசனைத் தொடர்ந்து செய்யும்போது இன்றைய நிலையில் முடியாது என்று நமக்குத் தோன்றுகிற ஒரு காரியம் முடியும்.. முடியும் என்னும் செய்தியைத் தொடர்ந்து நம் ஆழ் மனதிற்குள் பதிய வைத்தோமானால், எதை நினைக்கின்றோமோ அது நம்மிடம் வந்து சேர்ந்துவிடும். எதிர்மறைச் சொற்களையே பேசிக் கொண்டிருந்த நாம் மற்றிலும் புதிய மனிதராக நேர்முக மனிதராக மாறிவிடுவோம்.
தயக்கம், கூச்சம், பயம், தள்ளிப்போடுதல், தாழ்வு மனப்பான்மை, சோம்பல் ஆகியன நம் செயல்பாட்டில் குறுக்கிடுகின்றன.
தோல்வி வரும்போது பீதியோடும் கவலையோடும் புற உலகத்தை உற்று நோக்குகிறோம். சிலர் மட்டும் வெற்றிகரமாகச் செயல்படுவதை ஏக்கத்தோடு பார்க்கிறோம்.
நம் தோல்விக்குக் காரணம் ஆழ்மனத்தில் பதிந்துள்ள நம்பிக்கைக் குறைவும், அவநம்பிக்கை அடிப்படையிலான செயல்பாடும் செயல்திட்டங்களும்தான்.
நம் செயல்பாட்டில் நடவடிக்கையில் தயக்கம் இருக்கின்றதா? இந்த நிமிடத்திலிருந்து எதிலும் தயக்கம் இன்றிச் செயல்படுவேன் என்று உறுதியோடு சபதம் எடுப்போம். கூச்சம் இருக்கிறதா? பயம் இருக்கிறதா? தள்ளிப்போடும் வழக்கம் இருக்கிறதா? சோம்பல் இருக்கிறதா? என்று சுய பரிசோதனை செய்வோம்.
ஒவ்வொரு பலவீனத்தையும் படிப்படியாக நீக்கிவிட்டதாக நம்புவோம். பலவீனங்கள் படிப்படியாக நம்மைவிட்டு நீங்குவதை நாமே உணர்வோம்.
சுய பரிசோதனை மூலம் நம் செயல்பாடுகளில், செயல்திட்டங்களில் உள்ள அனைத்து எதிர்மறை அம்சங்களையும் அடையாளம் கண்டுவிட முடியும்.
கடந்த காலத்தில் நாம் பல தோல்விகளை அடைந்திருக்கலாம். சோர்ந்து போயிருக்கலாம். மனமுடைந்து போயிருக்கலாம்.
ஆயினும் மீண்டும் ஒரு குறிக்கோளை நிர்ணயித்துக் கொண்டு, எண்ணத்தையும் பேச்சையும் செயல்பாட்டையும் மாற்றி அமைத்து மாபெரும் வெற்றி அடைய நம்மால் முடியும்.
‘மாபெரும் வெற்றிக்கு மாற்றமே அடிப்படை’ தெளிவுபெற சிந்திப்போம்!