பதறிய மனது பாழ்
ஓரிறையை எண்ணும் இதயத்தை கறையாக்க
ஒழிந்திருக்கும் சைத்தானே ஒதுங்கு !
அருளூற்றாம் நல்இறையின் நிறைந்திட்ட கருணையை
பெறுவதற்கே தொழுதிட்டேன் பொழுதும் !
அருளூறும் இதயத்தை அகந்தையால் பூட்டியே
அல்லல்படும் மனிதா அறிந்திடு !
பொருளீட்டி வாழ்வதையே தொழிலாக எண்ணி
அருளாளன் பாதையை மறவாதே !
ஒரு நாளில் பல நாளாய் செயல்பட்டே நீயும்
புதுநாளை வரவேற்க புறப்படு !
திருவான இறைவனை தினமும்நீ தொழுது
மறுவாழ்வுக்கு நன்மை குவித்திடு !
கல்வியும் ஒழுக்கமும் கலந்திட என்றும்,
பல்வினை உன்னையே பற்றாது !
பசிக்கு உணவையும் பாசத்தில் பரிவையும்
தவிக்கும் மக்களுக்கு தந்திடு !
சிந்தித்து எதிலும் செயல்படுதல் வரும்
நிந்தனையை தடுக்கும் நிமிர்ந்து !
பந்தலுக்கு மூங்கில் காலாகும், வாய்ப்
பந்தலுக்கோ மனமே பயிராகும் !
உதவிய உள்ளத்தை உடைத்தே, வார்த்தை
கதவினை திறப்பதா கனிவு?
நம்பிக் கடன்கேட்டு நாணயத்தை பெற்று
நாநயம் பிறழ்வது நயமா?
சிதறிய தேங்காயும் நல்லுணரவுக் குதவும்
பதறிய மனதோ பாழ் !
பொன்னகரம், கவிஞர். எம். சுல்தான்.
சென்னை – 21
( சம உரிமை – மே 2010 இதழிலிருந்து )