வாழ்கின்ற நாட்டிற்கு வளம் சேர்ப்போம். சமூக ஒற்றுமைக்கு பலம் சேர்ப்போம். மனித நேயம் காப்போம். மத நல்லிணக்கம் வளர்ப்போம் என்ற முழக்கத்தோடு இறையருளால் கடந்த கால் நூற்றாண்டுகளாக சிங்கப்பூரில் சமூக அரசியல் பொது வாழ்வில் ஆர்ப்பாட்டமின்றி அமைதியாக தொண்டாற்றி வருபவர் மு. ஜஹாங்கீர்.
சிங்கப்பூர் நாணயமாற்று வணிகர் சங்கத்தின் தலைவர். சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர். புதிய நிலா திங்களிதழின் நிறுவனர். இப்படி பல்வேறு பொறுப்புகளையும் வகித்து திறம்பட செயலாற்றி வரும் இவர்.
ஜஹாங்கிருடன் நடைபெற்ற நேர்கானலிலிருந்து
கேள்வி : சிங்கப்பூரில் அண்மையில் நடந்து முடிந்த பொதுத்தேர்தல் ஆளும் மக்கள் செயல் கட்சிக்கு ஒரு பின்னடைவு என்கிறார்களே, உண்மையா?
பதில் : தவறான கருத்து. பல்லாண்டு காலமாக நல்லாட்சி புரிந்து வரும் மக்கள் செயல்கட்சி வேட்பாளர்களை பெரும்பாலான தொகுதிகளில் அதிகப்படியான வாக்கு எண்ணிக்கையில் வெற்றிபெறச் செய்திருக்கும் சிங்கப்பூர் குடிமக்கள் – நாடளுமன்றத்தில் மாற்று கருத்துக்களும் ஒலிக்க வேண்டும் என்ற தூரநோக்கில் அல்ஜுனிட் குழுத்தொகுதியில் எதிர் கட்சி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பி இருக்கிறார்கள். இது நாட்டு மக்களின் அரசியல் விவேகத் தன்மையைக் காட்டுவதாக அரசியல் ஆய்வாளர்கள் கருத்துரைக்கிறார்கள்.
கேள்வி : புதிய அமைச்சரவை இந்தியர் பங்கு …?
பதில் : துணைப்பிரதமராக திரு. தர்மன் ஷண்முகரத்னம் அவர்களும், வெளியுறவு மற்றும் சட்ட அமைச்சராக திரு கா. ஷண்முகம் அவர்களும், பிரதமர் அலுவலக அமைச்சராக திரு.எஸ்.ஈஸ்வரன் அவர்களும் உள்ளனர். மேலும் சில இந்திய இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆட்சியில் பங்கேற்றுள்ளனர்.
கேள்வி : உலகத் தமிழர்களின் பார்வையில், குறிப்பாக எங்கள் தமிழகத் தமிழர்களின் பார்வையில் சிங்கப்பூர் நிலைமை என்ன?
பதில் : தமிழும் – தமிழுணர்வும் உலகில் பலரை வாழவைத்துக் கொண்டிருக்க தமிழை வாழவைப்பவர்களாக சிங்கப்பூர்த் தமிழர்கள் திகழ்ந்துகொண்டிருக்கிறார்கள். ஒரு காலத்தில் நமது தமிழகத்தில் சிங்பப்பூர் சட்டை – சேலை பற்றி பெருமையாகப் பேசிக்கொள்வார்கள். ஆனால் இன்றோ முன்னாள் அதிபர் அப்துல் கலாமில் தொடங்கி, கேப்டன் விஜய்காந்த் வரை சிங்கப்பூர் மக்களின் தூய்மை பற்றி – அரசியல் தலைவர்களின் நேர்மை பற்றிப் புகழாரம் சூட்டி வருகிறார்கள்.
கேள்வி : சிறுபான்மை மக்களின் முன்னேற்றத்துக்கு உதவும் வாரியங்கள் எதுவும் உள்ளனவா?
பதில் : இந்தியர்களின் கல்வி மற்றும் வாழ்வியல் முன்னேற்றத்துக்கான அமைப்பாக ‘சிண்டா’ என்றழைக்கப்படும் ‘சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுக் கழகமு’ம் முஸ்லிம்களின் சமயம் மற்றும் சமூக முன்னேற்றத்துக்கு வழிகாட்டும் அமைப்பாக ‘முயிஸ்’ என்றழைக்கப்படும் ‘இஸ்லாமிய சமய மன்றமு’ம், இந்துக்களின் ஆன்மிகப் பணிகளுக்கு உதவும் அமைப்பாக ‘இந்து அறக்கட்டளை வாரியமு’ம் ஆக்கப் பூர்வமான பணிகளைச் செய்து வருகின்றன.
கேள்வி : சிங்கப்பூரின் சமய நல்லிணக்கம் – இன- மொழி நல்லிணக்கம் பற்றி சொல்லிங்களேன் …
பதில் : சமயம் – இனம் – மொழி உள்ளிட்ட அனைத்துப் பிரிவினைகளையும் புறந்தள்ளி வைத்துவிட்டு, சட்ட ஒழுங்கு, சுத்தம், நாட்டுப்பற்று இவற்றையே முன்னிறுத்தும் பிசிறில்லாத கட்டுப்பாடான ஜனநாயகத்துக்கு சிங்கப்பூரே உலகில் முன்னுதாரணம். இதில் யாருக்கும் கருத்து வேறுபாட்டுக்கே இடமில்லை.
கேள்வி : சிங்கப்பூரில் வாழும் தமிழ் முஸ்லிம்கள் பற்றி …?
பதில் : தமிழக வேர்களைக் கொண்ட பல தலைமுறையாக வாழ்வோரும் – சமீபத்தில் குடிபுகுந்த இளைய தலைமுறையினரும் எந்த கருத்து வேறுபாடுகளுமில்லாமல் இணைந்து – இழைந்து வாழும் சமுதாயம் சிங்கையின் தமிழ் முஸ்லிம் சமுதாயம். பிற இனத்தவர்களோடு ஒப்பிடும் போது இந்த இழைவின் தரம் மிகவும் மேம்பட்டதாக இருக்கிறது. தமிழ் முஸ்லிம்கள் நிர்வாகம் செய்யும் பள்ளிவாசல்கள் ‘முஸ்லிம் சமய மன்றமான ‘மூயிஸ்’ –ன் உள்ளடக்கமாக இருந்தாலும், சமய வழிமுறைகளில் தங்கள் பாரம்பரியப் பழக்கவழக்கங்கள், பண்பாட்டு விழுமியங்களை முழுக்கக் கடைப்பிடிக்கும் முழுமையான சமுதாயமாக இருக்கிறது.
தொழிற்கல்வி கற்று நல்ல வேலைகளில் இருக்கும் பட்டதாரிப் பிள்ளைகள், வாரந்தோறும் முஸ்லிம் பள்ளிவாசல்களில் ஏற்பாடு செய்யும் மார்க்க சொற்பொழிவு கூட்டங்களுக்கு நல்ல வரவேற்வு இருப்பதுடன், பயன்களும் பெருமளவில் உணரப்படுகின்றன. தொழில்துறைகளில் முந்தைய காலத்துடன் ஒப்பிடும்போது கொஞ்சம் பின் தங்கியிருந்தாலும் கல்வியில் தோன்றியுள்ள வளர்ச்சி அந்தப் பின்னடைவை ஓரளவுக்குச் சரிக்கட்டுகிறது எனலாம். சர்வதேச அளவில் பரந்துகிடக்கிற பொருளாதார – கலாசார நலிவுகளின் தாக்கத்தால் அனைத்து மக்களின் குடும்ப உறவுகள் அதிர்வுகளுக்குள்ளாகியிருப்பது நிஜம்தான்.
முஸ்லிம் திருமணங்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அதே நேரத்தில் மணமுறிவுகளும் ஏறுமுகத்தில் இருக்கின்றன. இந்த சரிவினைத் தடுத்து நிறுத்த சமூக அமைப்புக்கள் முயற்சி செய்கின்றன. இந்திய சமூக அமைப்புக்கள் ஒன்றிணைந்து ‘இந்திய முஸ்லிம் பேரவை’ என்ற கூட்டமைப்பினை உருவாக்கி சிங்கப்பூரின் முன்னணி அறநிறுவனமான ‘ஜாமியா சிங்கப்பூர்’ அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டு செயல்பட்டு வருகிறது. சமூக அமைப்புக்களும் பள்ளிவாசல்களும் பிள்ளைகளுக்கு மார்க்கக் கல்வி கொடுப்பதில் முன்னுரிமை கொடுத்துச் செயல்படுகின்றன. பெரும்பாலான பள்ளிவாசல்களில் குடும்ப ஆலோசனைகளும் கொடுக்கப்படுகின்றன.
கேள்வி : தமிழ் முஸ்லிம்களின் சமூகப் பங்களிப்பு பற்றி விரிவாகக் கூறினீர்கள். அரசியல் பங்களிப்பு எப்படி உள்ளது ?
பதில் : மிகக் குறைவாகவே உள்ளது. தொழில், வியாபாரம், மார்க்கம், குடும்பம் என்ற பழக்கப்பட்ட தளங்களில் செயல்பட்டாலே போதும் என்ற அணுகுமுறை இருக்கிறது. இது நமது முன்னேற்றத்துக்கு ஒரு தடைக்கல் என்பதே என் சொந்தக் கருத்து.
கேள்வி : வாழ்க்கை செலவினங்கள், வருமானம் ?
பதில் : உலகமயமாக்கல் காரணமாக உலக அளவில் காணப்படும் பணவீக்கத்தின் எதிரொலி சிங்கப்பூரிலும் இருக்கவே இருக்கிறது. வருமானத்தில் அதற்கேற்ப உயர்வு இல்லை. ஏற்கெனவே ‘வளர்ந்த’ நாடான சிங்கப்பூரில் அதன் தாக்கம் இன்னும் சற்றுக் கூடுதலாகவே இருப்பதாகக் கொள்ளலாம். ஆனால், வளரும் நாடுகளில் உள்ள பதுக்கல், கள்ளச்சந்தை, செயற்கை விலையேற்றம், கலப்படம் போன்ற இடர்பாடுகள் இங்கு இல்லை.
கேள்வி : தமிழ் முஸ்லிம் பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம் எந்த அளவுக்குப் பாதுகாக்கப்படுகிறது ?
பதில் : சென்ற மே மாதம் 29- ஆம் நாள் நாகூர் மரபுடைமை நிலையத்தை தேசிய நினைவுச் சின்னமாக சிங்கப்பூர் அதிபர் மேதகு எஸ்.ஆர். நாதன் அவர்கள் அர்ப்பணித்தார். தமிழ் முஸ்லிம்களின் வாழ்வியல் தடயங்கள், வரலாற்று ஆவணங்கள் அங்கு மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. சிங்கப்பூரில் தமிழ்மொழி வழி கல்வி வழங்கிய ஒரே உயர்நிலைப்பள்ளியான ‘உமறுப்புலவர்’ உயர்நிலைப்பள்ளி’ யை நிறுவியவர்கள் கடையநல்லூர் முஸ்லிம் லீகைச் சேர்ந்த அ.நா. மொய்தீன் அவர்கள் தலைமையில் இயங்கிய குழுவினர்தான். தென்கிழக்கு ஆசியாவின் ஒரே தமிழ்மொழிக் கல்வி நிலையம் அது. ஆங்கில மொழி வழிக்கல்வி நாட்டில் அமுல் படுத்தப்பட்ட பிறகு அக்கல்வி நிலையம் இப்போது உமறுப்புலவர் தமிழ்மொழி மையமாக சிறந்த முறையில் நிர்வகிக்கப்படுகிறது. உமறுப்புலவர் அறநிதியம் இன்றளவும் ஏழை மாணவர்களுக்கு வட்டியில்லாக் கடன் வழங்கி (ஆண்டுக்கு சுமார் 18 ஆயிரம் சிங்கப்பூர் வெள்ளி) வழங்கி கல்விப் பணியாற்றி வருகிறது. தமிழ் முஸ்லிம்கள் தங்கள் மார்க்கக் கடமைகளை முழுமையான அளவில் நிறைவேற்றுவதற்கு அனைத்து வசதிகளும் உள்ளன. ஏற்கெனவே பள்ளிவாசல்கள், மதரசாக்கள் பற்றி சொல்லியிருக்கிறேன்.
நன்றி : பச்சை ரோஜா, ஆகஸ்ட் 2011