ஹஜ் – மனித வாழ்க்கையின் சம்பூரணம்

இலக்கியம் கவிதைகள் (All) பொற்கிழிக் கவிஞர் மு ஹிதாய‌த்துல்லா

 

ஒரு கருப்பைக்கு

நன்றி சொல்லச் செல்லும்

தொப்பூள் கொடிகளின் பயணமே …

ஹஜ் !

கடலைத்தேடி

நதிகள் தான் நடந்து போகும் !

ஆனால் …

மனிதக் கடலே திரண்டு – புனித

மக்காவை துல்ஹஜ் மாதத்தில்

காணப் போகிறதே … !

அது தான் ஹஜ் !

மொழிகள் பலவானாலும்

முகங்கள் சங்கமிக்கிறதே …! – அந்த

முஹப்பத்தான திருநாள் தான் …

ஹஜ் பெருநாள் !

அங்கே

ஸலாம்கள் ததும்பி வழியும் !

சமத்துவம் கைகுலுக்கும் !

சகோதரத்துவம் …

பாசக் குடை விரிக்கும் !

சந்திக்கும் இதழ்களிலெல்லாம் …

புன்னகையே – விரியும் !

அந்தச் சுவனத்தை

நினைவு காட்டும்

மக்காவும் மதீனாவும்

உலகம் இளைப்பாறும் … நிழலோ ?

வெள்ளைப் பறவைகளின்

வேடந்தாங்கலோ

கோடிக்கணக்கான

கண்கள் பார்த்தும்

கொஞ்சமும் குறையாத … அழகோ ?

இஸ்லாம் அங்கிருந்து

ஏற்றுமதியானபோது,

ஓடோடிப் போய்

இதயங்கள் வாங்கிக்

கொண்டன இலவசமாகவே …!

அதுநாள் வரை மனிதன்

தனக்காகச் சுவாசித்ததை

அன்று முதல் …

சங்கையான தீனுக்கும்

சேர்த்தே சுவாசித்தான் !

சேர்த்தே சுவாசித்தார்கள் !

வசதியானவர்களுக்கே

ஹஜ் வாய்ப்பு ! – அதுவும்

வல்ல அல்லாஹ் (ஜல்)

தான் நாடியபேர்களுக்கு

மாத்திரமே, அந்த நல்ல

வாய்ப்பை அருள்கிறான் !

ஆனால்

ஏழைகளுக்கு …?

இதுபற்றி உயர்த்தாத

புருவங்கள் இல்லை !

ஒவ்வொருவெள்ளிக் கிழமை

ஜும ஆத் தொழுகை

ஏழைகளுக்கான – ஹஜ்!

இது உலக ரட்சகனான

வல்ல அல்லாஹ் (ஜல்)

ஏழை எளியவர்களுக்காகச்

சும்மாவே தந்த அருட்கொடை !

தொழும் இடம் வேறுபட்டாலும்

இதயங்கள் நோக்குவது என்னவோ …

அந்த கிப்லாவைத் தானே !

மொத்தத்தில் ஹஜ் என்பது,

வெறும் சடங்கல்ல;- அது

மனித வாழ்க்கையின் சம்பூரணம் !

வாழ்ந்த வாழ்வின் அர்த்தம் !

அழகு என்றும் சொல்லலாம் !

இந்த வாய்ப்பு கிடைத்தவர்களே

பாக்கியவான்கள் !

வல்ல அல்லாஹ்வின் பாச முகவரிகள் !

நம் கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின்

நேசத்திற்குரிய பேரீத்தம் கனிகள் !

அல்ஹம்துலில்லாஹ் !

கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ்

நன்றி :

நர்கிஸ்

நவம்பர் 2011

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *