இறைமறையும் அறிவியலும்
சூரா ஃபாத்திஹா கல்பின் துஆ !
-பேராசிரியர் ஹாஜி T.A.M. ஹபீப் முஹம்மது
சூரா ஃபாத்திஹாவில் (அல்ஹம்து சூராவில்) முதல் மூன்று திருவசனங்களில் அல்லாஹ்வின் அழகிய திருப்பெயர்களான ரப், ரஹ்மான், ரஹீம், மாலிக் ஆகிய அழகிய பெயர்களைக்கொண்டு அல்லாஹ்வைப் புகழ்ந்து பிரார்த்தனை செய்வதைச் சென்ற மாத இதழில் விரிவாகப் பார்த்தோம்.
“அல்லாஹ்வுக்கு அழகிய திருப்பெயர்கள் (அஸ்மாஉல் ஹுஸ்னா) இருக்கின்றன. அவற்றைக்கொண்டே நீங்கள் அவனை அழையுங்கள்… (7:180)
இந்த இதழில் சூரா ஃபாத்திஹாவில் மீதமுள்ள நான்கு திருவசனங்களை ஆராய்வோம். இந்த நான்கு திருவசனங்களில் மறுமையில் இறைவனின் தண்டனையிலிருந்து தப்பித்துச் சொர்க்கத்தில் என்றென்றும் நல்வாழ்வு வாழ்வதற்கு அடித்தளமாக இம்மையில் நாம் நேர்வழியில் வாழ்வதற்கு அல்லாஹ்வின் உதவியை நாடி வணங்குகிறோம். (துஆச் செய்கிறோம்). அந்த நான்கு திருவசனங்களாவன:
“உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக! (அது) நீ எவர்களுக்கு அருள்புரிந்தாயோ அவ்வழி (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமில்லை. நெறிதவறியோர் வழியுமில்லை. (1:4-7)
இவ்வாறு அல்ஹம்து சூராவைக்கொண்டு அல்லாஹ்வைப் புகழ்ந்து அல்லாஹ்விடம் துஆச் செய்து தொழுது கொள்கிறோம். இந்த சூரா ஃபாத்திஹாவை ஒவ்வொரு வேளைத் தொழுகையிலும் திரும்பத் திரும்ப ஓதுகிறோம். ஓதியபின் ஆமீன். (அவ்வாறே ஆகட்டும்) என்று சொல்கிறோம்.
“திரும்பத் திரும்ப ஓதப்படும் வசனங்கள் ஏழையும் உமக்கு நாம் வழங்கியிருக்கின்றோம்.” (15:87) என்று அல்லாஹ் சூரா ஃபாத்திஹாவின் சிறப்பை உணர்த்துகிறான். மேலே சொல்லப்பட்ட நான்கு திருவசனங்களின் வாயிலாக நாம் நேர்வழியில் வாழ இறைவனது உதவியை நாடி துஆ செய்கிறோம். இனி அல்லாஹ்வால் யாருக்கு நேர்வழிகாட்டப்படுகிறது என்பதைப் பார்ப்போம். அல்லாஹ் தன் திருமறையில் ஆங்காங்கே நல்லவற்றையும், தீயவற்றையும் பிரித்துக்காட்டி எவற்றைச் செய்ய வேண்டும். எவற்றைத் தவிர்க்க வேண்டும் என்று தெளிவுபடக் கூறி இறையருளைப் பெற நேர்வழியைக் காட்டியுள்ளான்.
இறைவன் காட்டிய இந்த நேர்வழியில் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்பவரே இறையருளைப் பெற்ற, சொர்க்கத்திற்குச் செல்லும் இறை நம்பிக்கையாளர்கள். இவ்வாறு திருக்குர்ஆன் நேர்வழியைக் காட்டுவதால் அதற்கு ‘அல் ஹுதா’ என்ற சிறப்புப்பெயரும், நல்லவற்றையும், தீயவற்றையும் பிரித்துக் காட்டுவதால் அதற்கு ‘அல்ஃபுர்க்கான்’ என்ற சிறப்புப் பெயரும் உண்டு. இறைநம்பிக்கையாளர்கள், நல்லவற்றையும், தீயவற்றையும் தங்களுடைய முன்னெற்றியின் உள்ளே அமைந்துள்ள அதிக மடிப்புகளுடன் கூடிய பெருமூளைப் பகுதியைப் பயன்படுத்திப் பகுத்தறிந்து செயல்படுகிறார்கள். மேலும் இவர்கள் தங்கள் மனோயிச்சைக்குக் கட்டுப்படாமல் அதை வெற்றி கொண்டு (ஜிஹாதே கபீர்) மனதைத் தூய்மைப்படுத்தி, திருக்குர்ஆனில் சொல்லப்பட்டுள்ள இறைக்கட்டளையைச் சிரமேற்கொண்டு நிறைவேற்றி இறையருளைப் பெற்று சொர்க்கத்திற்கு வழிகாட்டும் வெற்றிப்பாதையில் செல்கின்றனர். இவ்வாறு ஈமான் கொண்டு நல்லறங்களைச் செய்பவர்களுக்கே நேர்வழி காட்டப்படும்.
“எவர் அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்கிறாரோ அவருடைய மனதை அவன் நேர்வழியில் செலுத்துகிறான்”. (64:11)
“எவர்கள் நேர்வழியில் செல்கிறார்களோ அவர்களை அல்லாஹ் மென்மேலும் நேர்வழியில் செலுத்துகிறான்”. (19:76)
“எவர்கள் ஈமான் கொண்டு நல்லறங்களைச் செய்தார்களோ அவர்கள் சுவர்க்கப் பூங்காவில் மகிழ்விக்கப்படுவார்கள்”. (30:15)
அதே சமயம் அல்லாஹ் நேர்வழியைக் காட்டியபின் மனம் தடம் புரளாமல் இருக்க அல்லாஹ்வின் உதவி தேவை. நன்மையான செயல்களைச் செய்வதிலேயே நிலையாக இருக்கும் ‘அமைதியான மனம்’ (நப்ஸே முத்மஇன்னா) தேவை. “நீ எங்களுக்கு நேர்வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே. இன்னும் உன் புறத்திலிருந்து எங்களுக்கு நல்லருளை அளிப்பாயாக !” நிச்சயமாக நீயே பெருங்கொடையாளியாவாய் ! (என்று அறிவுடையோர் பிரார்த்தனை செய்வார்கள்)” (3:8)
நேர்வழியை அடைந்த இறைநம்பிக்கையாளர்களைப் பற்றி அல்பகரா அத்தியாயத்தில் அல்லாஹ் குறிப்பிடுவதைக் காண்போம்.
“நம்பிக்கை கொண்டோரே ! பொறுமையுடனும் தொழுகையுடனும் (இறைவனிடம் உதவி தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்” (2: 153)
“அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் பொழுது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். நிச்சயமாக நாம் அவனிடம் திரும்பிச் செல்வோம்” (இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்) என்றும் கூறுவார்கள். இத்தகையோர் மீதுதான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும் நற்கிருபையும் உண்டாகின்றன. இன்னும் இவர்கள்தாம் நேர்வழியை அடைந்தவர்கள். (2:156-157)
மேலும் நேர்வழியை அடைந்த இறைநம்பிக்கையாளர்களின் (முஃமின்களின்) நற்செயல்கள் அல்முஃமினூன் அத்தியாயத்தில் சுருக்கமாகச் சொல்லப்பட்டுள்ளன. அவர்கள் தொழுகையை உள்ளச்சத்தோடு குறித்த நேரத்தில் பேணிக் கொள்வார்கள். வீணானவற்றை விட்டு விலகியிருப்பர். ஸகாத்தையும் தவறாது கொடுப்பர். தங்கள் வெட்கலத்தலங்களைக் காத்துக் கொள்வர். அடைக்கலப்பொருள்களையும் தங்கள் வாக்குறுதிகளைக் கடைப்பிடித்து நியாயமே பேசுவார்கள். இத்தகையோர் ஃபிர்தெளஸ் சுவர்க்கத்திற்கு வாரிசுதாரர்கள். ஆக நேர்வழியை அடைந்தவர்கள் இறுதியில் அடைவது சுவர்க்கமே.
அடுத்து அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்டுவதில்லை என்பதைப் பற்றிப் பார்ப்போம். நிச்சயமாக அல்லாஹ் இறைநிராகரிப்பவர்களை நேர்வழியில் செலுத்துவதில்லை. இவர்கள் இறைவனது கோபத்திற்கு ஆளான வழிதவறியோர், “நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நம்பவில்லையோ அவர்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டமாட்டான். இன்னும் அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனையுமுண்டு” (16:104)
“அல்லாஹ் காஃபிர்களின் கூட்டத்தாரை நேர்வழியில் செலுத்த மாட்டான்”. (16:107)
“மனோயிச்சையைத் தெய்வமாகக் கொண்டவனை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிட்டான்”. (45:43)
“நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்க மாட்டான். இதைத் தவிர (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்”. (127:48)
“அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்ட நாடுகிறானோ அவருடைய நெஞ்சை இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்காக விசாலமாக்குகிறான். அவர்களுடைய நெஞ்சை வானத்தில் ஏறுபவன் நெஞ்சைப் போல் இறுகிச் சுருங்கும்படிச் செய்கிறான். இவ்வாறே ஈமான் கொள்ளாதவர்களுக்கு அல்லாஹ் தண்டனையை ஏற்படுத்துகிறான்”. (6:125)
இத்திருவசனம் அறிவியல் பூர்வமானது. விமானம் விண்ணின் மேலே ஏறும்பொழுது விண்ணில் காற்றின் அழுத்தமும் ஆக்சிஜன் வாயுவின் அளவும் குறைந்து கொண்டே செல்வதால் அதில் பயணம் செய்பவர்களின் நுரையீரல்கள் சுருங்கி மூச்சு விடுவதில் சிரமத்துடன் நெஞ்சு இறுகுவதை உணர்வார்கள். இந்த அறிவியல்பூர்வ உதாரணத்தின் மூலம் ஈமான் கொள்ளாதவர்களின் இறுகிய நெஞ்சைப்பற்றி விமானம் கண்டுபிடிக்கப்படாத அந்தக் காலத்திலேயே அல்குர்ஆன் அழகாகச் சொல்லிவிட்டது. ஆக, ஈமான் கொள்ளாமல் மனோயிச்சையின்படி வாழ்பவர்கள் தங்களுக்கே கேடு செய்து கொள்கின்றனர். அவர்கள் மறுமையில் பெறுவது கொடிய வேதனையே.
ஆக, திருக்குர்ஆனில் அல்லாஹ் காட்டிய நேர்வழியில் வாழ்ந்து, அல்லாஹ்வே ! எவர்களுக்கு அருள்புரிந்தாயோ அந்த நேர்வழியில் எங்களை நடத்துவாயாக என்று அவனிடம் உதவியை நாடினால் நமது பிரார்த்தனை ஒப்புக் கொள்ளப்படும்.
இம்மையில் வாழ்வோம் நேர் வழியில் !
மறுமையில் மகிழ்ந்திருப்போம் சுவனத்தில் !
நன்றி :
இனிய திசைகள்
சமுதாய மேம்பாட்டு மாத இதழ்
நவம்பர் 2011