உங்களுக்கு இந்தியா வேண்டுமா ? வேண்டாமா ?

இலக்கியம் கவிதைகள் (All)

12.2.2012 அன்று சென்னை லயோலா கல்லூரியில் அணுசக்திக்கு எதிரான பெண்கள் போராட்டக்குழு சார்பில் நடைபெற்ற கவியரங்கில் வாசிக்கப்பட்ட கவிதை. 
___________________________ 
அவன் கொடுப்பதை குடிக்க வேண்டும், 
அவன் தருவதை படிக்க வேண்டும், 
நம் தினச்சாவு கூட – இனி 
அணுச்சாவாகவே அமைய வேண்டும் 
எனும் அமெரிக்க திமிரின் 
ஆதிக்க குறியீடே, 
கூடங்குளம் அணு உலை ! 
போராடும் தமிழகத்தின் 
ஒரு பகுதியாக இக்கவியரங்கம்… 
அனைவர்க்கும் வணக்கங்கள். 
*** 
இடிந்தகரை உணர்ச்சிகள் 
ஒரு கவிதைக்குள் அடங்குமா ? 
தெக்கத்தி உப்புக்காற்றில் 
புதைந்திருக்கும் போர்க்குணங்கள் 
திக்கற்ற அறிவாளிகளின் 
தோலில் வந்து உரைக்குமா ? 
கொலைவெறிக்கு இரையான காதுகள் 
அணுவெறிக்கும் இசையுமென்ற 
ஆளும் வர்க்க ஏளனத்தை, 
கலைத்தெறியும் பெரும் பணிக்கு 
கலைப்பணிகள் துணை சேர்ப்போம் ! 
போராடும் மக்களின் 
உணர்ச்சிகர உண்மைகளை – நாடெங்கும் 
வேரோடச் செய்வதற்கு வேண்டும் 
நிறைந்த கவிதைகளும், 
நிறைய களப்பணியும். 
பக்கத்து மனிதரிடம் 
தெக்கத்தி கதை சொல்வோம்.. 
புன்னையும் புலி நகக்கொன்றையும் 
தென்னையும், வழிகாட்டும் பனையும் 
பால்வடி மாரோடு எங்கள் அன்னையும், 
உன்னையும் என்னையும் காக்க 
உண்ணா நிலையிருக்கும் உண்மையும், 
ப.சிதம்பரம், நாராயணசாமி, கலாமின் 
பாசம் படிந்த உதடுகளில் 
வழுக்கி விழுந்தவர்கள் உணரும்படி, 
பக்கத்து மனிதரிடம் 
தெக்கத்தி கதை சொல்வோம் ! 
நகரத்து பிட்சா காடுகளில் 
நாகரீக மேய்ச்சலிருப்போரே, 
உங்களுக்கும் சேர்த்து தான் 
இடிந்தகரை பட்டினிப்போரில் 
காய்ந்து கிடக்கிறது 
ஒரு தாயின் கருவறை. 
நான் வேறு சாதியென்று 
நழுவ முடியாது நீ ! 
பன்னாட்டு கம்பெனிகளின் 
அணுக்கழிவுகள் 
திண்ணியத்து மலமாய் 
திணிக்கப்படுகிறது உனது வாயில் ! 
கெடுநிலை மத்தியில் 
நடுநிலை இல்லை ! 
இரண்டிலொன்று – 
இடிந்தகரை பக்கம் வந்தால் 
நீ மனிதனாகலாம், 
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பக்கம் போனால் 
காங்கிரசு மிருகமாகலாம் ! 
பொய்கள் ரதமேறி 
புறப்பட்டுவிட்டன, 
உண்மைகள் ஊரடங்கி கிடப்பதுவோ ? 
இனி.. கவிதைகள் 
அரங்கினில் மட்டும் போதாது, 
காங்கிரசு பி.ஜே.பி 
சிரம்களில் செலுத்தப்பட வேண்டும் ! 
அறிந்து கொள்வோம் ! 
அபாயம் 
அணு உலை மட்டுமல்ல, 
அதனை கொண்டுவரும் அரசியல்… 
ஆதரிக்கும் கட்சிகள்… 
காங்கிரசும் – பா.ஜ.கவும் 
ஏகாதிபத்திய இதழ் வழியும் எச்சில்கள் ! 
கைராட்டையாலேயே 
நூல் விட்டவர் காந்தி, 
நாட்டை காட்டிக்கொடுத்த 
நூல் விடுபவர் 
மன்மோகன்சிங் ! 
நேரு, குழந்தைகளுக்குத்தான் மாமா, 
மன்மோகனோ 
இந்த குவலயத்திற்கே மாமா ! 
அமெரிக்க அடிமைத்தனத்தில் 
அத்வானியும், மோடியும் 
பன்னாட்டு கம்பெனி வேள்விக்கு 
வில் பிடிக்கும் ராமா ! 
கனிமொழி ஆபத்தை 
காப்பதே பெரும்பாடு ! 
அணு உலை பாதிப்பில் 
அழியட்டும் தமிழ்நாடு 
இது கருணாநிதி தமிழனின் நிலைப்பாடு ! 
ரொம்பவும் நோண்டிக்கேட்டால் நோ கமெண்ட்ஸ் ! 
அறிவிக்கப்படாத மின்வெட்டால் 
அணு உலைக்கு ஆதரவாய் 
பொதுக்கருத்தை உருவாக்க 
ஜெயலலிதா ஏற்பாடு ! 
அன்னிய மூலதனத்தில் 
கனக்குது அம்மாவின் மடிசாரு ! 
எழுந்து நீ போராடு ! 
இல்லையேல் சுடுகாடு ! 
கோக்கடித்தாலும் விடாது 
அமெரிக்கா சாகடிக்கும், 
நீ.. ஆதரித்தாலும் 
அணு உலை உன்னையும் கொல்லும் ! 
ஈழத்தமிழனுக்கு.. முள்ளிவாய்க்கால் ! 
இந்தியத்தமிழனுக்கு.. கூடங்குளம் ! 
மேலாதிக்க அடையாளங்கள் வேறு, 
நோக்கம் ஒன்று. 
ஒத்துக்கொள்ளாத ஈராக்குக்கு 
குண்டுவீச்சு ! 
ஒத்துக்கொண்ட இந்தியாவுக்கு 
கதிர் வீச்சு ! 
உதவாது வெறும் வாய்ப்பேச்சு.. 
மவுனம் காத்தால் – 
தலைமுறைகளின் சினைமுட்டையில் 
அணுக்கரு வளரும் 
தாயின் மார்பிலும் அணுக்கதிர் சுரக்கும் 
அதையும் குடிக்க எத்தனித்து 
உதடுகள் பிளந்த குழந்தை அலறும் 
பிதுங்கிய விழிகளில் ப்ளூட்டோனியம் வழியும். 
தன்னிறம் மாறும் 
புல்லினம் பார்த்து 
தாழப் பறக்கும் பறவைகள் 
இறக்கைகள் அடித்து குழறும். 
நிலத்தடி நீரும்… நெல்மணி குணமும் 
தென்கடல் உப்பும்… தென்றல் காற்றும் 
கடைசியில் நஞ்சாய் போய் முடியும். 
சம்மதித்தால் – 
அப்துல் கலாம் 
கனவு கண்ட இந்தியா 
உன்னில் புற்று நோயாய் வளரும் 
மன்மோகன்சிங் 
நாட்டை முன்னேற்றும் திசையில் 
தைராய்டு தசைப் பிண்டம் அசையும். 
அனுமதித்தால் – 
அணு உலையும் அணு சார்ந்த படுகொலையும் 
நெய்தல் திணையின் 
முதல் பொருளாய் மாறிவிடும். 
அய்வகை நிலமும் 
அணுக்கழிவின் பிணமுகமாய் ஆகிவிடும். 
இவ்வளவுக்கும் பிறகு – 
நம் இழவெடுத்த மின்சாரம் 
பன்னாட்டு கம்பெனிகளுக்கு, 
இந்தியனாய் இருந்ததற்கு 
அணுமின் மயானம் தமிழகத்திற்கு ! 
செர்நோபில், புகுஷிமா அணுக்கசிவில் 
சிதைந்தொழிந்த முகங்களில் 
பிழைத்திருக்கும் உண்மைகளை பார்த்து 
உலகமே தெளிவுபெறும் வேளையில் 
புதுச்சேரியில் போட்ட சரக்கு 
தில்லிக்கு போயும் தெளியவில்லை நாராயணசாமிக்கு ! 
”அணு உலை.. யாரையும்… ஒன்னுமே செய்யாதாம் ! 
காசை கொட்டிய வேலை வீணாகிவிடுமாம் !” 
கட்டிய அணு உலை வீணாகக் கூடாதென்றால் 
கொட்டி மூடுங்கள் அதில் காங்கிரசு கழிவுகளை. 
பார்ப்பன மனு உலைக்கும் காவல் 
பன்னாட்டு அணு உலைக்கும் காவல் 
தோரியமும் ஆரியமும் கலந்த 
வீரியக் கலவை அப்துல் கலாமும் 
‘அணுவுக்கு அஞ்சினால் கனவு நடக்குமா ?’ 
வாருங்கள் கனவு காணுவோம் 
‘முதலில் கண்ணை மூடுவோம்’ என்கிறார். 
பொய்யிலிருந்து 
மின்சாரம் தயாரிக்கும் 
புதுவழி ஒன்றிருந்தால் 
நாராயணசாமி வாயிலிருந்தே 
நாலாயிரம் மெகாவாட்டும் 
அப்துகலாம் வாயிலிருந்து 
ஆராயிரம் மெகாவாட்டும் 
தமிழகத்திற்கு கிடைக்கும். 
அன்றாடம் இவர்கள் 
அவிழ்க்கும் பொய்கள் 
அணுவுக்கே அடுக்காது… 
அணுக்கழிவே சகிக்காது. 
வளர்ச்சி என்பதற்காய் 
புற்று நோயை ஏற்க முடியுமா ? 
அறிவியல் சுகம் அடைவதற்காய் 
மின்சாரத்தை முத்தமிட முடியுமா ? 
பாதுகாப்பான முல்லைப் பெரியாறை 
பாதுகாப்பற்றதென்றும் 
பாதிப்பான அணு உலையை பாதுகாப்பென்றும் 
திரிக்கும் தேசிய பொய்யர்கள் 
திசையெங்கும்… ஜாக்கிரதை ! 
அணு உலைகளை விடவும் ஆபத்தானவை 
இந்த அயோக்கியர்களின் வாய்கள். 
பத்தாம் பசலிகளாம் நாம் 
ப.சிதம்பரம் கேட்கிறார். 
“உங்களுக்கு மின்சாரம் வேண்டுமா ? 
வேண்டாமா ? 
மாண்புமிகு மத்திய அமைச்சரே 
கொஞ்சம் பொறுங்கள், 
எங்கள் மாட்டிடம் கேட்டுவந்து 
மறுபடியும் பதில் சொல்கிறேன்… 
புல்லினமும், பூ வனமும் 
கல்லினமும், கடலினமும் 
எம் தமிழின் மெல்லினமும் 
இடையினமும், வல்லினமும் 
உழைக்கும் மக்களின் சொல்லினமும், 
தொடுவானம் தொடங்கி 
கடலாழம் வரைக்கும் 
பல்லுயிரினமும் சேர்ந்ததெங்கள் நாடு ! 
நீங்கள் நாட்டை முன்னேற்ற 
நாங்கள் காட்டை இழந்தோம்.. 
நீங்கள் தொழிலை முன்னேற்ற 
எங்கள் வயலை இழந்தோம்.. 
எங்கள் காற்றை இழந்துவிட்டு 
உங்களிடம் ஏ.சி வாங்கவேண்டும்.. 
எங்கள் ஆற்றை அள்ளிக் கொடுத்துவிட்டு 
உங்களிடம் ‘கின்லே’ ’பெப்சி’ வாங்கவேண்டும்.. 
எங்கள் கடலை இழந்துவிட்டு உங்களிடம் 
உப்பு வாங்கவேண்டும்.. 
எங்கள் மகரந்தங்களை இழந்துவிட்டு 
மானியத்தில் உங்களிடம் 
சாம்பல் வாங்கவேண்டும்.. 
முதலாளித்துவ லாபவெறிக்கு 
மொத்த இயற்கையையும் 
இழந்த பிறகு தான், 
நாங்கள், செத்துப்போனதே 
எங்களுக்கு தெரிய வந்தது ! 
மழை முடிந்தபின் 
இலை சொட்டும் ஓசைகளைக் கேட்கவியலாமல், 
மரங்களை இழந்த எங்களை 
நகரத்துக் கொசுக்கள் 
காதோரம் வந்து கண்டபடி ஏசுகிறது ! 
குடியிருப்பின் 
இறுக்கம் தாளாமல் 
குடும்பத்தையே திட்டித்தீர்த்து 
தீண்டப்பயந்து 
வெறுத்து வெளியேறுகிறது தேள் ! 
வந்தமர மலரின்றி 
வெறுமையில், 
தேடிக்களைத்த வண்ணத்துப்பூச்சி 
எங்கள் இயலாமை பார்வை மீது 
கண்டனம் பொழிகிறது வண்ணங்களை ! 
நம்பி ஒப்படைத்த, 
ஊருணி, குளங்கள், 
ஆறு, ஏரியைக் 
காப்பாற்ற வக்கில்லாத என்மேல், 
காக்கை எச்சமிடுகிறது ! 
தருவேன் என்ற நம்பிக்கையில் 
வாசலில் வந்து மாடு கத்துகிறது, 
ஒரு வாய் 
தண்ணி தர இயலாமல் 
கூனி குறுகுகிறேன் நான் ! 
வாழையும்… தாழையும் 
உப்பும் மீனும், கடலும் கலனும் 
செருந்தி மரத்தில் பொருந்தி வாழும் 
பூச்சியும்.. எறும்பும் 
கேட்கும் கேள்விகளுக்கு 
என்னிடம் பதிலில்லை ! 
மாடு மடி நனைய.. நீரில்லை, 
தும்பி குடிக்க தேனில்லை, 
வண்டு படுக்க வளமான மண்ணில்லை, 
கொண்டு வாராணாம் அணு உலை ! 
இயற்கையையே கொளுத்தி 
எவனுக்கு வெளிச்சம் ! 
மின்சாரம், 
வேண்டுமா ? வேண்டாமா ? 
எனக்கேட்ட அமைச்சர் அவர்களே, 
உங்கள் அணுத்திமிர் பார்த்து 
அஃறினைகளும் கேட்கின்றன, 
“நீங்கள் சொல்லுங்கள் – 
உங்களுக்கு இந்தியா வேண்டுமா ? 
வேண்டாமா ? 
______________________________________________________ 
– துரை.சண்முகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *