இந்தப்பா ஒரு சந்தப்பா
எளிமையான கனவேற்றால் இலக்கும் எட்டும்
.. எதிர்ப்போரை அன்பென்னும் கயிறே கட்டும்!
தெளிவான எண்ணங்கள் வெற்றி ஈட்டும்
தோற்றாலும் வென்றாலும் பொறுமை காட்டு
அளவான நம்பிக்கை உனக்குள் வேண்டும்
அதற்குள்ளாய் வாழ்க்கையை அமைக்க வேண்டும்
வளமான வொழுக்கத்தைப் பேண வேண்டும்
வரம்புக்கு ளடங்கித்தான் வாழ வேண்டும்
புரிகின்ற மொழியாலே நீயும் சொல்லு
பிறர்நாடும் அமைதிப்புன் னகையால் வெல்லு
விரிகின்ற நட்பென்னும் வளையம் காக்கும்
விரைவாக வுன்பாதை வெற்றி நோக்கும்
—
1)கனவுகள் எளிதானால்
கடமைகள் எளிதாகும்
2) அன்பென்னும் கயிற்றால்
வம்பர்களைக் கட்டு
3) கருவின் சிசுவும்
கனியாகும் விதையும்
ஒரு காலம் வரை
பொறுப்பது போல்
பொறுத்தல் வேண்டும்
4) அதீதமான நம்பிக்கை
அவசரத்தின் குழந்தை
5) எப்படியும் வாழலாம்;
ஒழுக்கக் கேடானது
இப்படித்தான் வாழ்வதென்பது
ஒழுக்கத்தின் ஆணிவேர்
6) சொல்வதைத் தெளிவாகச்
சொல்வதற்குப் புரிந்த மொழி
7) பேச்சைக் காட்டிலும்
புன்னகையும் மௌனமும்
வலியது
8) முரண்பட்டோரையும்
அரவணைத்தலே
திரண்ட வெற்றிக் கதவு
திறக்கும் திறவுகோல்
—
”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பிறப்பிடம்)
அபுதபி(இருப்பிடம்)
அலை பேசி: 00971-50-8351499