எழுதுகோல் !
( பொற்கிழிக் கவிஞர் மு. ஹிதாயத்துல்லா, இளையான்குடி )
- எழுதுகோல் !
கண்களால்
உழவு செய்வது
காதல் !
- காகிதங்களில்
உழவு செய்வது …
எழுதுகோல் !
- நிர்வாண வெள்ளைக்கு
எழுத்து ஆடை அணிவிப்பது
எழுதுகோலே !
- யார் மூப்பு அடைந்தாலும்
எழுதுகோலுக்கு மூப்பில்லை !
- எழுதுகோல் …
சமுதாயத்தைப்
புரட்டிப்போடும் …
நெம்புகோல் !
- இதற்கு
எல்லா மொழியும்
தெரியும் !
ஆனால் …………………
பேசத்தெரியாது !
- அதே சமயம்
ஜம்பமாய் பேசும் வாய்களை
மூடச்செய்யும் வல்லமை
எழுதுகோலுக்கு உண்டு !
- எழுதுகோல் …
தெய்வம் ஒன்றென
உரத்துச் சொல்லும்
ஒற்றை நாவு !
- மனிதர் நாவெல்லாம்
உணவின் ருசியைச்
சொல்லும் !
- ஆனால் …
எழுதுகோலின்
நாவு மட்டும் தான் …
ஏழைகளின் …
பசியையும் சொல்லும் !
- எழுதுகோல்
நம்சட்டைப் பையில்
இருக்கும் …
ஒற்றை மினாரா !
- இது மின்னுவது …
ஒளி விளக்காய் அல்ல;
மொழி விளக்கால் !
- செடியில் , கொடியில் ..
பூ பூக்கும் !
முள்ளில் பூ பூக்குமா … ?
பூக்கும் !
பேனா முள்ளில்
எழுத்து மலர்கள் …
பூக்கிறதே !
- உதிரும் உறவுகளின் மத்தியில்
உதிராத உறவு
எழுதுகோலே !
- சங்கையானவர்களே
எழுதுகோலின்
மூடியைத் திறக்கிற போதே
பொய்களுக்கு ……………
காய்ச்சல் வரவேண்டும் !
- என் எழுதுகோல்
மலடு அல்ல
சமுதாய நலன்களைச் சொல்ல
எப்போதும் கர்ப்பமாயிருக்கும் pen
- என் எழுதுகோல் …
ஒரு மாதிரி
வேறு எந்த மையை
ஊற்றினாலும் …
ஏற்காது ! எழுதாது !
ஹக்கான
உண்மையைத் தவிர !
- பாரதி
கண்ணம்மாவிடம் …
உன்னைக் கரம்பிடித்தேன்
வாழ்க்கை
ஒளி மயமானதடி – என்றான் !
நான் சொல்வேன்
இந்த pen- ஐக் கரம் பிடித்தேன்
பிரபலம் ஆனேன் என்று !
- மாவீரன் திப்புவின்
எழுதுகோல்
அந்த சிருங்கேரி மடத்தோடும்
சினேகம் வளர்த்தது !
மதம் தாண்டியும்
மனிதநேயம் விதைத்தது !
- எட்டயபுரக் கவிச்சிங்கம்
நம் பாரதியின் எழுதுகோல்
நாமிருக்கும் நாடு …
நமதென்ற வெப்பத்தை
உணர்த்தியது !
- புரட்சிக்கவி பாரதிதாசனின்
எழுதுகோல்
தமிழ் உணர்வின் வாசலைத்
திறந்து வைத்தது !
- சங்கைக்குரிய
கவிக்கோ, கவிமாமணியார்
எழுதுகோல்கள்
இறவாத இலக்கியங்களைத்
தந்து கொண்டிருக்கிறது !
- ஆகவே …
எழுதுகோல் என்பது
வேறு எதுவும் அல்ல ;
- நம் தோழமை !
தீமைகளைக் கிழிக்கும்
கூர்மை ஆயுதம் யென்பேன் !
என்ன … சரிதானே !
நன்றி !
( சென்னை இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் மூன்றாவது மாநில மாநாடு செம்டம்பர் 30, அக்டோபர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் குற்றாலம் மற்றும் தென்காசியில் நடைபெற்றது.
02.10.2011 அன்று தென்காசி இசக்கி திருமண மண்டபத்தில் நடைபெற்ற கவியரங்கத்தில் எழுதுகோல் என்னும் தலைப்பில் இளையான்குடி தமிழ்மாமணி கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ் ( மு. சண்முகம் ) அவர்கள் வாசித்த கவிதை )
கவிஞரின் தொடர்பு எண் : 99763 72229