முத்துப்பேட்டை ”தமிழ் மாமணியுடன்” ஒரு நேர் காணல்..

இலக்கியம் நோ்காணல்கள்

முத்துப்பேட்டை ஹெச்.எம்.ஆர் என்று அழைக்கப்படும் மற்றும் தமிழ் மாமணி விருது பெற்றவருமான ஜனாப்.ஹெச். முஹம்மது ரஸீஸ்கான் அவர்களை முத்துப்பேட்டை.காம் இணையத்தளத்திற்காக நேர் காணல் செய்தோம்.

8.7.1936 ல் பிறந்த இவர் எழுத்துலகில் மிக்க அனுபவமிக்கவர், மேடை நாடகம், பேச்சுத்திறன் ஆகிய திறமைகள் தன்னகத்தே கொண்டவர். கல்வி பண்பாட்டு பயிற்சி கூடம் என்ற வின்னர்ஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளியின் நிர்வாகி, தாளாளர், மற்றும் பள்ளியின் முதல்வர்.

1953 ஆம் ஆண்டு முதல் இவருடைய பேச்சானது பல மேடைகளில் ஒலித்தது. எம்.ஏ வரலாற்றில் முதுகலை பட்டப்படிப்பும், ஆசிரியர் பயிற்சியும் முடித்து உள்ளார். முத்துப்பேட்டையில் உள்ள புதுப்பள்ளியில் முஹல்லா நிர்வாகத்தில் 18 ஆண்டுகள் செயலாளர் பதவியும், நான்கு ஆண்டுகள் தலைவர் பதவியும் வகித்துள்ளார். திருவாரூர் மாவட்ட ரீதியிலான சமாதான கமிட்டியின் நிரந்தர உறுப்பினராகவும் உள்ளார்.
 
1956 ல், சென்னை – கல்மண்டபத்தில் நடைபெற்ற மிலாத் விழா மாநாட்டில் அறிஞர் அண்ணா அவர்கள் உரையாற்றும் போது, ”இஸ்லாத்தை சரியாக புரிந்துக்கொள்ளாத முஸ்லிம் வாலிபர்களுக்கு திமுகவில் இடம் இல்லை” என்றும் ”இஸ்லாம் எதை சொல்கிறாதோ அதை திமுக செய்கிறது” என்று உரையாற்றினார். அறிஞர் அண்ணாவின் பேச்சினை அடிப்படையாக கொண்டு ”அண்ணாவின் அறிவுரையால் தெளிவு பெறுவார்களா..! இஸ்லாமிய இளைஞர்கள்” என்ற கட்டுரையினை ”அலைஓசை” என்ற பத்திரிகையில் எழுதி உள்ளார்.

1958 ல் இந்தியா – பாகிஸ்தான் சிறிய பிரச்சனை ஒன்று ஆரம்பித்த சமயத்தில் அங்கு செல்ல ஆயத்தமாகுமாறு சென்னையில் அறிவிப்பு ஒன்று செய்தார்கள். அப்போது இவர் மணிவிளக்கு பத்திரிகையில் உதவி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார் தன்னுடைய பெயரினையும் சேர்த்துக்கொள்ளுமாறு அங்குள்ளவர்களிடம் கூறினார். தவிர்க்க முடியாத சில காரணங்களால் அந்த நிகழ்வானது நடைபெற வில்லை.  
27.11.99 மற்றும் 28.11.99 அன்று முத்துப்பேட்டை புதுத்தெருவில் நடத்த இஸ்லாமியத்தமிழ் இலக்கிய கழகத்தின் 6 வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் ”தமிழ் மாமணி” என்ற விருதினை சென்னை உயர்நீதி மன்ற முன்னாள் நீதிபதியான ஜனாப்.அப்துல் ஹாதி அவர்கள் முத்துப்பேட்டை ஹெச்.எம்.ஆருக்கு வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் சான்றோர்கள், ஆன்றோர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.

தமிழ் திருக்குர்ஆனின் தமிழாக்கத்தினை ஜனாப்.ஏ.கே.அப்துல் ஹமீது பாக்கவி மௌலானா – சென்னை, அவர்கள் (இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் தலைவரான ஏ.கே.அப்துல் ஸமது அவர்களின் தகப்பனார் ஆவார்) மொழியாக்கம் செய்த போது வசதி வாய்ப்பு இல்லாத பட்சத்தில் ஹைதராபாத் நிஜாம் அவர்கள் பொருள் உதவி செய்து உள்ளார். அந்த தருணத்தில் மணிவிளக்கு பத்திரிகையில் உதவி ஆசிரியராக இவர் பணிபுரிந்து உள்ளார்.

1960 ல் சென்னையில் மூன்று நாட்கள் நடைபெற்ற (தமிழ் நாட்டில் நடைபெற்ற முதல் மாநாடு) இந்தியன் யூனியன் முஸ்லிம் மாநில மாநாட்டிலும் கலந்துக்கொண்டு பேசியுள்ளாhர். ஜனாப். சுலைமான் செட், கண்ணியமிகு காயிதே மில்லத் இஸ்மாயில் ஸாகிப், மற்றும் பல மார்க்க அறிஞர்களுடன் இவருக்கு தொடர்பு ஏற்பட்டது.

1961 ல் திட்டச்சேரி அருகேயுள்ள பிராக்கிராமம் என்ற ஊரில் இவருக்கு திருமணம் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கண்ணியமிகு காயிதே மில்லத் இஸ்மாயில் ஸாகிப், வடகரை.அபுபக்கர், திருப்பத்தூர். நூர் முஹம்மது, வலங்கைமான். அப்துல்லா, இசைமணி எம்.எம்.யூசுப் போன்ற பல முக்கிய பிரமுகர்கள் கலந்துக்கொண்டனர்.

திட்டச்சேரியில் நூலகம் ஒன்று திறப்பதற்காக, நிதி வசூல் பெற வேண்டி ”மூன்று திலகங்கள்” என்ற நாடகமானது இவரது கதை வசனத்தில் அரங்கேறியது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. 

புதுமைகோன் – என்ற புனைப்பெயரில் விநோதன், விநோதினி, ஆனந்த போதினி, தாரா, தாருல் இஸ்லாம், குண்டூசி போன்ற பத்திரிகைகளில் எழுதி உள்ளார். இவர் எழுதிய முதல் நூல் திறவுகோல், இரண்டாவது நூல் கீதம், மூன்றாவது நூல் வாழ்வின் இளமை, நான்காவதாக அல்குர்ஆனில் அல்லாஹ் முதல் பாகம் போன்ற நூல்களை எழுதி உள்ளார்.

கல்கேணித்தெருவில் உள்ள அவரது இல்லத்தில் ”நல்வாழ்வு” என்ற பதிப்பகத்தினை நடத்திக்கொண்டு இருந்தார்.அந்த பதிப்பகத்திலிருந்து, ”என்னை.. ஏன்..அழைத்தாய்” புதுக்கவிதை நடையிலும், அன்பு, அறிவு, பொறுமை ஆகியவற்றினை அடிப்டையாகக்கொண்டு தத்துவ ரீதியாக எழுதப்பட்ட நூலுக்கு மதிப்புரையினை ஜனாப். எம்.ஆர்.அப்துல் ரஹீம் அவர்களும், திரு.ஒளவை.நடராசன் அவர்களும் எழுதி உள்ளனர்.

இந்த நூலானது அமெரிக்க – வாஷிங்டன் நூலகத்திலும், சிங்கப்பூர் நூலகத்திலும் இடம் பெற்றுள்ளது. மற்றும் தமிழக அரசால் அங்கீகாரம் பெற்று இவருடைய பல நூல்கள் மாவட்ட நூலகங்களில் இடம் பெற்றுள்ளது.

நர்கிஸ் என்ற பத்திரிகையில், ”கடைசி பக்க சிந்தனை” என்ற தலைப்பில் பத்தாண்டுகளாக இவர் எழுதிய கட்டுரையானது நூலாகவும் இடம் வெளி வந்துள்ளது.”நெஞ்சு பொறுக்குதில்லேயே…” என்ற இவருடைய இஸ்லாமிய பெண்களை பற்றிய தொடர் கட்டுரையானது ”பிறை” பத்திரிகையில் வெளிவந்தது, அதுவும் நூலாக வெளி வந்தது. 

