இஸ்லாமியத் தமிழிலக்கிய 3-ஆம் மாநில மாநாடு
அக்டோபர் 02, 2011, தென்காசி
மாநாட்டுத் தீர்மானங்கள்
1. இறையருளால்… இஸ்லாமிய இலக்கியத் கழகத்தின் சார்பில் வருங்கால இலக்கியப் படைப்பாளர்களை வளர்தெடுக்கும் நோக்கத்தில் செப்டம்பர் 13, அக்டோபர் 1 ஆகிய தினங்களில் குற்றாலம் செய்யது மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வெற்றிகரமாக நடைபெற்ற ‘படைப்பிலக்கியப் பயிலரங்கு’ போல், இனி தொடர்ந்து பல்துறை சார்ந்த பயிலரங்குகள், கருத்தரங்குகள் இலக்கிய நிகழ்வுககள் நடத்தப்படும்.
2. இஸ்லாமிய இலக்கியப் படைப்பாளிகள், எழுத்தாளர்களைச் சமுதாயத்தில் அதிகப்படுத்துவதற்கான முயற்சியாக, அவர்கள் தம் படைப்புகள் வெளிவருவதற்கான வாய்ப்பாக ‘இலக்கிய இதழ்’ ஒன்று விரைவில் ஆரம்பிக்கப்படும்.
3. இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் நற்பணிகளைப் பரவலாக்கவும், தமிழகம் முழுக்க இலக்கிய ஆர்வலர்களை ஒருங்கிணைக்கவும் இனி மாவட்டம் தோறும் இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் கிளைகள் ஆரம்பிக்கப்படும். அதன் முதல் துவக்கமாக வருகின்ற டிசம்பர் மாதம் இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் தேனி மாவட்டக் கிளை துவக்கப்படும்.
4. மேலை நாடுகளில் தமிழ் இஸ்லாமிய இலக்கியப் பணியை முன்னெடுத்துச் செல்ல, ஓமன் சுல்தானியத்தின் தலைநகர் மஸ்கட்டில் இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் கிளை துவக்கப்பட்டது போல, இனி வளைகுடா மற்றும் கிழக்காசிய நாடுகளில் கிளைகள் ஆரம்பிக்க முயற்சிகள் எடுக்கப்படும்.
5. இஸ்லாமிய இலக்கியக் கழகத்திற்கு சென்னையில் அலுவலகம் ஒன்று நிறுவப்படும். அதில் நூலகத்துடன் ஆய்வாளர்கள், வெளியூர் இலக்கியவாதிகள் தங்கும் வசதியும் செய்துத் தரப்படும்.
6. தமிழக முஸ்லிம்களின் கலை, கலாச்சாரப் பண்பாடு, வரலாறுகளைத் திரட்ட குழுக்கள் அமைக்கப்பட்டு, முறையாகப் பதிவு செய்யப்பட்டு வெளியிட முயற்சிகள் எடுக்கப்படும்.
7. ஆங்கிலம், உருது, அரபு மொழிகளில் வெளிவந்துள்ள இஸ்லாமிய சமயம், சமூகம், வரலாறு சார்ந்த சமகால சிறந்த நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிட முயற்சிகள் எடுக்கப்படும்.
8. குலாம் காதிறு நாவலரின் ‘ஆரிபு நாயகம்’இ பீரப்பாவின் ‘திருநெறி நீதம்’ போன்ற இலக்கியங்களின் புதுப்பதிப்புகள் வெளியிடப்பட்டது போல, பழம்பெரும் இஸ்லாமிய இலக்கியங்கள் தொடர்ந்து வெளியிடப்படும்.
9. அரிதான இஸ்லாமியத் தமிழ் நூல்களைச் சேகரித்துப் பாதுகாத்து வருவோரிடம் இருந்து, உரிய பொருள் கொடுத்து அந்நூற்களை வாங்கி ஆய்வுலகம் பயன்பெற வழிவகை செய்யப்படும்.
10. இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் 7வது சர்வதேச மாநாட்டில் இஸ்லாமியப் படைப்பாளிகளின் சிறந்த சிறுகதைகள், கவிதைகள் தொகுத்து வெளியிடப்பட்டது போல, ஒவ்வொரு ஆண்டும் வெளிவரும் முஸ்லிம் சமூகம் சார்ந்த சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் தொகுத்து வெளியிடப்படும்.
11. ஆண்டுதோறும் வெளிவரும் முஸ்லிம் சமூகம் சார்ந்த சிறந்த சிறுகதைத் தொகுதி, கவிதைத் தொகுதி, கட்டுரைத் தொகுதி, நாவல் ஆகியன தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்படும்.
12. இஸ்லாமிய இலக்கிய உலகில் பெண்களின் பங்கேற்பினை அதிகரிக்க முயற்சிகள் எடுக்கப்படும்.
13. தமிழக முஸ்லிம்களின் கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கு மகத்தானப் பணியாற்றி வரும் இஸ்லாமிய இலக்கியக் கழகம், தொடர்ந்து அப்பணிகளை ஆற்றிட ‘சமுதாய நலப்பணிக்குழு’ ஒன்று விரைவில் ஆரம்பிக்கப்படும்.
14. கேரளாவில் 7 மருத்துவக் கல்லூரிகள், ஆந்திராவில் 5 மருத்துவக் கல்லூரிகள், கர்நாடகாவில் 4 மருத்துவக் கல்லூரிகள் முஸ்லிம்களால் நடத்தப்படும் போது, தமிழகத்தில் முஸ்லிம்களால் நடத்தப்படும் மருத்துவக் கல்லூரி ஒன்று மருந்துக்குக்கூட இல்லாத நிலையில், தமிழகத்தில் மருத்துவக் கல்லூரி ஆரம்பிப்பதற்குப் பெருமக்கள் எடுத்துவரும் மகத்தான முயற்சிக்கு இஸ்லாமிய இலக்கியக் கழகம் தனது முழுமையான ஆதரவை நல்கும்.
15. இளைய தலைமுறையினரிடம் தமிழ் கற்கும் ஆர்வத்தை அதிகரிக்க +2 தேர்வில் உள்ள தமிழ் மதிப்பெண்ணையும் மருத்துவம், பொறியியல் மற்றும் இதர உயர்கல்விக்கான தகுதி நிர்ணயத்தில் சேர்க்கவும்; உயர்கல்வி அனைத்திலும் தமிழைக் கட்டாயப் பாடமாக்கவும் முயற்சிகள் எடுக்க கல்வித் துறையை இஸ்லாமிய இலக்கியக் கழகம் கேட்டுக் கொள்கிறது.
பொதுச் செயலாளர்