கயத்தாறு – அல்ஹாஜ் ச. கா. அமீர்பாட்சா
ஸஃபர் மாதம் இஸ்லாமிய ஆண்டின் இரண்டாவது மாதமாகும். இந்த மாதத்தை பீடையுடைய மாதம், கழிசடை மாதம், நல்ல காரியங்கள் செய்யக் கூடாத மாதம் என்ற மெளட்டீக எண்ணம் தமிழ் நாட்டில் நீண்ட காலமாக நிலவி வந்தது. ஆனால் தற்பொழுது நாடெங்கிலும் அதிகமான அரபுக் கல்லூரிகள், அதிலிருந்து கல்வி அறிவு பெற்று வெளிவந்து தீன் சுடர் பரப்பும் ஆலிம் பெருந்தகைகளின் அளப்பரிய முயற்சியால் ‘பீடை பிடித்த மாதம்’ இன்று ‘பீடுடைய மாதமாக’ மலர்ந்து விட்டது. முன்பு எல்லாம் சமுதாய மங்கள காரியங்கள் அனைத்தும் இம்மாதத்தில் தவிர்க்கப்பட்டு வந்ததை நாம் நன்கு அறிவோம். ஆனால் இன்று, எல்லா மங்கள காரியங்களும் இம்மாதத்திலும் சிறப்போடும், சீரோடும் கொண்டாடப்படுகின்றன.
பெயர்க்காரணம் :
ஸஃபர் என்றால் பழுப்பு நிறம் என்றும், இலைகள் பழுத்து விழுகின்ற இலையுதிர் காலத்தில் இம்மாதம் வருவதால், இலையுதிர் காலத்தைக் குறிக்கும் முறையில் இப்பெயர் வந்ததாகவும் மொழி வல்லுநர்கள் கூறுகின்றார்கள். இஸ்லாமிய வரலாற்று ஆசிரியர்கள் இம்மாதத்தை ‘ஸஃபருல் முளஃபர்’ வெற்றி நல்கும் மாதம் எனவும் ’ஸபருல் ஹைர்’ நன்மையளிக்கும் மாதமென்றும் குறிப்பிட்டுள்ளார்கள். “ஸஃபர் மாதத்தைப் ‘பீடை மாதம்’ என்று அழைப்பதற்கு வரலாற்றில் எவ்வித ஆதாரமும் இல்லை.
ஸஃபரில் நடந்த சிறப்பான நிகழ்ச்சிகள் :
1. திருமணத்திற்கு முந்தி ஹளரத் கதீஜா (ரலி) அவர்கள் பெருமானார் (ஸல்) அவர்களை, தமது வாணிப முகவராக, சிரியா நாட்டுக்கு அனுப்பி வைத்தது, ஸஃபர் மாதத்தில் தான்.
2. பெருமானார் (ஸல்) அவர்கள், பிற்காலத்தில் ஹளரத் ஜைனப் (ரலி) அவர்களைத் திருமறை அறிவிப்பி(33:37) ன் படி திருமணம் புரிந்து கொண்டதும், ஸஃபர் மாதத்தில்தான். இவை வாணிப நடவடிக்கையும் திருமணம் புரிந்தமையுமான நிகழ்ச்சிகள்.
3. ஹிஜ்ரி 2 ஸஃபரில் பெருமானார் (ஸல்) அவர்கள் ‘கஸ்வத் – வத்தான்’ போர்க்களத்திற்கு படை நடத்திச் சென்றார்கள்.
4. ஹிஜ்ரி 4 ஸஃபரில் பெருமானார் (ஸல்) அவர்கள், ஹளரத் ஆஸிம் (ரலி) அவர்கள் தலைமையில் ‘ரஜீவு’ என்ற போர்க்களத்திற்குப் படையொன்றை அனுப்பினார்கள்.
5. இதே ஸஃபர் மாதத்தில், பெருமானர் (ஸல்) அவர்கள், ஹளரத் உஸாமா (ரலி) அவர்கள் தலைமையில் பாலஸ்தீனத்துக்குப் படையனுப்பினார்கள்.
இங்ஙனம் தற்காப்புப் போர்களை நடத்த நேர்ந்த பொழுது, தயக்கம் எதுவும் காட்டாமல், ஸஃபர் மாதத்தில் பெருமானார் (ஸல்) அவர்களும், ஸஹாபா பெருமக்களும் புறப்பட்டனர். இப்படியெல்லாம் இருக்க, சில்லுண்டிக் காரியங்களைச் செய்வதற்கும் ஸஃபர் மாதத்தை நம்மவர்கள் ‘பீடை மாதம்’ என்று அஞ்சியொடுங்குவதும் ஏன்? இஸ்லாமியப் பெண்கள் திலகமாய் போற்றுகின்றோமே, அந்த ஹளரத் பாத்திமா நாச்சியார் (ரலி) அவர்களுக்கும், பெருமானார் (ஸல்) அவர்களால் சிறப்பிக்கப் பெற்ற ஹளரத் அலி (ரலி) அவர்களுக்கும் நிக்காஹ் நடைபெற்றது ஸபர் மாதத்தில் தான் என்பதை நாம் உணர வேண்டாமா?
6. இறைவனால் தடுக்கப்பட்ட மரத்தின் கனியை உண்ட காரணத்தால் ஹளரத் ஆதம் (அலை) அவர்களும், ஹளரத் ஹவ்வா (அலை) அவர்களும் இறை முனிவுக்குள்ளாகி விண்ணிலிருந்து மண்ணுலகிற்கு வெளியேற்றப்பட்டதும் ஸஃபர் மாதத்தில் தான். இந்த நிகழ்ச்சியிலிருந்து நாம் உணர வேண்டிய உண்மை எது? இறைவனால் தடுக்கப்பட்டது, சுவை தரும் பழமே ஆயினும் அது ஹராம் தானே? ஹராமானது எதுவாயினும் நாம் மேற்கொண்டால், திண்ணமாக, நாம் கீழான நிலைக்கு வீழ்த்தப்படுவோம் என்பதுதானே அந்த ஸஃபர் மாத எச்சரிக்கை?
7. ஹளரத் ஹுத் (அலை) அவர்களது காலத்து மக்கள் இறைநெறிக்குக் கட்டுப்படாமல் தட்டழிந்து கெட்டனர். எனவே அவர்கள் மீது இறைவன் தண்டனையை இறக்கினான். அது மரணப் பெரும் புயல் வடிவில் அனுப்பப்பட்டது. அதன் வீச்சு ஒரு ஸஃபர் மாதத்து மூன்றாம் புதன் கிழமை தொடங்கி, நான்காம் புதன்கிழமையிறுதி வரை சவுக்கடியாய் சுழன்றது.
இந்த நிகழ்ச்சி நமக்கு உணர்த்தும் கடுமையான எச்சரிக்கை என்ன? இறைநெறியைப் புறக்கணித்தால் இம்மையிலேயே கடுந்தண்டனையை இறைவன் வழங்குவான் என்பதே.
நன்றி : நர்கிஸ் – ஜனவரி 2012