முகங்கள்
க.து.மு. இக்பால்
சோதனையின் மத்தியிலும் உறுதி காட்டும்
சோராத மாந்தார்க்குச் சுடர் முகங்கள்
வேதனையின் இடையினிலும் புன்னகைக்கும்
வீரர்க்கு மங்காத ஒளி முகங்கள்
சாதனைகள் பலபுரிந்தும் அடக்கம் பேணும்
சான்றோர்க்கு வற்றாத அருள்முகங்கள்
போதனைகள் பலநல்கும் பூமி மீது
பொறுமையினால் பெருமைபெறும் புகழ் முகங்கள்
அடுத்தவரின் நலம்கண்டு மகிழ்ச்சி கொள்ளும்
அன்பாளர் திருமுகங்கள் தாமரைகள்
அடுத்தவரின் துயர்கொண்டு வாட்டம் கொள்ளும்
ஆன்றோரின் பொன்முகங்கள் நீர்த்துறைகள்
அடுத்தவரின் இடர்கண்டு சிரித்திருக்கும்
அழிவுக்கு வழிதேடும் இருள் முகங்கள்
அடுத்தவரை ஏமாற்றிக் குழிபறிக்கும்
அயோக்கியர்க்கு அன்றாடம் பலமுகங்கள்
குழந்தைகள் உலகுக்குப் புதுமுகங்கள்
குடும்பங்கள் செய்துவைக்கும் அறிமுகங்கள்
பழகவரும் நம்மோடு பலமுகங்கள்
பார்த்தவுடன் தெரிவதில்லை நரி முகங்கள்
ஒழுக்கமுள்ள பெரியவர்க்கு மதி முகங்கள்
உதவிசெய்யும் நல்லவர்க்கு மலர் முகங்கள்
விழிப்பாகச் செயல்புரியும் சில முகங்கள்
வெற்றிபெறும் சிந்தனையின் அடையாளங்கள்
புத்தகங்கள் பலவாங்கிப் படித்த போதும்
புத்தியிலே அத்தனையும் படிவ தில்லை
நித்தமிங்கு சந்திக்கும் முகங்கள் எல்லாம்
நினைவினிலே என்றைக்கும் நிலைப்பதில்லை
புத்தகத்தின் எழில்அட்டை போலே உள்ளே
பொருளிலிருக்கும் என்பதற்கும் உறுதியில்லை
புத்தகங்களே முகங்கள் நம்புங்கள்;நம்
பூமியிலே பெரும்பாலும் பொய்முகங்கள் !
நன்றி :
நம்பிக்கை மே 2010