”இஸ்லாம் ஒப்புக்கொள்ளப்பட்ட மார்க்கம்” என்ற தலைப்பில் பல உரைகளை பல ஊர்களில் நிகழ்த்தி உள்ளார். திருக்குர்ஆன் வசனங்களை அடிப்படையாக வைத்து, ஹதீஸை ஆதாரமாகக்கொண்டு, உலகில் இன்று விஞ்ஞான ரீதியான அரசியல் ரீதியான வரலாற்று ரீதியான உண்மைகளை ஒப்பு நோக்கி தொடர்புப்படுத்தி ஆதார பூர்வமாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமை ஜூம்மா உரையினை முத்துப்பேட்டை மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள ஊர்களிலும் நடத்தி உள்ளார். ஊட்டி வானொலியிலும் இவருடைய பேச்சானது ஒலிப்பரப்பாகி உள்ளது.  

திருவாரூர் மாவட்டம் – நன்னிலத்தை பிறப்பிடமாகக்கொண்ட, இயக்குனர் திலகம் கே. பாலச்சந்தர் அவர்கள் 1948 ல் முத்துப்பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில் ஓராண்டு காலம் மட்டும் பணியாற்றினார். அப்போது ஹெச்.எம்.ஆர் அவர்கள் ஏழாம் வகுப்பினை திரு.பாலச்சந்தரிடம் படித்தார். கட்டுப்பாடு உள்ள மாணாக்கர்களை வளர்க்க வேண்டும் என்பதனை குறிக்கோளாக கொண்டு. அதே உயர்நிலைப்பள்ளியில் 30 ஆண்டுகள் பணி புரிந்தார் ஹெச்.எம்.ஆர் அவர்கள். 1994ல் அப்பள்ளியிலிருந்து பணி ஓய்வு பெற்றார்.

1992 ல் வின்னர்ஸ் பள்ளியினை நிறுவினார். இப்பள்ளியினை பட்டுக்கோட்டை முன்னாள் துணை நீதிபதி திரு. கனக சபாபதி அவர்கள் திறந்து வைத்தார்கள். இப்பள்ளியின் குறிக்கோள் தேசிய ஒருமைப்பாடு, சமய நல்லிணக்கம் அடிப்படையாகக்கொண்டது. இப்பள்ளியின் சார்பு கிளைகளானது, நாச்சிக்குளம், தில்லைவிளாகம் கோயிலடி, சித்தமல்லி, இடும்பாவனம், சென்னை, மற்றும் ஊட்டியிலும் உள்ளன.

தேசிய ஒருமைப்பாட்டினை வலியுறுத்தி ஒவ்வொரு சதந்திரதன்றும் ”சமாதான சகவாழ்வு கொள்கை” என்ற நோக்கில் கடந்த 22 ஆண்டுகளாக பாதயாத்திரை நடைபெற்று வருகிறது. பல மாவட்ட ஆட்சித்தலைவர்கள் இந்த பாதயாத்திரையினை தலைமையெற்று நடத்தி பாராட்டியும் பேசியுள்ளார்கள். குறிப்பாக இவருக்கு ”இராஜ கலைஞன்” என்ற விருதினை திருச்சி முன்னாள் மாவட்ட ஆட்சியாளர் அவர்கள் வழங்கியுள்ளார்.

இவரது இலக்கிய சேவையினையும், சமுதாய சேவையினையும் பாராட்டி பல அறிஞர் பெரு மக்கள் பாராட்டுகளை தெரிவித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். வயது முதிர்ந்தாலும் ஒரு இளைஞனைப்போல் இவர் செய்யும் தன்னார்வ சேவைகளை முத்துப்பேட்டை.காம் மனமுவர்ந்து பாராட்டுகிறது.
நேர் காணல் : அபு ஆஃப்ரின்      
 

தகவல் :

Rafeek Zakhariya,
Dubai,United Arab Emirates,
+971-50-3903736, +971-55-9765321,
najiraf@gmail.com, najiraf@yahoo.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *