1.முற்பகல் 9.30 முதல் 10.30 வரை:-முஸ்லிம் மகளிர் உதவி சங்கக் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம்-குறிப்பாக மாநில அரசு மாவட்டந்தோறும் வழங்கும் நலத்திட்ட உதவிகள் பெறுவது சம்பந்தமாக
(2)10.30-11.30 மணி வரை ஒரு திருமணம்,
(3)12.00-01.00வரை ”அல்லாஹ் உங்களை வெற்றியின் பக்கம் அழைக்கிறான்”என்ற அமைப்பின் நோக்கம் பற்றிய விளக்கம் மற்றும் மார்க்க வினாவிடைகளுக்குச் சரியான பதில் அளிப்பவர்களுக்குப் பரிசளிப்பு,
(4)01.00மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை சில திட்டங்களின் அறிமுகக் கூட்டம்,02.00- 04.00மணி வரை பகல் உணவு மற்றும் ஓய்வு.
(5)04.00 மணி முதல் இரவு 08.30 வரை சமுதாய மக்கள் நடை முறையில் பயன் பெறக்கூடிய பல விஷயங்கள் மற்றும் ஜமால் முகம்மது கல்லூரியின் முன்னாள் மாணவர்களுக்கான ஆண்டுச் சந்திப்பு ஆகியவற்றிற்கான கூட்டம்.உரிய நேரத்தில் தொழுகை.(இரவு உணவும் உண்டு)…. என ஐம்பெரும் விழாக்கள்!
இவையெல்லாம் என்ன? யாராவது ஓர் அமைச்சரின் ஒரு நாள் நிகழ்ச்சி நிரலா? அல்லது ஓர் அரசியல் தலைவரின் நிகழ்ச்சி நிரலா?-இந்த இரண்டுமே இல்லை! இறை நம்பிக்கையுடைய சமுதாய ஆர்வலரான ஒரு சமுதாயப் பிரமுகர் வீட்டுத் திருமணம் சார்ந்த நிகழ்ச்சிகள்தாம் இவை. 20.11.11-இல் சென்னையில் நடைபெற்றன என்றால், வியப்பாக இல்லை?
வியப்பு இத்துடன் முடியவில்லை.திருமணத்திற்கு அழைக்கப் பட்டவர்கள் திருமண மண்டபத்திற்கு வந்தவுடன் மீண்டும் ஒரு திருமண அழைப்பிதழும் சில பிரசுரங்களும் அளிக்கப் படுகின்றன.
இந்த அழைப்பிதழின் இரண்டாம் பக்கத்தில் அண்ணல் நபி(ஸல்)அவர்கள் ஹிஜ்ரி 10-ஆம் ஆண்டு துல்ஹஜ் 9-ஆம் நாள் அரஃபா பெருந்திடலில் ஆற்றிய பேருரை;அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு பின் அட்டையின் உட்புறத்தில்.
அதே அழைப்பிதழின் உட்புறத்தில் எதிர்வரும் 2012-ஆம் ஆண்டுக்கான காலந்தேர்-அதாங்க காலண்டர்;
அழைப்பிதழின் இரண்டு பக்கங்களில் திருமண நகழ்ச்சியில் கலந்து கொள்ள வரும் சர்வ சமயப் பிரமுகர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பு-சிறப்பாக “ நாங்கள் படித்து முன்னேறக் காரணமான திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி, மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி,அதனை உருவாக்கிய ராஜம் ராமசாமி,எங்களுக்குக் கல்வி வழங்கிய-வளர்த்து ஆளாக்கிய பெற்றோர் பெரியோர்(பெயர் விவரங்களுடன்) ஆகியோருக்கு நன்றியும் பிரார்த்தனையும்”என்ற குறிப்பு;
அத்துடன் மணமக்களின் ஈருலக நல்வாழ்விற்கு துஆச் செய்யுமாறு வேண்டுகோள்.இவற்றை படித்துக்கொண்டே திருமண மண்டபத்திற்குள் சென்றால்,அங்கே வாழ்த்துரையாம் செவியுணவு,பின்னர் நிரல்படி உரிய நேரத்தில் திருமணம்,வயிற்றிற்கும் வகை வகையான விருந்துணவு,பலவகைப் பானங்கள்,தாம்பூலம்…என்று எந்தக் குறையுமில்லை;யாருக்கும் குறைவில்லை.திருமணத்திற்க்கு அழைக்கப் பட்டவர்களில் ஏழை எளிய மக்களும் செல்வச் சீமான்களோடு சேர்ந்து உணவருந்திய காட்சி…மனதை நெகிழ்வித்தது.
இந்த மணமக்கள் கொடுத்து வைத்தவர்கள்.மனம் நிறைந்த ஏராளமானவர்களின் துஆ(பிரார்த்தனை)யை
இவர்கள் பெற்றிருப்பார்கள் என்பதில் எந்த ஐயமும் இருக்க வாய்ப்பே இல்லை.இந்த பிரார்த்தனையின் பேற்றினை தன் சொந்தக் குடும்பத் திருமணத்தை சமுதாயத்தின் ஐம்பெரும் விழாவாக ஒரே மண்டபத்தில் , வெற்றிகரமாக நடத்திக் காட்டிய மணமகளின் குடும்பத்தாரைக்-குறிப்பாக பெண்ணின் தந்தையை-யும் அழகிய முறையில் பெறக்கூடியவராவார்.இத்தகைய எடுத்துக் காட்டான திருமணத்தை இவ்வாறு ஒருங்கிணைத்து நடத்தியவரை உங்களுக்குப் பாராட்டத் தோன்றலாம்.அவ்ருடன் தொடர்புகொண்டு நாமும் இத்தகைய திருமணத்தை நடத்த எப்படி திட்டமிடவேண்டும் என்று ஆலோசனை கேட்கத் தோன்றலாம்.
இதோ அவருடைய தொடர்பு விவரங்கள்:–ஜனாப் பி.அப்துல் காதிர் அவர்கள் ,9840246265,044-24351989..
—————ஏம்பல் தஜம்முல்முகம்மது.