கலாம் ! “மா” சலாம் !

இலக்கியம் கவிதைகள் (All)

( முபாரக் ரஸ்வி, திருச்சி )

ராமேஸ்வரத்திலிருந்து

ராஷ்டிரபதிபவன் வரை

அக்னிசிறகாய் பயணித்த

அப்துல்கலாமே …

சலாம் … ‘மா’சலாம் !

காலையில் எழுந்து

நாளிதழ் விற்று

நற்கல்வி பயின்ற – நீ

நாடேவியக்கும்

விஞ்ஞானியாய்

உருவானாய் !

தான் பயின்ற கல்வி

தரணியெல்லாம் அறிய

விண்ணிலே ஏவிவிட்டு

விழி உயரசெய்தாய் !

சாதி மத பேதமின்றி

நீதியாய் நடந்த உன்னை

நாட்டின் முதல்

குடிமகனாக்கி

அழகுபார்த்தனர்

அரசியல் வாதிகள் !

விஞ்ஞானத்தின்

சேனாதிபதியான உன்னை

ஜனாதிபதியாக ஏற்றனர்

இந்திய மக்கள் !

அந்த சிம்மாசனத்திற்கே

அழகு சேர்க்க

அங்கு சென்றாய் !

ஆம் …இன்று

ராஷ்டிரபதிபவனை

மக்கள் பவனாக மாற்றிய

மந்திரக்கோல் நீ !

நாடாளுமன்றம் மட்டுமல்ல

சட்டமன்றங்களும்

உனது உரையால்

தன்னையே சுத்தப்படுத்திக்

கொண்டதே !

‘இரட்டை உறுப்பினர்

பதவி எனும்

“ஆதாயம் தரும் பதவி”

மசோதாவை மறுபடியும்

மக்களவைக்கே

திருப்பி அனுப்பி

திகைக்க வைத்த

ஆசானாயிற்றே … நீ ?

எளிமையை

வலிமையோடு

கடைபிடித்து

பல கோடிகளை

உன் மாளிகையில்

மிச்சப்படுத்திக்காட்டினாய் !

காத்திருக்கிறது

வருங்கால இளைய சமுதாயம்

உன் வழிகாட்டுதலுக்காக …

மலர்ந்திருக்கிறது

மாணவச் செல்வங்கள்

உன் கனவை நினைவாக்க …

நீதியும் – நேர்மையும் தான்

உன் ஏகத்துவம் என

எங்களுக்கு எடுத்துரைத்தாய் !

பல்கலைக்கழக விழாக்களில்

ஆற்றிய உரையை

இனி பாரத தேசத்தின்

எல்லா திசைகளிலும்

ஆற்றிடலாம் என

ஆசிரியர் பணிக்கு

திரும்புகிறாயோ?

குடியரசு தலைவர் பதவிக்கே

கெளரவத்தை தேடிதந்த

முதல் குடிமகனே …

முன்னூற்றி அறுபது

அறைகள் கொண்ட

அம்மாபெரும் மாளிகையில்

ஒரே ஒரு அறையை

மட்டும் பயன்படுத்தி

உடுத்திய துணியோடும்

படித்த உன் புத்தகங்களோடும்

உன்னத தமிழனாக

திரும்புகிற ஒரே ஜனாதிபதி

நீ மட்டும் தான்

இருக்க முடியும்!

உன்னால்

தலை நிமிர்ந்தது

தேசம் மட்டுமல்ல!

தமிழனும் தான்!

முதுமை உன்

முகத்தில் தெரியலாம்!

உன் எதிரில் நிற்க

முடியுமா அதற்கு?

தொடரட்டும் … உன் பயணம் …

தெருவெல்லாம் துவங்கட்டும்

உன் தொலைநோக்கு சிந்தனை!

மனிதாபிமானமும் தேசபக்தியும்

விஞ்ஞான வளர்ச்சியும்

சமதர்ம ஜனநாயகமும்

எங்கும் பரவிட

எங்களுக்கு வழிகாட்டிடும்

அக்னிசிறகே …

அப்துல்கலாமே …

சலாம் … ‘மா’ சலாம் !

நன்றி :

குவைத் தமிழ் முரசு

ஆகஸ்ட் 2007

ரஜப் 1428

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *