மதுரை பற்றி.. கவிஞர் வைரமுத்து (1997)
பாண்டியர் குதிரைக் குளம்படியும் – தூள்
பறக்கும் இளைஞர் சிலம்படியும் – மதி
தோண்டிய புலவர் சொல்லடியும் – இளந்
தோகைமார்தம் மெல்லடியும்
மயங்கி ஒலித்த மாமதுரை – இது
மாலையில் மல்லிகைப் பூமதுரை!
நீண்டு கிடக்கும் வீதிகளும் – வான்
நிமிர்ந்து முட்டும் கோபுரமும்
ஆண்ட பரம்பரைச் சின்னங்களும் – தமிழ்
அழுந்தப் பதிந்த சுவடுகளும்
காணக் கிடைக்கும் பழமதுரை – தன்
கட்டுக் கோப்பால் இளமதுரை!
மல்லிகை மௌவல் அரவிந்தம் – வாய்
மலரும் கழுநீர் சுரபுன்னை
குல்லை வகுளம் குருக்கத்தி – இவை
கொள்ளை அடித்த வையைநதி
நாளும் ஓடிய நதிமதுரை – நீர்
நாட்டிய மாடிய பதிமதுரை
தென்னவன் நீதி பிழைத்ததனால்
தெரிந்து மரணம் அழைத்ததனால்
கண்ணகி திருகி எறிந்ததனால் – அவள்
கந்தக முலையில் எரிந்ததனால்
நீதிக் கஞ்சிய தொன்மதுரை – இன்று
ஜாதிக் கஞ்சும் தென்மதுரை!
தமிழைக் குடித்த கடலோடு – நான்
தழுவேன் என்றே சபதமிட்டே
அமிழ்தம் பரப்பும் வையைநதி – நீர்
ஆழி கலப்பது தவிர்ப்பதனால்
மானம் எழுதிய மாமதுரை – இது
மரபுகள் மாறா வேல்மதுரை!
மதுரை தாமரைப் பூவென்றும் – அதன்
மலர்ந்த இதழே தெருவென்றும்
இதழில் ஒட்டிய தாதுக்கள் – அவை
எம்குடி மக்கள் திரளென்றும் – பரி
பாடல் பாடிய பால்மதுரை – வட
மதுரா புரியினும் மேல்மதுரை!
மீசை வளர்த்த பாண்டியரும் – பின்
களப்பிரர் பல்லவர் சோழர்களும் – மண்
ஆசை வளர்த்த அந்நியரும் – அந்த
அந்நிய ரில்சில கண்ணியரும்
ஆட்சி புரிந்த தென்மதுரை – மீ
னாட்சியி னால்இது பெண்மதுரை!
மண்ணைத் திருட வந்தவரைத் – தம்
வயிற்றுப் பசிக்கு வந்தவரை – செம்
பொன்னைத் திருட வந்தவரை – ஊர்
பொசுக்கிப் போக வந்தவரைத் – தன்
சேயாய் மாற்றிய தாய்மதுரை – அவர்
தாயாய் வணங்கிய தூய்மதுரை!
அரபு நாட்டுச் சுண்ணாம்பில் – கரும்பு
அரைத்துப் பிழிந்த சாறூற்றி
மரபுக் கவிதை படைத்தல்போல் – ஒரு
மண்டபம் திருமலை கட்டியதால்
கண்கள் மயங்கும் கலைமதுரை – இது
கவிதைத் தமிழின் தலைமதுரை!
வையைக் கரையின் சோலைகளும் – அங்கு
வரிக்குயில் பாடிய பாடல்களும்
மெய்யைச் சொல்லிய புலவர்களும் – தம்
மேனி கறுத்த மறவர்களும்
மிச்ச மிருக்கும் தொன்மதுரை – தமிழ்
மெச்சி முடிக்கும் தென்மதுரை!
போட்டி வளர்க்கும் மன்றங்களும் – எழும்
பூசை மணிகளின் ஓசைகளும் – இசை
நீட்டி முழங்கும் பேச்சொலியும் – நெஞ்சை
நிறுத்திப் போகும் வளையொலியும்
தொடர்ந்து கேட்கும் எழில்மதுரை – கண்
தூங்கா திருக்கும் தொழில்மதுரை!
ஆலைகள் தொழில்கள் புதுக்காமல் – வெறும்
அரசியல் திரைப்படம் பெருக்கியதில்
வேலைகள் இல்லாத் திருக்கூட்டம் – தினம்
வெட்டிப் பேச்சு வளர்ப்பதனால்
பட்டாக் கத்திகள் சூழ்மதுரை – இன்று
பட்டப் பகலில் பாழ்மதுரை!
நெஞ்சு வறண்டு போனதனால் – வையை
நேர்கோ டாக ஆனதனால்
பஞ்சம் பிழைக்க வந்தோர்கள் – நதியைப்
பட்டாப் போட்டுக் கொண்டதனால்
முகத்தை இழந்த முதுமதுரை – பழைய
மூச்சில் வாழும் பதிமதுரை!