( தமிழருவி மு.க. அன்வர் பாட்சா,
தமிழாசிரியர். SBOA மேனிலைப் பள்ளி. கோவை )
கல்லை ஆயுதமாகக் கொண்டு வாழ்ந்தான் கற்கால மனிதன். கை விரல்களால் கணினியில் உலகைக் கொண்டுவந்து வாழ்கின்றான். இக்கால மனிதன். இந்த வளர்ச்சியை என்னவென்று சொல்வது? நாளைய மனிதன் வளர்ச்சியை நினைத்தாலே பிரமிப்பு ஏற்படுகிறது.
இந்த அளவிற்கு மனிதன் வளர்ந்துவிட்டதை நினைத்து நாம் ஒருபுறம் பெருமிதம் அடைந்தாலும், மறுபுறம் மனிதன் தன் நிலையில் தடம்புரள்கின்றானோ என அச்சம் கொள்ளவும் வேண்டியுள்ளது.
இன்றைய நிலை
இன்றைய மனிதன் வாழ்க்கை எப்படி உள்ளது? நிலை தடுமாறி, சிந்தனை தடுமாறி, தடம் புரண்டு சுயநலம் மட்டுமே மேலோங்கி, பணம் சேர்ப்பது மட்டுமே குறிக்கோளாகி… வஞ்சகம் போட்டி பொறாமை, தீவிரவாதம், அழிவு இவைகளை முதன்மைப்படுத்தி… கொலை, கொள்ளை, கற்பழிப்பு, குண்டுவெடிப்பு, மனித அழிவுகள் மேலோங்கி வாழ்கின்றன.
இதையா இறைவன் விரும்புகின்றான்? மனிதன் நிலை ஏன் இப்படி மாறிவிட்டது? உலகை சொர்க்க பூமியாக மாற்றிவிட்ட மனிதன் அந்த பூமியில் மனிதப் பண்பை இழந்து நரக வாழ்க்கை வாழத் தொடங்கி விட்டானே! இதுதான் வாழ்வியல் தத்துவமா? இறைவன் இதைத்தான் கூறினானா? இதை நாம் என்னிடல் வேண்டாமா?
அந்த வகையில் மானுடம் செம்மையுற, மனித நேயம் தழைக்கத் தமிழில் தோன்றிய நீதி இலக்கியம் திருக்குறளில், இப்பூவுலகில் மகத்தான மாற்றம் விளைவித்த இறைவசனம் கொண்ட மாபெரும் நூலான திருக்குர்ஆன் கூறும் வாழ்வியல் கருத்துக்கள் மிளிர்வதைக் கண்டு, அதனை சமூகத்திற்கு எடுத்துரைப்பது நம் கடமையெனக் கொண்டு ஒரு சில கருத்துக்களை இங்கு நாம் பதிவு செய்கின்றோம்.
இன்றைய சமூகத்திற்கு எது தேவை என உணர்ந்து அத்தேவைக்கு எவை எவை இருத்தல் வேண்டும் என்பதை அறிந்து அவை திருக்குறளிலும், திருக்குர்ஆனிலும் எங்கே உள்ளன என்பதைக் கண்டு கோர்வையாக்கி, இந்நூல்களில் ஆழ்ந்திருக்கும் வாழ்வியல் நெறித்தத்துவங்களை எடுத்து இயம்புவதுமே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
இஸ்லாமிய சிந்தனைகள்
அண்டை வீட்டான் பசித்திருக்க நீ மட்டும் தனித்துப் புசிக்காதே என்பது நபிமொழி. எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும் என்னும் உன்னத தாத்பரியம் நிறைந்தது இஸ்லாம். ஈகைத் தத்துவத்தை உலகிற்கு கூறியதுடன் அதை நடைமுறைப்படுத்தவும் சட்டம் இயற்றியது இஸ்லாம். தான் ஈட்டும் சம்பாத்தியத்தில் 2 ½ சதவீதம் ஏழைவரியாக ஜகாத் தரக் கூறுவது இஸ்லாம்.
இந்நிலை முழுமைபெற்றால் ஏழை என்ற சொல்லே மறைந்துவிடும். “எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பது வேயின்றி வேறொன்றறியேன் பராபரமே” எனும் தாயுமானவர் கூற்று உயிர்பெற்றுவிடும். இக்கருத்தை திருக்குர்ஆன் இரண்டாம் அத்தியாயத்தில் 177 வது வசனத்தில் கூறப்படுவதாவது:
“மேற்கிலோ, கிழக்கிலோ உங்கள் முகங்களை நீங்கள் திருப்பி விடுவதால் மட்டும் நன்மை செய்தவர்களாக ஆகி விடமாட்டீர்கள். உங்களில் எவர் அல்லாஹ்வையும், இறுதிநாளையும், மலக்குகளையும், வேதங்களையும், நபிமார்களையும் நிச்சயமாக நம்பிக்கை கொண்டு தனக்கு விருப்பமான பொருளை அல்லாஹ்வுக்காக. உறவினர் களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும், யாசகர்களுக்கும், விடுதலையை விரும்பிய அடிமைகள், கடன்காரர்கள் ஆகியவர்களுக்கும் கொடுத்து உதவி செய்து, தொழுகையையும், கடைப்பிடித்து, தொழுது, ஜகாத் எனும் மார்க்க வரியும் கொடுத்து வருகின்றவரும், வாக்குறுதியை நிறைவேற்றுபவர்களும், பொறுமையைக் கைகொண்டவர்களுமே அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வதில் உண்மையானவர்கள்” (2:177)
மேற்கண்ட இறைவசனத்தின் மூலம் பிறருக்குக் கொடுத்து வாழ வேண்டும் என்ற உயரிய நோக்கம் திருக்குறளில் 24 ஆம் அதிகாரத்தில் முதல் குறளில்,
”ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு” (231)
என்று கூறப்பட்டுள்ளது. அதன் பொருள் வறியவர்களுக்கு ஈதல் வேண்டும். அதனால் புகழ் உண்டாக வாழ வேண்டும். அதுவே இறைவன் படைத்த உடலில் இருக்கும் உயிர்க்கு நாம் தரும் ஊதியம் ஆகும் என்பதாகும் என்றும்,
“அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி” (226)
என்ற குறள் மூலம் வறியவரின் கடும் பசியைத் தீர்க்க வேண்டும். அதுவே பொருள்பெற்ற ஒருவன் அப்பொருளைத் தனக்குப் பிற்காலத்தில் உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இறைவசனத்தில் படைப்பில் ஆண் பெண் இருவரும் சமம். ஒருவரினும் ஒருவரை நாம் உயர்வாகத்தான் படைத்துள்ளோம் என்கிறான் இறைவன். படைப்பில் பேதம் இல்லை. மனிதனே உயர்வு தாழ்வு கற்பித்துக் கொள்கின்றான் என்கிறது திருக்குர்ஆன். இக்கருத்து திருக்குறளில்,
“பிறப்புஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பு ஒவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்” (972)
எனக் கூறப்பட்டுள்ளது. அதன் பொருள் எல்லா உயிர்களுக்கும் பிறப்பு ஒரு தன்மையானதே. அதில் உயர்வு தாழ்வு என்பது இல்லை. ஆயினும் செய்கின்ற தொழில் வகையால் வேறுபாடுகள் அமைவதால் சிறப்பு இயல்புகள் வேறுபடுகின்றன என்பதாகும்.
ஒழுக்கத்தைப் போதிப்பதில், கற்பு நிலையை ஆண் பெண் இருபாலருக்கும் பொதுமைப்படுத்துவது இஸ்லாம். (24:30) ஆம் வசனத்தில், “நபியே ! நம்பிக்கையாளர்களான ஆண்களுக்கு நீங்கள் கூறுங்கள். அவர்கள் தங்கள் பார்வைகளைக் கீழ் நோக்கியே வைக்கவும். நிச்சயமாக பாதுகாத்துக் கொள்ளவும். இது அவர்களைப் பரிசுத்தமாக்கி வைக்கும். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவைகளை நன்கறிந்து கொள்கின்றான்” என்பதாகும்.
மனித வாழ்க்கையில் ஒழுக்கத்திற்கே முதலிடம். ஒழுக்கம் தவறி விட்டால் அனைத்தும் பாழ் ஆகிவிடும். இதனைத் தனிமனித ஒழுக்கத்திலிருந்து தொடங்குகிறது இஸ்லாம். இக்கருத்தை திருக்குறளில் 15 ஆம் அதிகாரத்தில் 8 ஆவது குறளில்,
”பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு” (148)
எனக் கூறப்பட்டுள்ளது. அதன் பொருள் பிறனுடைய மனைவியை, பிற பெண்களை, விரும்பி நோக்குதல் கூடாது. அத்தகைய தன்மை ஆடவர்க்குப் பெரிய ஆண்மையாகும். சான்றோர்களுக்கு அத்தன்மை அறம் மட்டும் அன்று நிறைந்த ஒழுக்கமாகும் என்று கூறப்பட்டுள்ளது.
மற்றும் வாழும் காலத்தில் நாம் செய்யும் நற்செயல்களே அமல்களே மரணத்திற்குப் பிறகும் நம்மைத் தொடர்ந்துவரும் வேறு எதுவும் நம்மோடு வராது என்றும் கருத்தமைந்த ஓர் இறைவசனம் (17:13) ”ஒவ்வொரு மனிதன் செயலைப் பற்றிய விரிவான தினசரிக் குறிப்பை அவனுடைய கழுத்தில் மாட்டியிருக்கின்றோம். மறுமை நாளில் அதனை அவனுக்கு ஒரு புத்தகமாக எடுத்துக் கொடுப்போம். அதனை விரித்துப் பார்ப்பான்” என்கிறது இறைவசனம்.
இக்கருத்து திருக்குறளில் 51 ஆம் அதிகாரத்தில் 5 வது குறளில்,
”பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்” (505)
இதன் பொருள் : மக்களின் குணங்களால் ஆகிய பெருமைக்கும், குற்றங்களாகிய சிறுமைக்கும் தேர்ந்தறியும் உரைகல்லாக இருப்பவை அவரவருடைய செயல்களே ஆகும். ஆகவே நற்செயல்களே செய்திட வேண்டும் என்பதாகும்.
“சீனதேசம் சென்றேனும் சீர்மிகு கல்வியைப் பெற்றிடுக” என்பது நபிமொழி. இக்கருத்து திருக்குறளில் கல்வி எனும் அதிகாரத்தில் 10 வது குறளில்,
“கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்ற யவை” (400)
என்று கூறப்பட்டுள்ளது. அதன் பொருள் ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும். கல்வி தவிர மற்றப் பொருள்கள் அத்தகைய சிறப்புடைய செல்வம் அல்ல என்பதாகும்.
இவ்வாறு இறைவன் நம்மைப் படைத்து அளவற்ற ஆற்றல் மிக்க அறிவையும் கொடுத்துள்ளான். அதனைக் கொண்டு நன்மை எது? தீமை எது? என அறியும் வல்லமை கொடுத்துள்ளான். நல்லதை நாடுவோம் ! போற்றுவோம் ! அல்லதை ஒடுக்குவோம் ! ஒதுக்குவோம் ! உலகம் தழைக்க உன்னத மானுட தர்மத்தை நிலைநாட்டும் ஒற்றுமைக்குக் குரல் கொடுக்கும். அமைதிக்கு வழிகாட்டும். சகோதரத்துவத்தை வலியுறுத்தும். அன்பைப் போற்றும் இஸ்லாமியக் கருத்துகளை உலகிற்குப் பறைசாற்றுவோம். அதன்வழி வாழ்வோம் ! நாமும் வாழ்ந்து பிறரையும் வாழவைப்போம் ! எதிலும் உண்மைப்பொருள் காண்பதே அறிவின் பயனாகும்.
மானிட அறிவால், மனித குலம் உயர்வடைய பாடுபடுவோம். அதற்குரிய வல்லமையை, ஆற்றலை எல்லாம் இறைவன் தந்தருள்வானாக.
நன்றி :
அருள் வசந்தம்
குடவாசல் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா சிறப்பு மலர் 2008
இக்கட்டுரை குறித்த தங்களது கருத்துக்களை தெரிவிக்க :