நாம்
முஸ்லிம்கள் என்று
நமது முகவரியைக் காட்டிய
இப்றாஹீம் நபியின்
தூய மார்க்கத்தின்
துலங்கும் பேரொளி
தியாகத் திரு நாள்!
அவர்
தொடங்கி வைத்த
“முதலானவை” பல.
அவற்றுள்
முக்கியமானது,
தியாகம்!
அவர்
கண்ட கனவு,
வஹீயாய் அமைந்தது;
செய்த செயல்
வரலாறானது;
அதாவது-
வாழும் வரலாறாக-
உலக முடிவு நாள்வரை
நீளும் வரலாறாக!
அதிலே
நமக்குள்ள பங்கை
நாமறிந்தோமா?
ஆன்மீக உலகம்,
திரும்பத் திரும்ப
நினைவு கூர்ந்து நெகிழும்
அந்தத் தியாகம்-
ஒரு குடும்பமே
கூடிச்செய்த தியாகம்!
ஷைத்தான்
எவ்வளவோ தடுத்தான்
என்றாலும்,
தந்தை சொல்ல
தனயன் கேட்க
தாயும் அதை ஏற்க
ஒரு கனவை-
கனவாக வந்த கட்டளையை
நிறைவேற்றும் மன உறுதி
அன்று
மினாவிலே மிளிர்ந்தது–
அல்லாஹ்வுக்காக!
“இறைவன்
ஏவியதைச் செய்யுங்கள்,
என்னைப் பொறுமையாளனாகக்
காண்பீர்கள்.
அன்னைக்கு என் சலாமுரைப்பீர்!”
என்று அன்று
வாளின் விளிம்பிலும்
வாய்மையாய்ப் பேசிய
உலகம் காணா
உத்தமப் பிள்ளை–
இஸ்மாயீல்.
இதயம் துடிதுடித்து
ஈரலும் பிளக்கும்
துன்பத்தின் உச்சியிலும்
இறை நம்பிக்கையாம்
நிறை நம்பிக்கையால்
நிலை குலையாது
மலையினும் உயர்ந்த
மாணிக்கங்கள்-
இப்றாஹீம் நபி,
இஸ்மாயீல்,
ஹாஜரா அன்னை!
அலயும் கடலுமாய்
அமைந்த
பொறுமையும் தியாகமும்
இப்றாஹீமைத்
“தோழனா”க்கியது!
இஸ்மாயீலை நபியாக்கியது!
மினா மலையுச்சியை
ஹிரா மலைக்கு
முன்னோடியாக்கியது!
அதனால்
வெகுமதிகள் பற்பல
விளையத் தொடங்கின.
குர்பானி என்பது
பிரியாணி ஆக்க உதவும்
சடங்கு அல்ல.
அது-
இப்றாஹீம் நபியின்
தியாகத்தைப்
புதுப்பித்துக் கொண்டே
இருக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட
புனித நிகழ்வு!
இருக்கிறதா இதில்
நமக்கு நெகிழ்வு?
வரலாற்றைத் திரும்பிப்
பாருங்கள்-
தியாகங்கள் முடிவதில்லை…
அவைதாம்
எவ்வளவு சிறந்த
தொடக்கங்கள்!
கீற்றுபோல் கிளம்பும்
அந்த ஒளிக்கதிர்கள்
கியாமத் நாளுக்குப் பிறகும்
கீர்த்தி தரும்.
தியாகங்கள்
அல்லாஹ்வுக்குரியவை(6:162)
அதனாலேயே அவை
மேலானவை; நம்மை
மேன்மைப்படுத்துபவை.
இல்லை என்றால்
இப்படிச்சொல்லி
இருப்பார்களா
இறுதித் திருத்தூதர்(ஸல்)?
அவர்கள்
திருவாய் மலர்ந்து தெரிவித்தார்கள்:
“தியாகம் என் கலை!”
வாருங்கள்,சோதரரே!
கலைகள் வளர்ப்போம்-
அல்லாஹ்வின் வழியில்!
–ஏம்பல் தஜம்முல் முகம்மது