பார்வை தெரியாதவர்கள் பாதை காட்டுகிறார்கள்.. !

இலக்கியம் கட்டுரைகள்

 

இளையான்குடியில் எத்தனையோ சாதனையாளர்கள் பார்வையிலும், மக்களின் பார்வையிலும், கவனத்திலும் தங்களுடைய செயல்பாடுகளை பதிவு செய்தார்கள். செய்து வருகிறார்கள். அவர்களில் நம் கவனத்திற்கு வராமல் சப்தமில்லாமல் மட்டுமல்லாது பார்வையில்லாமலும் தங்களின் திறமைகளை நிரூபணம் செய்து வருகிற நண்பர்கள் இவரின் சாதனைகளை நம் இளைய தலைமுறையினருக்கு அறிமுகம் செய்யவே இவர்களின் அறிமுகம்.

ஒருவர் பிறவியிலே பார்வை இழந்தவர் முகமது ஹக்கீம் மர்ஹூம் தென்மலைக்கான் முகமது ஆரிப் அவர்களின் மகன். சாலைகிராமம் அரசு உயர்நிலைப்பள்ளியில் வரலாற்று ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.

மற்றொருவர் திருப்புவனத்தைச் சேர்ந்த முகமது ஷபி, இளையான்குடி அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியர். இவர் எட்டு வயதில் ஏற்பட்ட மூளைக் காய்ச்சலால் பார்வை இழந்தவர்.

எல்லா வசதி வாய்ப்புகளையும் பெற்ற எத்தனையோ பலர் கல்வி கற்க ஆர்வமில்லாமல் பிறகு பொருளாதாரம் முற்றிலும் இழந்தவர்களாக விரக்தியில் நாட்களை கழித்து வருகின்றனர். அவர்களுக்கு மத்தியில் இறைவனின் மிகப்பெரும் கொடையான பார்வையை இழந்தும் கூட, மாணவப் பருவத்தில் பல வகையான துன்பங்களையும், பொருளாதார கஷ்டங்களையும் சந்தித்து படித்து இன்று பார்வை இழந்தவர்களாக எத்தனையோ பேர்களுக்கு பாதை காட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ஒரு சேர தென்மலைக்கான் தெருவில் உள்ள ஹக்கீம் வீட்டில் சந்தித்தோம்…!

இனி அவர்களுடன் …

உங்களின் குழந்தைப் பருவம் பற்றி?

அப்துல் ஹக்கீம் : நான் பிறக்கும் பொழுதே எனக்கு பார்வை கிடையாது. பார்வையிழந்த நான் குழந்தை பருவம் முதல் 13 வயது வரை வீட்டிலேயே எனது குடும்பத்தினர் அரவணைப்பில் பள்ளிக்கு போகாமல்தான் இருந்தேன்.

முகமது ஷபி : நான் பிறந்து மூன்று வயது வரை இந்த உலகத்தை ரசித்தவன், மூன்றாவது வயதில் ஏற்பட்ட மூளைக் காய்ச்சலால் எனக்குப் பார்வை இல்லாது போனது.

நீங்கள் எப்படி கல்வி கற்றீர்கள் ..?

அப்துல் ஹக்கீம் :  நான் பிறந்து 13 வயது வரை பள்ளிக்குப் போகவில்லை. எனது அம்மாவின் தகப்பனார் தங்கக்கம்பி அப்துல் காசிம் அவர்கள் என்னை பள்ளியில் சேர்த்துவிட மிகுந்த ஆர்வம் காட்டி பள்ளியில் சேர்த்தார். பள்ளிப் படிப்பை முடித்து சென்னை கிருஸ்டியன் கல்லூரியில் B.A., முடித்து NIVH ல் ஒரு வருட சிறப்பு பயிற்சியும் கற்றுள்ளேன். 2002- ல் தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். 2003-ல் B.Ed., முடித்தேன். பிறகு 2007 லிருந்து ஆசிரியராகப் பணிபுரிகிறேன்.

முகமது ஷபி : நான் 8 வயதில் மூளைக்காய்ச்சல் மூலம் பார்வை  இழந்ததால் அடுத்த மூன்று வருடம் படிக்க முடியவில்லை. பிறகு படிக்க ஆரம்பித்தேன். மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் B.A., முடித்து 2007-ல் சென்னை திருவள்ளுவர் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் B.Ed., முடித்தேன். 2010 லிருந்து இளையான்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

உங்களின் குடும்ப சூழல் பற்றி ?

அப்துல் ஹக்கீம் : எனது தகப்பனார் தென்மலைக்கான் முகமது ஆரிபு அவர்கள் மலேசியாவில் இருந்தாலும் குடும்ப சூழல் சற்று சிரமமாகத்தான் இருந்தது. எனது தகப்பனார் இறந்த பிறகு நிலைமை இன்னும் மோசமானது. இந்நிலையில் இளையான்குடியில் கூட்டுறவு வங்கியில் பணிபுரியும் எனது அண்ணன் இப்ராஹிம் அவர்கள் எங்கள் குடும்பத்தை திறமையுடன் வழி நடத்தினார். எனது கல்விக்கும் இந்த உயர்விற்கும் முழு காரணம் எனது தகப்பனார் ஸ்தானத்தில் இருந்து என்னையும் எனது குடும்பத்தையும் காத்த எனது அண்ணன் தான்.

முகமது ஷபி : திருப்புவனத்தில் உள்ள ஏழை குடும்பம் எனது குடும்பம். எனது தகப்பனார் கீரை வியாபாரம் செய்து வந்தார். அந்த வருமானத்தில் தான் எங்கள் குடும்பம் நகர்ந்தது. நான் சிறு பிள்ளையாக இருக்கும்போதே எனது தகப்பனார் இறந்து விட்டார். தொடர்ந்து கஷ்டம் இருந்தாலும் எனது தாயாரின் உதவியால் படித்து வளர்ந்தேன்.

உங்கள் முன்னேற்றத்திற்கு உதவியவர்கள் பற்றி ?

அப்துல் ஹக்கீம் : பலர் உதவியிருந்தாலும் எனது தாய், அவரின் தகப்பனார், தங்கக்கம்பி அப்துல் காசிம் இவர்களுக்கு மேலாக எனது அண்ணன் முகமது இபுராஹிம் ஆகியோர். எனது மனைவியும் 10 ஆண்டுகளாக என்னுடன் நிழலாக இருந்து வருகிறார்.

முகமது ஷபி : எனது குடும்ப நண்பர் கேசவராஜ் இவரும் பார்வையற்றவர். பேராசிரியர் முகமது கான், மற்றும் ராஜேஸ்வரி இவர்கள் எனது முன்னேற்றத்தின் படிக்கற்கள். தற்பொழுது என் மனைவி ஆஷா தான் எல்லாவகையில் என்னை ஊக்கமளித்து உற்சாகமூட்டுகிறார்.

கல்வி தவிர பிற துறைகளில் ஆர்வம் உண்டா ?

அப்துல் ஹக்கீம் : செஸ் விளையாட்டில் சாதித்து இருக்கிறேன். மாநில அளவில் கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்ற செஸ் போட்டியில் வென்றுள்ளேன்.

முகமது ஷபி : 2010 ஆம் ஆண்டு மதுரை, திருநெல்வேலி மாவட்ட செஸ் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளேன். இது தவிர கிரிக்கெட்டிலும் ஆர்வம் உண்டு.

கல்வித்துறையில் உங்களின் சாதனை என்ன ?

அப்துல் ஹக்கீம் : 2010 ம் ஆண்டு 10- ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் நான் நடத்திய சமூக அறிவியல் பாடத்தில் தேர்வு எழுதிய 149 மாணவர்களும் 100 சதவீத வெற்றி பெற்றது எனக்கு பெருமையாக உள்ளது. இதுபோன்ற பல சாதனைகளைத் தொடர விரும்புகிறேன்.

முகமது ஷபி : நான் வேலைக்கு வந்து ஒரு வருடம் தான் ஆகிறது. கண்டிப்பாக இறைவன் உதவியால் இன்னும் சாதிப்பேன். சாதனைக்குப் பிறகு உங்களை இன்ஷா அல்லாஹ் சந்திப்பேன்.

இந்த சமூகத்திற்கும், இளைஞர்களுக்கும் நீங்கள் சொல்ல விரும்புவது ?

  ஊனமுற்றவர்களை புறக்கணிக்காதீர்கள், அவர்கள் உள்ளங்களிலும் உணர்வுகள் வாழ்கின்றன…! இளைஞர்களே … முயற்சி செய்யுங்கள்… இன்றைய காலத்தில் உங்களின் முதல் முதலீடே முயற்சியும் உழைப்பும் தான் என்றனர்

                      இருவரும் ஒரே குரலில்

               இருவரையும் வாழ்த்தி விடை பெற்றோம் .

–    ஆசிரியர் குழு  

நன்றி : இளையான்குடி மெயில் – ஜனவரி 2012

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *