மூன் டிவி புகழ் முனைவர் அன்வர் பாதுஷா உலவி விழாப் பேருரை நிகழ்த்தினார் !!
துபாய் : துபாய் இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் ( ஈமான் ) நடத்திய மீலாதுப் பெருவிழா 03.02.2012 வெள்ளிக்கிழமை மாலை லூத்தா ஜாமிஆ மஸ்ஜிதில் ( குவைத் பள்ளி ) வெகு சிறப்பாக நடத்தியது.
ஈமான் அமைப்பின் துணைத்தலைவரும், கல்விக்குழுத் தலைவருமான அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லா தலைமை வகித்தார். அவர் தனது தலைமை உரையில் ஈமான் அமைப்பு பல்வேறு சமுதாயப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் கல்வி நிலையம் ஒன்றினை தமிழகத்தில் ஏற்படுத்தப் பட வேண்டும் என்ற முனைப்புடன் செயலாற்றி வருகிறது எனக் குறிப்பிட்டார்.
முன்னதாக அலுவலக மேலாளர் திண்டுக்கல் ஜமால் முஹ்யித்தின் இறைவசனங்களை ஓதினார். பொதுச்செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலி வரவேற்புரை நிகழ்த்தினார். துணைத்தலைவர் அஹமது முஹைதீன் முன்னிலை வகித்தார்.
துணைப் பொதுச்செயலாளர் திருப்பனந்தாள் ஏ. முஹம்மது தாஹா துவக்கவுரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் இந்திய துணைத் தூதரகம் வழங்கும் பல்வேறு தகவல்களைப் பெற்று பயன்பெற கேட்டுக் கொண்டார்.
சிறப்பு விருந்தினர் முனைவர் அன்வர் பாதுஷா உலவி பொன்னாடை மற்றும் நினைவுப்பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
விழாப் பேருரை நிகழ்த்திய மூன் தொலைக்காட்சி புகழ் மௌலவி அல்ஹாபிழ் அல்ஹாஜ் முனைவர் அன்வர் பாதுஷா உலவி விழாப் பேருரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்கள் ஒரு சாதாரண மனிதர் என்று தங்களைத் தாங்களே கூறிக் கொண்டது அவர்களின் பெருந்தன்மையாகும்.
ஒரு நபியாக இருந்து கொண்டு பல பொறுப்புகளை சிறப்புற நிர்வகித்தார். குடும்பஸ்தனாக, ஜனாதிபதியாக, போர்த்தளபதியாக, நீதிபதி உள்ளிட்ட பொறுப்புகளில் மென்மையாக நடந்து கொண்டது உள்பட நபிகளாரின் பல்வேறு சிறப்புகளை தனது ஒன்றரை மணி நேர சொற்பொழிவில் விவரித்தார்.
மீலாது பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
ஊடகத்துறை மற்றும் மக்கள் தொடர்பு செயலாளர் முதுவை ஹிதாயத் நன்றியுரை நிகழ்த்தினார்.
நிகழ்வில் தமிழகத்தைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.
நிகழ்வினை விழாக்குழுச் செயலாளர் கீழை ஹமீது யாசின் தொகுத்து வழங்கினார். விழாவிற்கான ஏற்பாடுகளை அலுவலக மேலாளர் திண்டுக்கல் ஜமால் முஹைதீன், பூதமங்கலம் முஹைதீன், அஞ்சுகோட்டை அப்துல் ரசாக், கும்பகோண்ம் சாதிக், திருப்பனந்தாள் முபாரக், கீழக்கரை ஹமீதுர் ரஹ்மான், திருச்சி பைசுர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.