பேராசிரியர் ஹாஜி. T.A.M ஹபீப் முஹம்மது M.Sc.,M.Phil.,
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய ஏக இறைவனைக் குறிக்கும் தனிப்பட்ட பொதுப்பெயர் அல்லாஹ். அல்லாஹ்வினால் அருளப்பட்ட சூரா பாத்திஹாவின் முதல் மூன்று திருவசனங்களில் அல்லாஹ்வின் நான்கு அழகிய திருப்பெயர்கள் சிறப்பாக அமையப் பெற்று அல்லாஹ்வின் மகத்துவ மிக்க குணம் (தாத்) மற்றும் தன்மை (ஸிபத்து) ஆகியவற்றை அறிவிக்கின்றன. ரப், மாலிக், அர்ரஹ்மான் மற்றும் அர்ரஹீம் என்பவையே அந்த நான்கு திருப்பெயர்கள். முதல் இரண்டு பெயர்கள் அல்லாஹ்வின் நிர்வாக அடிப்படையிலும், அடுத்த இரண்டும் அல்லாஹ்வின் செயல் ரீதியிலும் அமைந்துள்ளன. சூரா பாத்திஹாவின் பிற்பகுதியில் நாம் கேட்கும் துஆ அமைந்துள்ளது. ஒவ்வொரு வேளை தொழுகையிலும் நாம் முதன் முதலில் உன்னதமான சூரா பாத்திஹாவை ஓதிவிட்டுப் பின்வேறு சூராவின் திருவசனங்களையும் ஓதி அல்லாஹ்வுக்கே ருகூஉ மற்றும் ஸஜ்தா செய்து நன்றியுடன் வணங்குகிறோம். இனி சூரா பாத்திஹாவில் வரும் அல்லாஹ்வின் திருப்பெயர்களின் மகத்துவத்தை ஆராய்வோம்.
முதல் வசனம் : “அல் ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்” – இதன் பொருள் “எல்லாப் புகழும் எல்லா உலகும் ஏகனாய் படைத்துப் பராமரிக்கும் அல்லாஹ்வுக்கே ஆகும்,” இவ்வசனத்தில் ரப்புல் ஆலமீன் என்பது வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றிப் படைத்துக் காத்து பராமரிக்கும் துவக்கமும் முடிவும் இல்லாத அல்லாஹ்வின் நிர்வாக நிலை (official position).வானங்கள் மற்றும் பூமியில் உள்ள அனைத்துப் படைப்புகளும் அறிவியல் அடிப்படையில் அல்லாஹ்வினால் படைக்கப்பட்டுள்ளன. இதனை அறிவியலார் தங்கள் ஆராய்ச்சியின் மூலம் படிப்படியாக வெளிக்கொணர்கின்றனர்.
“துவக்கத்தில் வானங்களில் உள்ள அனைத்தும் மற்றும் பூமியும் ஒன்றாக இணைந்தே இருந்தன. பின்னர் நாம் அவற்றைப் பிரித்து வானங்களாகவும் பூமியாகவும் பிரித்தமைத்தோம்” (21:30) என்ற திருவசனத்தை விண்ணியல் இயற்பியலாளரும் தங்களது பெரிய வெடிப்புக்கோட்பாடு (Big Bang hypothesis) மூலம் ஏற்றுக் கொள்கின்றனர் ஆக உலகெலாம் படைத்து உயர்வுறக் காக்கும் பேரறிவாளனான ரப்புல் ஆலமீனின் நிர்வாகத் தன்மைக்கு நிகர் ஏதும் இல்லை.
இரண்டாவது வசனம் : “அர்ரஹ்மானிர் ரஹீம்” – இதன் பொருள்: “அல்லாஹ் அளவற்ற இம்மையில் எல்லோருக்கும் (மனித, ஜின், மூமின், காஃபிர் ஆகிய அனைவருக்கும் ) பேரருள் புரிபவன் ; மறுமையில் மூமின்களுக்கே நல்லருள் புரியும் வல்லோன். இவ்வசனத்தில் அர்ரஹ்மான் மற்றும் அர்ரஹீம் என்னும் அழகிய திருப்பெயர்கள் அல்லாஹ்வின் தனிப்பட்ட சிறந்த பண்புகளை விளக்குகின்றன.
அல்லாஹ்வின் படைப்புகள் அனைத்தும் மனிதனுக்குப் பயனளிக்கும் வகையிலேயே அமைந்துள்ளன. மனிதனுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும், அருளியுள்ள அருட்கொடைகளுக்கு அளவேயில்லை எனலாம். அர்ரஹ்மானின் அல்குர்ஆனே ஓர் அருட்கொடை தான் என்றும், மனிதப் படைப்பே ஓர் அருட்கொடைதான் எனவும், மனிதனுக்குப் பேசவும் எழுதவும் கற்றுக் கொடுத்ததும் அல்லாஹ்வின் அருட்கொடைதான் எனவும் அர்ரஹ்மான் அத்தியாயத்தில் காணலாம்.
மேலும், “நபியே நாம் உம்மை அகிலத்தார்க்கெல்லாம் ஓர் அருட்கொடையாகவேயன்றி அனுப்பவில்லை” (21: 107) என்றும் “மனிதனைப் பாதுகாக்கும் மறைவான மலக்குகளும் அருட்கொடைதான்” (13:11) என்றும் “(பயபக்தியுடையவர்களை ) நரகத்தை விட்டுக் காப்பாற்றப்படுவதும் இறைவனின் அருட்கொடையும், மாபெரும் வெற்றியும் ஆகும்” (45:56-57), என்றும் அல்லாஹ்வினால் அறிவிக்கப்படுகிறது.
உயிருள்ள மற்றும் உயிரற்ற படைப்புகளிலிருந்து பெறப்படும் எண்ணிலடங்கா அருட்கொடைகளைப் பற்றிக் கூறும் திருவசனங்கள் நிறைய உள்ளன. அவற்றுள் ஒரு சிலவற்றை பார்ப்போம்.
“ஒளிவீசும் சூரியனை அமைத்துக் கார்மேகங்களிலிருந்து மழையையும் பொழிவித்து அதைக்கொண்டு தானியங்களையும் வெளிப்படுத்தியுள்ளோம்” (78: 13-15)
உயிரினங்களை உய்விக்கும் மழைநீர், சூரிய ஒளிச்சக்தி மற்றும் வாயுக்களைப் பயன்படுத்தித் தாவரங்கள் உற்பத்தி செய்யும் உணவை மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களும் பெற்று உயிர் வாழ்வதைச் சுட்டிக் காட்டுகிறது அல்லாஹ்வின் மேற்கண்ட திருவசனம். இதுபோல் கால்நடைகளிலிருந்து பெறப்படும் பயன்களைப் பற்றிப் பல வசனங்கள் உள்ளன.
திரைக் கடல் ஓடித் திரவியம் தேட கப்பல் பயணத்தை வசப்படுத்திக் கொடுத்திருப்பது அல்லாஹ்வின் அருட்கொடையே.
“நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டும் அவனுடைய அருட்கொடையைத் தேடவும் கப்பல் பயணத்தை வசப்படுத்திக் கொடுத்தோம்” (16:14)
உழைப்பதற்குப் பகலும் ஓய்வெடுக்க இரவும் அல்லாஹ்வின் ரஹ்மத் என்பதை விளக்கும் வசனங்களைப் பாருங்கள். “உங்களுடைய உறக்கத்தை இளைப்பாறுதலாக ஆக்கினோம்” (30:12)
மேலே உள்ள வசனத்தில் சொல்லப்படும் உறக்கம் அல்லாஹ்வினால் அருளப்பட்டதே. இரவில் நம் உடலில் சுரக்கும் ‘மெலடோனின் ‘ என்ற ஹார்மோன் நம்முடைய தூக்க – விழிப்பு சுழற்சியைக் கட்டுப்படுத்துவதால் நாம் உறங்குகிறோம். உறங்கி விழிக்கிறோம். இந்த ஹார்மோன் இல்லாவிட்டால் தூக்கம் வராது. ஆக உறக்கம் நாமாக உறங்குவதில்லை: அல்லாஹ்வினால் அருளப்பட்டது.
இதுபோல் மனித உடலில் சீராக அனைத்து நிகழ்வுகளும் அல்லாஹ்வின் கட்டுப்பாட்டில் உள்ளதால் அவையனைத்தும் அல்லாஹ்வின் அருட்கொடைதான். ஐம்புலங்களின் வாயிலாக நாம் அடையும் பயன்களை நாம் நன்றாகவே அறிவோம். உண்ட உணவு செரிப்பதும், செரித்த உணவுச் சத்துக்களை இரத்தம் எடுத்துச் செல்வதும், அதன் மூலம் உடலின் அனைத்துப் பாகங்களும் சக்தியைப் பெற்று இயங்குவதும், கழிவுகள் வெளியேற்றப்படுவதும், நோய் எதிர்ப்புச் சக்தியைப் பெருக்குவதும் என அல்லாஹ்வின் கிருபையை இப்படியே சொல்லிக்கொண்டே போகலாம்.
எல்லாவற்றிற்கும் மேலாகத்தலையை உயர்த்தி இரு கைகளையும் கொடுத்துப் பகுத்தறிவுச் சிந்தனைக்குப் பிறப்பிடமான முன்னெற்றியின் உள்ளே அமையப் பெற்ற நன்கு வளர்ச்சியடைந்த மூளையின் முன்பகுதி (Highly developed frontal lobe of the cerebrum) யையும் கொடுத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். இவற்றை அல்லாஹ் மனிதனுக்கு மட்டும் அளித்துள்ள மாபெரும் அருட்கொடை. வேறு எந்த ஒரு உயிரினத்திற்கும் அருளவில்லை. கணினி – இணையதள அறிவியல் மற்றும் அனைத்து தொழில் நுட்ப கண்டுபிடிப்புகள், இறைச் சிந்தனை, நல்லவற்றையும், தீயவற்றையும் பகுத்தறியும் ஆற்றல் இவற்றிற்குப் பிறப்பிடமான இந்த மூளைப்பகுதியை உள்ளடக்கிய முன்னெற்றியைத் தொழும் பொழுது தரையில் வைத்து ஸஜ்தா செய்து அல்லாஹ்வுக்கு நன்றி தெரிவிக்கிறோம் இது மிகவும் பொருத்தமானதே, மேலே சொன்னவற்றையெல்லாம் சுட்டிக் காட்டும் திருவசனங்களைப் பாருங்கள்.
“திடமாக நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம்” (95:4)
“மனிதன் அறியாதவற்றை யெல்லாம் கற்றுக் கொடுத்தான்” (95 :5:)
அடுத்து அல்லாஹ்வின் நிகரற்ற அன்பின் மகத்துவத்தையும், கருணையையும் திருவசனங்களின் வாயிலாகவே அறிகிறோம்.
“அல்லாஹ் மிக மன்னிப்போனாகவும் பேரன்புடையோனுமாகவும் இருக்கிறான் “ (2 : 218)
“அல்லாஹ் தன் அடியார்கள் பால் அன்பு மிக்கவனாக இருக்கிறான்” (42 : 19)
இறைவன் பாவத்தை மன்னிப்பவனாகவும் மிக்க மேலான கிருபையுடையவனாகவும் இருக்கிறான் என்று அல்குர்ஆனில் பல இடங்களில் வருகின்றன. இதன் மூலம், எல்லோரும் ஈடேற்றம் அடைய வேண்டும் என்பதில் உள்ள அல்லாஹ்வின் நிகரற்ற அன்பினைக் காணமுடிகிறது. தன் வசனங்களில் இறை நிராகரிப்பவர்களும் ஈடேற்றம் அடைய வேண்டும் என்பதற்காக அவர்களை நோக்கி “நம்பிக்கை கொள்ள மாட்டார்களா? செவி சாய்க்க மாட்டார்களா? நன்றி செலுத்த மாட்டார்களா? என்று இப்படித்தான் பரிவுடன் அல்லாஹ் கேட்பதைப் பல வசனங்களில் காணலாம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் அன்பாக பேசி தங்கள் சொல்லிற்கு இணங்க வைப்பதுபோல் – இறைவன் மன்னிப்போனாகவும் பேரன்புடையோனாகவும் இருப்பது போல் நாம் பிறர் குறைகளை பெரிதுபடுத்தாமல் அவர்களை மன்னித்து அன்பு பாராட்ட வேண்டும்.
மூன்றாவது வசனம் : “மாலிகி யவ்மித்தீன்” – மாலிக் என்னும் அல்லாஹ்வின் அழகிய திருப்பெயர் நியாயத்தீர்ப்பு நாளின் அதிபதி என்பதைக் குறிக்கிறது. இறைக்கட்டளைக்குப் பணிந்தவர்களுக்கு சுவர்க்கமும் இறை நிராகரிப்பவர்களுக்கு நரகமும் என நியாயத் தீர்ப்பு அளிக்கும் நாளின் அதிபதி (owner of the day of judgement).மனித மற்றும் ஜின் வர்க்கத்தின் தீர்ப்பு நாளின் அதிபதியாக விளங்குவது அல்லாஹ்வின் நிர்வாகக் கடமையாகும்.(official duty).
