முதுகுளத்தூர் அருகேயுள்ள கருமலைச் சேர்ந்த பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் அமைச்சரானார்

முதுகுளத்துார்

சென்னை: கட்சியில் நீண்ட கால உறுப்பினர்களாக இருந்து விசுவாசமாக உழைத்ததற்கு பரிசாக தமிழக அமைச்சரவையில் 6 புதிய அமைச்சர்களுக்கு இடம் கிடைத்துள்ளது.

தமிழக அமைச்சரவை நான்காவது முறையாக மாற்றப்பட்டுள்ளது. ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவை கடந்த மே 16-ம் தேதி பொறுப்பேற்றது. நான்கு மாதங்களில் நான்காவது முறையாக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமையன்று தமிழக அமைச்சரவையில் இருந்து 6 அமைச்சர்கள் நீக்கப்பட்டனர். அவர்களுக்கு பதிலாக ஆறு பேர் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். புதிதாகப் பொறுப்பேற்க உள்ள அமைச்சர்களுக்கு இலாகாக்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலாகாக்கள் விவரம்:

முதல் முறையாக அமைச்சராகியுள்ள தாமோதரனுக்கு மிக முக்கிய துறையான வேளாண்மைத் துறை வழங்கப்பட்டுள்ளது. ஆர்.காமராஜுக்கு உணவுத் துறை, எஸ்.சுந்தரராஜுக்கு கைத்தறி மற்றும் ஜவுளித் துறை, எம்.பரஞ்சோதிக்கு இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைத் துறை வழங்கப்பட்டுள்ளது. வி.மூர்த்திக்கு கால்நடை பராமரிப்புத் துறையும், கே.டி.ராஜேந்திர பாலாஜிக்கு செய்தித் துறையுடன் சிறப்புத் திட்டங்கள் அமலாக்கத் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.

புதிய அமைச்சர்களின் வாழ்க்கைக் குறிப்பு:

பரஞ்சோதி – வீணாகாத எதிர்பார்ப்பு

இந்து சமயம் – அறநிலையங்கள், சட்டத் துறை அமைச்சராக பொறுப்பேற்க உள்ள மு. பரஞ்சோதி எம்ஏ, பிஎல்., பட்டம் பெற்றுள்ளார். இவரது சொந்த ஊர் ஸ்ரீரங்கம் தொகுதிக்குள்பட்ட எட்டரை கிராமம். இவர் 1972 முதல் அதிமுக உறுப்பினராக உள்ளார்.

1988-ல் திருச்சி மாவட்ட துணைச் செயலராகவும்,1994-ல் மாவட்ட இணைச் செயலர், 1996-ல் மாநகர் மாவட்டச் செயலர், 2004-ல் புறநகர் மாவட்டச் செயலராகவும் தற்போது, அதிமுக திருச்சி புறநகர் மாவட்டச் செயலராகவும் பதவி வகிக்கிறார்.

தாமோதரன் – அம்மாவின் செல்லப்பிள்ளை

வேளாண் அமைச்சரான செ.தாமோதரன் கிணத்துக்கடவு அருகே உள்ள நல்லிகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவராவார்.

பத்தாம் வகுப்பு மட்டுமே படித்துள்ள தாமோதரன் 1972 முதல் அதிமுக உறுப்பினராக உள்ளார். 1974-ல் அதிமுக மாவட்ட பிரதிநிதி 1986-ல் தாளக்கரை ஊராட்சி மன்றத் தலைவர், 1988 முதல் பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய அதிமுக செயலர், 1996-ல் பொள்ளாச்சி

வடக்கு ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினராக பதவி வகித்துள்ளார். 2001 முதல் தொடர்ந்து கிணத்துக்கடவு எம்எல்ஏவாக வெற்றி பெற்றுள்ளார். நீண்ட கால எதிர்பார்ப்பு இப்போது அமைச்சர் பதவி கிடைத்துள்ளது.

ராஜேந்திர விசுவாசத்திற்கு பதவி

செய்தி, சிறப்புத் திட்டங்கள் அமலாக்கம் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி அருப்புக்கோட்டையை அடுத்த குருத்தமடத்தை சேர்ந்தவர் 42 வயதான இவர் பத்தாம் வகுப்பு படித்துள்ளார். இன்னும் திருமணமாகவில்லை.

1991 முதல் திருத்தங்கல் நகர அதிமுக செயலாளர். 1996 முதல் 2010 வரை திருத்தங்கல் நகராட்சி துணைத் தலைவர். 2000ம் ஆண்டு முதல்

விருதுநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளராக பதவி வகித்துள்ளார். தற்போது விருதுநகர் மாவட்டச் செயலாளராகவும்

உள்ளார். 2011-ல் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு சிவகாசி எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு தற்போது அமைச்சர் பதவி தேடி வந்துள்ளது. 

எஸ் சுந்தர்ராஜ்

கைத்தறிகள் – ஜவுளி அமைச்சர் டாக்டர் எஸ். சுந்தரராஜ் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள கருமல் கிராமத்தை சேர்ந்தவராவார். எம்.பி.பி.எஸ். படித்துள்ள இவர் 18 ஆண்டுகளாக மாவட்டப் பொருளாளராக இருந்து வருகிறார்.

1989-ல் சேவல் சின்னத்திலும், 1991, 2011-ல் இரட்டை இலை சின்னத்திலும் பரமக்குடி தனித்தொகுதியில் போட்டியிட்டு 3 முறை சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற்றுள்ளார். விசுவாசத்திற்காகவே இவருக்கு அமைச்சர் பதவி கிடைத்துள்ளது.

காமராஜுக்கு திடீர் ஜாக்பாட்

உணவுத் துறை அமைச்சரான காமராஜ் கோட்டூர் ஒன்றியம் சோத்திரியத்தை சேர்ந்தவர். 49 வயதான இவர் பி.எஸ்ஸி., எம்.ஏ. படித்துள்ளார்.

மாணவப் பருவத்திலிருந்தே அதிமுகவில் அதிக ஈடுபாடு கொண்டவர். கோட்டூர் ஒன்றிய ஜெ. பேரவைச் செயலர், கட்சியின் ஒன்றியச் செயலர், மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலர், ஜெயலலிதா பேரவை மாநிலச் செயலர், மாநிலங்களவை உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார்.

15 ஆண்டுகளாக அதிமுக திருவாரூர் மாவட்டச் செயலராக உள்ளார். தற்போதைய நன்னிலம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார்.

வி மூர்த்தி

பால் வளத் துறை அமைச்சர் மாதவரம் வி. மூர்த்தி பி.ஏ. படித்துள்ளார். 2006 முதல் திருவள்ளூர் மாவட்டச் செயலாளராக உள்ளார். 2006-ம் ஆண்டுசட்டப் பேரவைத் தேர்தலில் திமுக உறுப்பினர் கே.பி.பி.சாமியை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

இந்தமுறை வெற்றி பெற்றதன் மூலம் அமைச்சர் பதவி கிடைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *