மனைவி

இலக்கியம் கவிதைகள் (All)

மஞ்சள் நதிமுகம் அஞ்சிச் சிவந்திட

மஞ்சம் விரித்து வைத்தாள் – தனதோர்

நெஞ்சைத் திறந்து வைத்தாள் – அந்தப்

பிஞ்சு மயில்தனைக் கட்டிப் பிடித்ததும்

பிள்ளையைப் போல் குதித்தாள் – சுகமோ

கொள்ளை என்றே கொடுத்தாள்.

சாய்ந்து இரண்டுளம் பாய்ந்து துடிக்கையில்

தாலியைச் சாட்சி வைத்தாள் – உனக்கே

ஆலிலைக் காட்சி என்றாள் – அவள்

சாந்துப் பொட்டில் ஒருமுத்தமிட்டேன் –அதில்

நீந்திக் களித்திருந்தாள் – முதல்

சாந்தி முடித்திருந்தாள்!

கட்டிக் கிடந்திரு கன்னம் வருடிய

கைகளைப் பாராட்டி – எனதிரு

கண்களைச் சீராட்டி – மலர்

கட்டிலின் நாட்டிய ஓசையிலே இன்பக்

காவியத் தாலாட்டி – அணைத்தாள்

கட்டிய பெண்டாட்டி!

காசு பணத்தினில் ஆசைவைக்கும் சில

வேசியரைப் பார்த்தேன் – அவரையும்

பூஜையறை சேர்த்தேன் – அந்தத்

தாசிமக்கள் தங்கள் சேலை விரித்ததில்

தந்திரமும் பார்த்தேன் – பொய்மை

மந்திரமும் கேட்டேன்!

எத்தனை பெண்கள் இம் மண்ணில் இருந்தென்ன

சத்தியம் சம்சாரம் – அவள்தான்

சாமி அவதாரம் – அந்தப்

பத்தினி கைகளில் பள்ளி கொண்டலாது

பக்திப் பிர வாகம் – இறைவனின்

சக்தி உறவாகும்!

                                      கவிஞர் கண்ணதாசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *