http://www.dinamalar.com/News_Detail.asp?Id=348963
மதுரை : துயில் கலையும் போது காதில் சுப்ரபாதமும், கண் விழிக்கும் போது கடவுளை பார்ப்பதும் நல்ல விஷயம் தான். ஆனால், சிரித்த முகம் காட்டி, செல்லமாய் கொஞ்சி, ஆதரவாய் அணைத்து துயில் எழுப்பும் அம்மா… டவுளுக்கும் மேலானவர். குழந்தைகள் அம்மாவைத் தான் அதிகம் விரும்புகின்றனர். அவர்களின் விருப்பத்திற்குரிய அம்மாவாக, இருக்கிறோமா… என்பதை, நாமே கேட்டுக் கொள்ள வேண்டியது தான்.பாலகனாய் இருக்கும் வரை பாசம் காட்டுகிறோம். பள்ளிச் சீருடையுடுத்தியதும், படிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து, பாசத்தை ஒதுக்கி விடுகிறோம். குழந்தைகளின் சின்னஞ்சிறு உலகத்திற்குள் எத்தனை போராட்டங்கள்… த்தக சுமை, பாடச்சுமை, மதிப்பெண் சுமை, சகமாணவர்களுடன் ஒப்பீட்டு சுமை… இதிலிருந்து மீள்வதற்கு, பள்ளிகளோ, பெற்றோர்களோ கற்றுத் தருவதில்லை. இன்று தேசிய குழந்தைகள் தினம்… குழந்தைகளின் உலகத்தை புரிந்து கொள்ள… இன்றிலிருந்து முயற்சி செய்வோம். புரிந்து கொண்ட அம்மாக்களின் அனுபவங்களை செவிமடுப்போம்…கே.கவிதா (குடும்பத்தலைவி), மதுரை: பள்ளியில் நம் குழந்தைகளை திட்டினாலும், பாராட்டினாலும், குழந்தைகளிடம் முகம் மாறாமல் அணுகவேண்டும். திட்டியதற்கான காரணத்தை நிதானமாக கேட்க வேண்டும். கோபப்பட்டு பேசினால், மறுமுறை நத்தைக்கூடு போல, உள்ளுக்குள்ளேயே சுருங்கி விடுவர்.நம்மிடம் பேசமாட்டார்கள். பள்ளி விட்டு வீட்டிற்கு வந்தால், ஒருமணி நேரம் விளையாட விடுவேன். அதன்பின், நானே பாடம் சொல்லித் தருவேன். எனவே பிள்ளைகள் என்னிடம் அதிக ஒட்டுதலாக இருக்கின்றனர்.
ஆர்.லதா(இணைப் பேராசிரியை), பாத்திமா கல்லூரி,மதுரை: மூத்தவன் படிப்பு, விளையாட்டு இரண்டிலும் “பெஸ்ட்’. 7ம் வகுப்பு படிக்கும், கடைக்குட்டிக்கு விளையாட்டில் தான் ஆர்வம். அதற்காக கோபப்பட்டு திட்டாமல், படிப்பின் முக்கியத்துவத்தை மென்மையாக உணர்த்துகிறேன். பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருக்கும் போது, உடனே வா… என கட்டளையிடக்கூடாது. பத்து நிமிடங்கள் கழித்து கண்டிப்பாக வரவேண்டும் என்றால், தானாகவே வந்துவிடுவர். தாய்மையுணர்வோடு, நட்பாகவும் பழகினால், பிள்ளைகளின் உலகம் நம் கைக்குள் இருக்கும்.
வி.ஜானகி(குடும்பத்தலைவி), மதுரை: ஏழு, நாலு வயதில் பிள்ளைகள் உள்ளனர். பையன் மூத்தவன். வீட்டில் பெயருக்கு தான் “டிவி’ இருக்கும். கூட்டுக் குடும்பத்தில் அனைவரும் பிள்ளைகளுடன் நேரத்தை செலவிடுவோம். மாலையில் களைத்து போய் வீடு திரும்பும் பிள்ளைகளை கட்டியணைத்தால் போதும். ஏதாவது சாப்பிட கொடுத்து, ஒருமணி நேரம் விளையாட விடுவோம். டியூசனுக்கு அனுப்புவதை விட, நாமே கற்றுத் தருவது, குழந்தைகளுடன் அதிக இணைப்பைத் தரும். ஏற்கனவே பள்ளி பாடங்கள் சுமையாக இருக்கும் போது, நாமும் படிக்கச் சொல்லி கட்டாயப்படுத்தக்கூடாது. டாக்டர் தீப் (குழந்தைகள் மனநலம்), மதுரை: காலையில் குழந்தைகளை எழுப்புவது முதல், இரவில் தூங்கச் செய்வது வரை, அன்பான, ஆதரவான, அரவணைப்பைத் தரும் பெற்றோர்களாக இருக்க வேண்டும். சோகமோ, சந்தோஷமோ, காதலோ… எதுவாக இருந்தாலும், குழந்தைகள் முதலில் பெற்றோர்களிடம் தான் பகிர்ந்து கொள்ள வேண்டும். அதற்கேற்ப, பெற்றோர்களும் பிள்ளைகளிடம் மனம்விட்டு பேசவேண்டும். இருவர் வேலைக்குச் செல்லும் இடங்களில், வீட்டுக்கு வந்தால் கூட அலுவலகத்தை பற்றியே பேசுவர். பிள்ளைகள் பேசவந்தால் தடுத்துவிடுவர். வீட்டுக்கு வந்தால், அலுவலக சிந்தனைகளை தூக்கி எறியுங்கள். எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும், உங்கள் பிள்ளைக்கு, சாதாரண அம்மா தான். ஒரு அம்மாவாக, அன்பு காட்டுங்கள். காலை எழுப்பும் போது, மென்மையான சொல்லை கையாள வேண்டும். மென்மையாக அணைத்து முத்தமிட்டால், குழந்தையின் உலகம் இனிமையாகி விடும். அந்த இனிமையை அனுபவிக்க விடுங்கள். படிப்பு மட்டுமே குழந்தைகளின் உலகமல்ல… ஓடியாடி உற்சாகப்படுவது தான் அவர்களது வாழ்க்கை.பள்ளிகளில் நூறு சதவீத தேர்ச்சி என்பது, ஆசிரியர்களின் இலக்காக இருக்கலாம். அதற்காக மதிப்பெண் பெறவைக்கும் இயந்திரமாக, மாணவர்களை நினைக்கக்கூடாது. வாழ்க்கைக் கல்வியை முதலில் கற்றுக் கொடுங்கள். ஆசிரியர்கள் பாடம் நடத்தும் விதத்தில் தான், மாணவர்களின் ஆர்வம் மாறுபடும். சிறுகதை, பாடல், எளிய செய்முறைகளுடன் பாடம் நடத்தினால், ஈடுபாட்டுடன் படிப்பர். கடனுக்காக, பாடத்தை நடத்தி முடிப்பதை விட, ஈடுபாடு, ஆர்வம், கடமை உணர்வுடன் பாடம் நடத்தினால், பள்ளிப்பருவம் கசக்காது.
பெற்றோரும், ஆசிரியரும் இணைந்து தான், இளைய சமுதாயத்தை இனிமையாக்க முடியும், என்றார்.