( பேராசிரியை ஹாஜியா கே. கமருன்னிஸா அப்துல்லாஹ் எம்.ஏ., பி.டி., )
“நிச்சயமாக உங்கள் மீது காவலர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் இரு கண்ணியம் வாய்ந்த எழுத்தாளர்கள். நீங்கள் செய்வதை எல்லாம் அவர்கள் (தவறாது) அறிந்து (எழுதிக்) கொள்வார்கள்”.
-அல் குர்ஆன் (82:10-12)
அல்லாஹுஜல்லஷானஹுத்தஆலா இத்திருவசனத்தில் இரு கண்ணியம் வாய்ந்த எழுத்தாளர்களாக கிராமன் காத்திபீன்களை குறித்து பேசுகிறான். நன்மையை எழுதுபவர் மனிதனின் வலப்புறத்தோள் மீதும், தீமையை எழுதுபவர் இடப்புறத்தோள் மீதும் அமர்ந்து கண்காணிப்பர். ஒருவர் ஒரு நன்மை செய்யின் அதனை பத்து முறை எழுதுவார். மனிதன் தீமை செய்யும் போது நன்மையை எழுதும் வானவர் இடப்புறம் இருப்பவரை நோக்கி “இப்போது தீமையை எழுதாதீர், பொறுத்திரும், அவர் வருந்தி தெளபா செய்கிறாரா என்று கவனிப்போம், பாவமன்னிப்பு கோரா விட்டால் அத்தீமையை ஒரு பாவமாக எழுதி விடுங்கள்” எனக்கூறுவார். நன்மைக்கு பத்து மடங்கு நற்கூலியும் (மதிப்பெண்களும்) தீமைக்கு குறைவான ஒரே ஒரு மதிப்பெண்ணும் வழங்கப்படுவதால் இறைவன் எந்தளவுக்குக் கருணையாளன் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
இந்த செயல்களின் குறிப்பேட்டுக்கு ஸஹ்ஃபத்துல் அஃமால் என்று பெயர். இதனை ஒவ்வொரு மனிதனின் கழுத்திலும் மாட்டி இருப்பதாகவும், நியாயத்தீர்ப்பு நாளில் அவனையே படித்துப் பார்க்கும்படி கட்டளையிடப்படும் எனவும் கூறப்படுகிறது.
குற்றவாளிகளை கண்டுபிடிக்க தற்காலத்தில் எத்தனையோ உபாயங்களை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஒரு மனநோயாளியின் மனநிலையை அறிய ஹிப்னாட்டிஸம் பயன்படுகிறது. ஒரு கைதியிடமிருந்து உண்மையை வெளிக்கொண்டு வர நேக்ரோடிக் டெஸ்ட் என்று ஒன்றுள்ளது. மக்கள் கழுத்தில் மாட்டிக் கொண்டு அலையும் அலைபேசிகளே குற்றங்களை கண்டுபிடிக்கும் கருவிகளாக அமைந்து விடுவதுமுண்டு. குற்றவாளிகளை அறிய நெரிசல் நிறைந்த கடைகள், தெருக்கள், காவல் நிலையங்கள், வங்கிகள், ஆகியவற்றில் கண்காணிப்பு கேமிராக்கள், தொலைக்காட்சி பெட்டிகள் பொருத்தப்பட்டுள்ளன. இன்னும் எத்தனையோ நவீன முறைகள் நடைமுறைக்கு வந்து விட்டாலும் குற்றங்கள் என்னவோ பெருகிக் கொண்டே உள்ளன என்பதும், அதற்கான செலவும் ஏகப்பட்டது அப்பட்டமான உண்மை.
ஆனால் மறுமையை நம்பி இறையச்சம் கொண்டு செயல்படுவோருக்கு வானவரின் பதிவேட்டின்படி சுவன வாழ்வு சுபிட்சம் தரும். எல்லா வகையான குற்றங்களும் குறைந்து விடும் என்பதில் ஐயமில்லை.
( குர்ஆனின் குரல் – பிப்ரவரி 2011 இதழிலிருந்து )