“நியாயத் தீர்ப்பு நாள் உலக முடிவு நாளைத் தொடர்ந்து வருவது ஆகும். உலக முடிவு நாள் நிச்சயமானது” (69 :1). “அதன் முடிவெல்லாம் இறைவனிடம் இருக்கிறது” (79 :44)
“எவராலும் எப்பொழுது நிகழும் எனச் சொல்ல முடியாது. அது வானங்களிலும் பூமியிலும் பெரும் பளுவான சம்பவமாக நிகழும்” (7 :187)
“அந்நாளில் வானம் பிளந்து அதன் சக்தியை இழந்து விடும்” (69 :16). இக்கருத்தையே விண்ணியல் விஞ்ஞானிகளும் கூறுகின்றனர். பின் ஒரு காலக் கட்டத்தில் ஈர்ப்பு சக்தி குறைந்து அனைத்து நட்சத்திர கூட்டமைப்புத் தொகுப்புகளும் பெரும் சப்தத்துடன் மோதி ஒன்று சேர்ந்துவிடும். (Big crunch) என்று சொல்கின்றனர். அவர்களால் அது எப்பொழுது நிகழும் என சொல்ல முடியவில்லை.
ஆக இறுதி நாளில் படைப்புகள் அனைத்தும் அழிந்து, நிலைத்து நிற்பது அல்லாஹ்வே. படைப்புகள் அழிக்கப்பட்டு மறுமை ஆரம்பிக்கும் பொழுது ஸூர் ஊதப்படும். உடனே, மண்ணறையிலிருந்து வெளிப்பட்டு மனிதர்கள் இறைவனிடம் விரைவார்கள் (23 :51). இதனைத் தொடரும் நியாயத் தீர்ப்பு நாளில் நிலையற்ற இம்மை வாழ்வில் செய்த செயல்களைப் பற்றி விசாரிக்கப்பட்டு நன்மை செய்தவர்களுக்குச் சுவர்க்கமும், தீயவை செய்தவர்களுக்கு நரகமும் கிடைக்கும்.
மாலிக் யவ்மித்தீனின் தீர்ப்பு எப்படிப்பட்டது என்பதைக் கீழ்க்காணும் இறை வசனம் எடுத்தியம்புகிறது.
“(தீர்ப்பு நாளின் நீதித் தராசில்) எவருடைய (நன்மையில்) நிறை கனத்ததோ அவர் திருப்தி பொருந்திய வாழ்வில் (சுவனச் சோலைகளில்) இருப்பர். ஆனால் எவனுடைய (நன்மையின்) நிறை இலேசாக இருக்கிறதோ அவன் தங்குமிடம் நரகம் தான். அது சுட்டெரிக்கும் தீக்கிடங்காகும். (101 :6-11)
இவ்வாறு சூரா பாத்திஹாவில் அமைந்துள்ள ரப், அர்ரஹ்மான், அர்ரஹீம் மற்றும் மாலிக் ஆகிய நான்கு அழகிய திருப்பெயர்கள் அல்லாஹ்வின் மகத்துவத்தை அறிவிக்கின்றன. அருளாளனும் அன்புடையோனுமாகிய அல்லாஹ் இவ்வுலகின் ரப்புல் ஆலமீனாகவும், முடிவு நாள் மற்றும் தீர்ப்பு நாளின் மாலிக் ஆகவும், நிர்வாக மற்றும் செயல் ரீதியிலும் செயல்படுவதை அறிகிறோம். இத்தகைய மகத்துவமிக்க அல்லாஹ்வின் திருப்பெயர்களைக் கொண்டு அப்துர் ரப் (படைத்துப் பாதுகாப்பவனின் அடிமை) அப்துர் ரஹ்மான் (அருளாளனின் அடிமை), ஹபீபுர் ரஹ்மான் (அருளாளனின் நேசர்), அப்துர் ரஹீம் (அன்பாளனின் அடிமை) மற்றும் அப்துல் மாலிக் (அதிபதியின் அடிமை) என்று ஆண் குழந்தைகளுக்குப் பெயரிட்டு மகிழ்கிறோம். அவர்களைக் கூப்பிடும் பொழுது முழுப்பெயரையும் சொல்லிக் கண்டிப்பாக அழைக்க வேண்டும். அல்லாஹ்வின் பெயரை மட்டும் சொல்லி அழைக்கக் கூடாது. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.
நன்றி : இனிய திசைகள் – அக்டோபர் 2011