துபாய் : துபாய் தமிழ்ச் சங்கத்தில் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா வெகு சிறப்பாக 20.1.2012 வெள்ளிக்கிழமை மாலை அல் தவார் ஸ்டார் இண்டர்னேஷனல் ஸ்கூலில் நடைபெற்றது.
விழாவிற்கு சங்க தலைவி ஜெயந்தி மாலா சுரேஷ் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் ஜெகநாதன் வரவேற்றார். துணைத்தலைவர் குத்தாலம் லியாக்கத் அலி முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினர்களாக இந்திய கன்சல் மதுரை அசோக் பாபு, ஆலியா டிரேடிங் மேலாண்மை இயக்குநர் ஷேக் தாவுது, பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் அதிகாரி நாராயணன், கிரஸெண்ட் ஆங்கிலப் பள்ளியின் முதல்வர் கலீஃபுல்லா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
இந்திய கன்சல் மதுரை அசோக் பாபு தனது உரையில் தமிழர்கள் பல்வேறு துறைகளில் சிறப்புற்றிருந்தாலும் தங்களது உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை இந்த உழவர் திருநாள் செய்தியாக தமிழ் மக்களுக்கு வைப்பதாக தெரிவித்தார்.
ஆலியா டிரேடிங் மேலாண்மை இயக்குநர் ஷேக் தாவுது தனது வாழ்த்துரையில் எதிர்காலத்தில் இது போன்ற நிகழ்வுகள் பெரிய அரங்கில் தமிழர்களின் பெருமையை பறைசாற்றும் வண்ணம் அமைந்திட இருக்க வேண்டும் என்ற தனது ஆவலைத் தெரிவித்ததுடன் அதற்கு தனது ஒத்துழைப்பு முழுமையாக இருக்கும் என்றார்.
உழவர் திருநாளை சித்தரிக்கும் வண்ணம் பல்வேறு கலை, கலாச்சார நிகழ்வுகளில் தமிழ்ச் சங்க அங்கத்தினர்களின் பிள்ளைகள் பங்கேற்றனர். காமெடி நிகழ்வும் இடம்பெற்றது.
நிர்வாகக்குழு உறுப்பினர் விஜயேந்திரன் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை பொருளாளர் கீதாகிருஷ்ணன், பொழுது போக்குத்துறை செயலாளர் ஏ. முஹம்மது தாஹா, கமிட்டி உறுப்பினர்கள் பாலகிருஷ்ணன், பிரசன்னா, விஜயேந்திரன், விஜயராகவன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
நிகழ்வினை மீரா கிரிவாசன் மற்றும் ஏ. முஹம்மது தாஹா ஆகியோர் தொகுத்து வழங்கினர். நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் சக்கரை மற்றும் வெண் பொங்கல் சிவ ஸ்டார் பவன் உணவகத்தினர் வழங்கினர்.