தத்துவத் தேரோட்டம்

இலக்கியம் ஏமபல் தஜம்முல் முகம்மது கட்டுரைகள்

                        – ஏம்பல் தஜம்முல் முஹம்மது  

  ‘ஞானத்தின் மீதான காதல்’ என்று பொருள்படும் phislosophys எனும் கிரேக்கச் சொல்லில் இருந்து லத்தீன், பழங்கால ஃபிரெஞ்ச், இடைக்கால ஆங்கிலம் ஆகிய மொழிகளின் வழியே சென்று சிறுசிறு மாற்றங்கள் பெற்று, இன்று தத்துவத்தைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லாக philosophys எனும் சொல் விளங்கி வருகிறது. அறிவுஜீவிகள் தங்களுடைய சிந்தனைத் திறம், செயல் திறம் முதலிய கருவிகளைக் கொண்டு இடைவிடாது முயற்சி செய்து எய்தப் பெறுவதுதான் இந்த ‘ஞானக் காதல்’ என்று இதற்குச் சொற்பொருள் விளக்கம் செய்வர்.

   சமயம் / மார்க்கம் என்பது நம்பிக்கைகளை முதன்மையாகக் கொண்டதாகவும், தத்துவம் என்பது அந்த நம்பிக்கைகளை ஊடுறுவிப் பார்த்து உண்மையான ஞானத்தைக் கண்டுணரத் தூண்டுவதாகவும் உள்ளன.

   மனிதனைச் சிந்தனையாளனாக, நீதிமானாக, ஒழுக்க சீலனாகப் பற்பல சிகரங்களை நோக்கி செலுத்துகிற சிறப்பு தத்துவத்திற்கு உள்ளது. தத்துவங்கள் அரிய சாதனைகளின் அகத்தூண்டுதலாகவும் அமைந்துள்ள கிரேக்க நாட்டின் எதன்ஸ் நகரில் ஏற்பட்ட பொற்கால விடியலாகப் போற்றப்படும் இந்தத் தத்துவம் விடா முயற்சிகளின் காரணமாக வெளிப்படும் அறிவின் ஞானத்தின் உதயமாக மதிக்கப்படுகிறது.

   எந்த ஒரு தத்துவம் அரிய ஆன்மிக விளைவுகளை அல்லது பெரிய மறுமலர்ச்சிகளை ஏற்படுத்துகிறதோ அதைத் ‘தத்துவஞானியின் சித்து மணிக்கல் – philosopher’s stone’ என்று தத்துவ உலகம் கூறும். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நிலைநாட்டிய ஏக இறைத்தத்துவத்தை விட இதற்கு ஆக மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக வேறென்ன இருக்க முடியும்?

   தத்துவச் சிந்தனை என்பது உலக வரலாற்றில் பண்டைய கீர்த்திப் பிரதாபம் மிக்க கிரேக்க நாட்டிலிருந்தே கிரணங்களை வீசத் தொடங்குகிறது. உலக வரலாற்றை வரலாற்றாசிரியர்கள் கி.மு. கி.பி. என்று பிரிப்பது போலத் தத்துவ வரலாற்றை சாக்ரட்டீஸுக்கு முன், சாக்ரட்டீஸுக்குப் பின் என்று இரண்டாகப் பிரிக்கின்றனர். இதிலிருந்தே  தத்துவ உலகில் சாக்ரட்டீஸின் ஆளுமை எத்தகையது என்று எளிதில் அறியலாம்.

   சாக்ரட்டீஸின் காலமும் இவருக்குப் பிந்தைய காலமும் மனிதனையும் அவனுடைய வாழ்வையும் ஆன்மிகத் தொலைநோக்கோடு மையப்படுத்திய மகத்தான சிந்தனைகளை முன்வைத்தவையாகும். சாக்ரட்டீஸைப் போன்ற தத்துவ ஞானிகளின் வினாக்கள் எளியவை; விவாதங்களோ நீண்டவை; நுட்பமானவை பாமர மக்களால் புரிந்து கொள்ள முடியாத அளவுக்குச் சிக்கலானவையாக ஆகிவிடக் கூடியவை. பல வகையிலும் சிந்திக்க வைப்பவை.

   பொதுவாகத் தத்துவஞானிகள் தனிமை விரும்பிகளாக மக்கள் தொடர்பு குறைந்தவர்களாக இருப்பர். அதற்குக் காரண, காரிய அவசியமும் உண்டு. ஆனால் சாக்ரட்டீஸோ மக்கள் செல்வாக்கு மிக்கவர்; எந்த நேரமும் இளைஞர்கள் புடைசூழ இருந்தவர்; இவர் மீது பேரார்வம் கொண்டு பின்பற்றிய பிளேட்டோ, இவருடைய உண்மையான (வினா, விடை அமைப்பில்) பிற்காலத்தில் பதிவு செய்தவர்.

   சாக்ரட்டீஸைப் பின்பற்றித் தம்முடைய தத்துவங்களையும் நாடக பாணியிலான உரையாடல்களாக எழுதியவர் பிளேட்டோவின் ‘குடியரசு’ என்ற நூலில் மக்களை ஆட்சி செய்ய வருபவர்களுக்கென்று தனியாக ஒரு கல்வி முறையைக் கூறியுள்ளார். அதன்படித் ‘தத்துவம் தெரிந்த அரசர்கள் (philosophes kings) உருவாக வேண்டும்’ என்பது இவர் கருத்து பிளேட்டோவின் மாணவரும் பேரரசர் அலெக்ஸாண்டரின் ஆசிரியருமான அரிஸ்டாட்டில், பல்வேறு தத்துவங்களை ஒருங்கிணைத்துப் பொதுமைப்படுத்தி வழங்கியதில் சிறந்தவர் என்கிறது வரலாறு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *