கடாஃபியின் வீழ்ச்சி; மக்களின் எழுச்சியா? அமெரிக்காவின் சூழ்ச்சியா?

இலக்கியம் கட்டுரைகள்

 

லிபியாவை 42 ஆண்டு காலம் ஆட்சி செய்த கடாபி, தன் சொந்த மண்ணில் கடந்த 20ம் ,தேதி கிளர்ச்சியாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற செய்தி பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த நாட்டின் ஆட்சியை, 1969ம் ஆண்டு ராணுவ கேப்டனாக இருந்த கடாபி, புரட்சி மூலம் கைப்பற்றினார். கடந்த 42 ஆண்டு காலம் ஆட்சி செய்தார். துனிசியாவில் ஏற்பட்ட மக்கள் புரட்சியை காட்டி, கடாபியை பதவியை விட்டு நீக்கிட முயற்சி செய்த ஒரு கூட்டம் மக்கள் கிளர்ச்சிக்கு வித்திட்டது. கிளர்ச்சியாளர்கள் மீது கடாபி படையினர் தாக்குதல் நடத்தினர். இதில், நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். சமயம் பார்த்து காத்திருந்த உலக சட்டாம்பிள்ளையான அமெரிக்காவும், அதன் நேச நாடுகளும் கூடிய ‘நேட்டோ’ எனும் நாச நாட்டுப் படைகள் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக லிபியா ராணுவத்தினர் மீது தாக்குதல் தொடுக்க சற்றே பின் வாங்கியது கடாபியின் ராணுவம். கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுத உதவி வழங்கியதோடு, வான்வெளி தாக்குதலையும் லிபியாவில் மேற்கொண்டது நேட்டோ.

அதோடு, “கடாபி சரணடைய வேண்டும்’ என, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் வற்புறுத்தின. ஆனால், இதை கடாபி மறுத்து விட்டார். நெதர்லாந்தில் உள்ள சர்வதேச கோர்ட், கடாபியை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது. தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் லிபிய அதிபர் மும்மர் கடாபி, அவரது மகன் சைப் அல் இஸ்லாம், உளவுத்துறைத் தலைவர் அப்துல்லா அல் சனுசி ஆகியோருக்கு கைது வாரண்ட்டை பிறப்பித்தது. ”சரணடைய மாட்டேன்; நேட்டோவுக்கு அஞ்சமாட்டேன்; வேறு நாட்டிற்கு ஓடவும் மாட்டேன்; வெற்றி அல்லது  வீரமரணம் என்பதே எனது இலக்கு என்று கர்ஜித்தார் கடாபி. 

இந்நிலையில் நேட்டோ ஆதரவுடன் கிளர்ச்சிப் படைகளின் கை ஓங்கியதில், சமீபத்தில் தலைநகர் திரிபோலி கிளர்ச்சியாளர்களிடம் வீழ்ந்ததால்,  ஆட்சியை இழந்த நிலையில், கடாபி தலைமறைவானார். கடாபியின் சொந்த ஊரான சிர்தியில் கடாபி மறைந்திருக்கலாம் எனக் கருதிய   கிளர்ச்சியாளர்கள் கடந்த ஒரு வாரமாக தாக்குதல் நடத்தி வந்தனர். இந்நிலையில் இங்கு நடந்த கடும் சண்டையில், கடாபியின் அமைச்சரவையில் ராணுவ அமைச்சராக இருந்த அபுபக்கர் யூனுஸ் பலியானார். கடாபியின் மகன் ஒருவரும் பலியாகியுள்ளார். இதைத் தொடர்ந்து, பலத்த காயங்களுடன் கடாபி பிடிபட்டார். அவரது இரண்டு கால்களும் பலத்த காயமடைந்திருந்ததாகவும் கிளர்ச்சிப் படையினர் தெரிவித்தனர். இந்த சண்டையில், கடாபியின் உடலில் ஏராளமான குண்டுகள் பாய்ந்துள்ளதாக கூறப்படுகிறது. பின்பு அவர் மரணமடைந்தார் என்பதை விட காயங்களுடன் பிடிக்கப்பட்ட காடபியை கிளர்ச்சியாளர்கள் தாக்கியும், சுட்டும் கொன்றனர் என்ற தகவல் வலுவானதாக ஊடகங்களில் கூறப்படுகிறது.

mdf77431_17a14sh-17a14si.jpguntitled.bmp

கொல்லப்பட்டதாக கூறப்படும் கடாபியின் புகைப்படங்கள், வீடியோக்கள் மீடியாக்களில் வலம் வருகிறன. இவைகள் கடாபி கொல்லப்பட்டதை ஊர்ஜிதப்படுத்துவது போல் இருக்கிறது. அமெரிக்க அதிபர் ஒபாமாவும் கடாபியின் மரணத்தை உறுதிப் படுத்தியுள்ளார். மேலும் அமெரிக்காவின் வெளியுறவுச செயலாளர் ஹிலாரி கிளிண்டன் லிபியாவுக்கு சென்று திரும்பிய மறுநாளே கடாபி கொல்லப்பட்டார் என்ற செய்தி சற்று சந்தேகத்தையும் எழுப்புகிறது.

எது எப்படியோ கடாபி கொல்லப்பட்டார். கடாபியின் மரணம் என்பது அவரது சர்வாதிகார ஆட்சியின் மூலம் பாதிக்கபட்ட மக்களின் எழுச்சியின் விளைவு என்று ஊடகங்கள் ஆரூடம் சொல்கின்றன. ஹிட்லர், முசோலினி, போன்றவர்கள் பட்டியலில் கடாபியையும் சேர்த்து அவரை சர்வாதிகாரியாக காட்டுவதில் வெற்றியும் பெற்றுவிட்டன. சர்வாதிகார ஆட்சி நடத்துவதற்கு இது ஹிட்லர் காலம் அல்ல என்பதை மட்டும் ஏனோ ஊடகங்கள் வசதியாக மறைத்து விட்டன. கடாபியின் 42 ஆண்டுகால சர்வாதிகார ஆட்சியில் மக்கள் பாதிக்கப்பட்டதாக கடந்த ஆண்டுவரை ஊடகங்களில் எந்த செய்தியும் இல்லையே? இந்த ஆறுமாத காலமாகத் தானே லிபியா ஊடகங்களில் அடிபடுகிறது. அப்படியானால் கடாபி திடீரென சர்வாதியாக மாறிவிட்டாரா? அவரது சர்வாதிகாரத்தால் மக்கள் பாதிக்கப்பட்டிருந்தால், கிளர்ச்சிக்கு பின்னால் பிடிவராண்டு பிறப்பிக்கும் சர்வதேச நீதிமன்றம், முன்பே கடாபிக்கு பிடிவாரண்டு பிறப்பிக்காதது ஏன்? மேலும் மனித உரிமை அமைப்புகள் எல்லாம் கடாபியின் நாற்பது ஆண்டுகால சர்வாதிகார செயல்களை கண்டும் காணாமல் இருந்ததா? உலக ஊடகங்கள் பார்வைக்கு நாற்பது ஆண்டுகால சர்வாதிகாரம் தெரியாமல் மறைந்து விட்டதா? அப்படி ஊடகங்களுக்கு தெரியாமல் அடக்குமுறையை அமுக்கி விடமுடியுமா? அப்படியாயின் மக்கள் கிளர்ச்சி என்பது சர்வாதிகாரத்தின் பாதிப்பால் மட்டும் எழுந்ததல்ல. மாறாக வேறு ஏதோ ஒரு பின்னணி உள்ளது என்பது தெரிகிறதல்லவா?

அது என்ன? அரபுலகின் அஞ்சா நெஞ்சன் சதாம்  ஹுசைன் எப்படி அமெரிக்க ஏகாதிபத்தியத்தை நெஞ்சுரத்தோடு எதிர்த்தாரோ, அதே போல அமெரிக்காவின் சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர் கடாபி. அமெரிக்காவுக்கு அனுதினமும் ஒத்து ஊதுவதையே தொழிலாக கொண்டிருக்கும் ஐ.நா. பற்றி, ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் கடாபி பேசுகையில், 

”ஐ.நா. சபையும் இந்த பாதுகாப்பு கவுன்சிலும் உருவாக்கப்பட்ட பின்னர் 65 போர்கள் நடந்துள்ளன. இதற்கு மேலும் இதுபோல நடக்க கூடாது.பாதுகாப்பு கவுன்சில் என்று கூறுவதை விட தீவிரவாத கவுன்சில் என்று கூறினால் பொருத்தமாக இருக்கும்.”என்றார்.

அதோடு, தனது வீட்டோ அதிகாரத்தை வைத்து அமெரிக்க அநியாயம் செய்து வருவதால், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உள்ளன நிரந்தர உறுப்பினர்களுக்கு வீட்டோ அதிகாரம் இருக்கக்   கூடாது” என்றார்.

மேலும் அனைத்து நாடுகளுக்கும் சம உரிமை வேண்டும் என்ற கருத்தில் கடாபி, ஆப்பிரிக்க யூனியன்,லத்தீன் அமெரிக்கா  மற்றும் ஆஸ்திரேலியா  ஆகியவற்றுக்கு சபையில் பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும். மேலும் நிரந்தர உறுப்பு நாடுகளை சுழற்சி முறையில் அதாவது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்” என்றார்.

அதேபோல கொரியா , வியட்நாம் , ஈராக் , ஆப்கானிஸ்தான் போர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று முழங்கிய கடாபி, ”பின்லேடன் தலிபான் என்று யார் சொன்னது. பின் லேடன் தலிபான் அல்ல , ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவரும் அல்ல.” என்று அமெரிக்காவுக்கு செக் வைத்தார்.

இதுபோல வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அமெரிக்காவின் அநியாயங்களை அகிலம் அறியும் வகையில் ஆணித்தரமாக பதிவு செய்தார் கடாபி. இது சதாமுடன் நாடு ரீதியான நமது எதிரிகள் சகாப்தம் ஒழிந்தது என்று கருதிய அமெரிக்காவுக்கு ‘கிலி’யை உண்டாக்கியது. அதே நேரத்தில் ஈராக் போன்று நேரடியாக போர் தொடுத்து வாங்கிக் கட்டிக் கொள்ளவும் அமெரிக்கா விரும்பவில்லை. எனவே பலம் நழுவி பாலில் விழுந்த கதையாக மக்களின் கிளர்ச்சி சிறு பொறியாக கிளம்ப,  அதை ஆயுதப் போராட்டமாக மாற்றி தானும் லிபியாமீது ஆயுத மழை பொழிந்து கடாபியை வீழ்த்தியுள்ளது அமெரிக்கா. எனவே கடாபியின் வீழ்ச்சி என்பது அமெரிக்காவின் சூழ்ச்சி என்பதே உண்மை.

அடுத்து இந்த நேரத்தில் இன்னொன்றையும் இங்கே பதிவு செய்கிறோம். அமைதியாக போராடும் மக்கள் மீது கடாபி ஆயுதப்பிரயோகம் செய்து மக்களை கொன்றார். எனவே மக்களை காக்கவே நேட்டோ களமிறங்கியது என்ற அமெரிக்காவின் கூற்று உண்மையானால், லிபியாவில் கிளர்ச்சி தொடங்கிய அதே காலகட்டத்தில் தான் பஹ்ரைன், சிரியா, ஏமன் ஆகிய நாடுகளிலும் தொடங்கியது. இதில் பஹ்ரைனில் பெரிய அளவு போராட்டக்காரர்கள் பலியாகவில்லை. எனினும், சிரியா-ஏமன் ஆகிய நாடுகளில் இன்றுவரை கிளர்ச்சியாளர்கள் பலியாகி வருகின்றனர். உலக மக்களின் ஆபத் பாந்தவனான அமெரிக்கா, இந்த நாடுகளுக்கு  ஏன் தனது படையை அனுப்பவில்லை? ஒரே காரணம் தான். ஏமனோ-சிரியாவோ கடாபி போன்று அமெரிக்க எதிர்ப்பாளர்கள் அல்ல. எனேவேதான் அங்கே அந்த ஆட்சியாளர்களால் மக்கள் கொல்லப்பட்டாலும் அமெரிக்கா கண்டு கொள்ளவில்லை. எனவே லிபியா மக்கள் மீதான கருணையால் அமெரிக்கா லிபியா மீது தாக்குதல் தொடுக்கவில்லை. மாறாக தனது எதிரியை ஒழிக்கவே இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டது.

அடுத்து கடாபி கொல்லப்பட்டவுடன் ஒபாமா பேசிய செய்தியில், கடாபி அமெரிக்க ஜனாதிபதிகளுக்கு எதிரானவராக இருந்தார் என்று கூறியுள்ளார். அதுமட்டுமல்ல அடுத்து ஒபாமா சொல்லியுள்ளதுதான் மிக முக்கியமான ‘பாய்ன்ட்’. அதாவது ”லிபியாவில் ஏற்பட இருக்கும் இடைக்கால அரசாங்கத்துடன் ஒரு பங்குதாரராக அமெரிக்கா இருக்கும்.” என்கிறார். இது ஒன்றே கடாபி கொல்லப்பட்டதற்கான காரணத்தை அறிந்து கொல்லப் போதுமானதாகும். இராக்கிலும், ஆப்கானிலும் இருந்த தனது எதிரிகளை ஒழித்து, அங்கே தனக்கு தலையாட்டும் ஒரு பொம்மை ஆட்சியை நிறுவியது போன்று, லிபியாவின் கடாபியை ஒழித்து அங்கே ஒரு பொம்மை ஆட்சியை நிறுவுவதுதான் அமெரிக்காவின் நோக்கம் என்பது ஒபாமா வார்த்தை சொல்லும் உண்மையாகும். மேலும் ஒபாமா சொல்கிறார்; ”மேற்கு ஆசியாவில் உள்ள மற்ற சர்வாதிகாரிகளுக்கு ஒரு எச்சரிக்கை” என்கிறார். ஒபாமாவின் இந்த பேச்சு,அமெரிக்கவை எதிர்க்கும் எவரும் ஆட்சியிலும்-அதிகாரத்திலும் ஏன் உயிரோடு கூட இருக்கமுடியாது என்பதை கடாபியை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என்று மிரட்டும் வகையில் உள்ளது.

அமெரிக்காவின் தொடர் அநீதிகளை கண்டும் காணாமல் இருக்கும் நாடுகள், இனியேனும் கண்விழித்து கண்டிக்க முன் வரவேண்டும். குறிப்பாக அண்டை வீடுகள் பற்றி எறிந்தால்     நமக்கென்ன என்ற ரீதியில் இருக்கும் முஸ்லிம் நாடுகள் முன்வரவேண்டும். தவறினால் நேற்று..சதாம்., இன்று கடாபி., நாளை.?

இறுதியாக லிபிய மக்கள் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும். கடாபி உண்மையில் சர்வாதிகாரியாக இருந்து லிபிய மக்கள்  பாதிக்கப் பட்டிருந்தாலும், அந்த பாதிப்பை போக்குவதற்கு லிபிய மக்கள் கொண்ட வழிமுறை நிரந்தர தீர்வளிப்பைவையாக இல்லை.  பெயரில் மட்டும் ‘நல்லபாம்பு’ என்று உள்ளதால், இதற்கு விஷம் இருக்காது என்று நம்பி நடு வீட்டில் வைத்தால் என்றாவது அது தீண்டாமல் விடாது. அதைப் போல கடாபியை தேளாக கருதிய லிபிய மக்கள், தேளை  ஒழிக்க அமெரிக்கா எனும் நல்ல[?]பாம்பின் உதவியை நாடி விட்டார்கள்.  அது காலைச் சுற்றிய பாம்பு என்பதை கண்முன்னே ஆப்கானிலும்- ஈராக்கிலும் கண்டபின்னும் லிபிய மக்கள் கணிக்கத் தவறிவிட்டார்கள். எது எப்படியோ, இனியாவது லிபியாவில் ரத்தம் சிந்தாமல் இருந்தால் சரிதான்.

நன்றி; சமுதாய மக்கள் ரிப்போர்ட் வார இதழ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *