என் துஆ மொட்டுக்களைத் தாமரைப் பூக்களாக்குவாயாக !

இலக்கியம் இஸ்லாமியக் கவிதைகள் கவிதைகள் (All) தத்துவக் கவிஞர் இ பதுருத்தீன்

 

—- தத்துவக்கவிஞர் – இ. பதுருத்தீன், சென்னை (9444272269) ——–

 

இறைவா !

  எங்கோ காய்த்தேன், ஓர் எலுமிச்சைப் பழமாக !

  எங்கோ இருந்த உப்பில், என்னை யாரோ கலந்தார், இன்று நான் ஊறுகாயாக உறைந்து கிடக்கின்றேன்.

  நான் பாதுஷாவுக்கு ஒப்பாவேன், பழங்கஞ்சி கலயங்களின் பக்கத்தில்!

  கூட்டுகளும், குருமாவும் இல்லாவிட்டாலும், ஊட்டும் உணவுகளுக்கு நான் காட்டும் நிலா ஆவேன்.

  நான், பிறருக்குக் களிப்பாக இருக்கின்றேன் என்ற சந்தோஷ மின்னலில், என் சஞ்சல இருட்டைச் சலனப்படுத்திக் கொள்கிறேன்.

இறைவா !

சிலர், தொழிலை வணங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

மற்றுஞ்சிலர் — வணக்கத்தைத் தொழிலாக்கிக் கொண்டிருக்கிறார்கள். நானோ — வணக்கத்தை வாழ்க்கைத் துணையாக்கிக் கொண்டுள்ளேன் !

  உன் பள்ளிவாசல் தோப்புகளில் சிலர் தென்னையைப் போல் தலை உயர்த்திக் காட்டித் தங்களைத் தென்படுத்திக் கொள்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்.

  நானோ —ஒரு வாழைக் கன்று போல என்னை மட்டுப்படுத்தி மறைத்துக் கொண்டே உன்னிலே கட்டுண்டு கிடப்பதிலே களிப்புண்டுக் கிடக்கின்றேன் !

இறைவா !

என் ஜீவனம் — பூங்காவனம் அல்ல;

என் விசிறி — வெஞ்சாமரமல்ல;    

என் ஆசை — பேராசையல்ல;

ததும்பிச் சிந்துகின்றேன், தண்ணீர் லாரிகளின் நடையசைவில் !

நான் குடம் நீர் கேட்கவில்லை; குடிக்கக் குவளை நீர்தான்

கேட்கிறேன். கொடுக்க வழியிருந்தும் அவர்களுக்கோ மனமில்லையே !

  அந்த வீட்டுக் கொல்லையிலே ஆயிரம் முல்லைகள் !

  வீதியில் போவோரெல்லாம் கூட பறித்துச் செல்கின்றனர்;

வீட்டிலிருக்கும் நான் கேட்கின்றேன். தருவதற்கு முறையிருந்தும் தடுப்பதற்கே முனைகிறார்களே !

  தெருக்களுக்கு போய்த் தீவட்டி ஏற்றுகிறார்கள். அப்போது சரியா, தவறா என்று கூட பார்ப்பதில்லை !

  நான் திரிதான் கேட்கிறேன், விளக்கிற்கு சட்டம் பேசுகிறார்களே !

  என் பெயருக்கு ‘மணியாடர்’ அனுப்பப்பட்டதை கூட — ‘இந்தா’ என்று கொடுப்பதற்கு ஏனோ இதயங் கசியவில்லை.

இறைவா !

  தீவைக் கூட கடக்கின்றார்கள். தங்கள் உல்லாசத்திற்காக, ஆனால் திண்டாடுகின்ற வழிப் பயணிக்குத் தெருவைக் கடப்பதற்குக் கூட உதவ மறுக்கின்றதே, என்ன உலகமிது ?

  சிலர் — உப்புக்கு நட்பு கொள்கிறார்கள்;

  சிலர் — ஒப்புக்கு நட்பு கொள்கிறார்கள்;

  சிலர் — தப்புக்கு நட்பு கொள்கிறார்கள்;

  நானோ —

  கற்புக்கு நட்பு கொள்கிறேன்;

  ஆனால், கைகொடுப்பவர்கள், காசோலைகளாய், கைவிடுபவர்களோ, அந்தோ கைச் சில்லறைகளாய் !

இறைவா !

  கள்ளிச்செடியிலிருந்து முல்லை மலரை எதிர்ப்பார்க்கக்கூடாது தான். ஆனால், நானோ நயவஞ்சகர்களிடமிருந்தும் நட்பை எதிர்பார்க்கின்றேன் !

  வைக்கோலிலிருந்து நெல்மணியை எதிர்பார்க்கக் கூடாது தான், நானோ – வறண்ட மனங்களிடமிருந்து அன்பையே எதிர்பார்க்கிறேன்.

  என் எதிர்பார்ப்புகள் – குளங்களின் தவங்களன்றி –

  பாலைவனங்களின் புலம்பல்களல்ல !

  சருகுகளையும் தளிராக்கும் சக்தி கொண்டவனே –

  என் துஆ மொட்டுக்களைத் தாமரைப் பூக்களாக்குவாயாக !

நன்றி : நர்கிஸ் – நவம்பர் 2011

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *